19. பழமனாதியும் திருப்பழனமும்
என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
''மஹா தேவா, ஆதி அந்தமில்லாத அநாதி நாதனே, உனக்கு தெரியாததா நான் சொல்ல போகிறேன். ஒரு பழமொழி சொல்வார்களே, ''இந்தோ தந்துவிட்டேன் இவனை, என் பிள்ளையை, இனி இவனுக்கு நீயே அடைக்கலம் '' என்று. சரணாகதியின் உன்னத லக்ஷணம் அல்லவா இது. அதை அப்படியே இப்போது மனதார சொல்கிறோம். எங்களுக்கு உன்னைவிட்டால் வேறு யாரப்பா கதி? நீ படைத்தது அருளியது இந்த தேகம் இதை உன் திருப்பாத சேவைக்கே அர்ப்பணிக்கிறோம். நீ அளித்த எமது கரங்கள் உன்னைத் தொழுவதற்கன்றி வேறெதற்கும் பயன்படாது. நீ கொடுத்த இந்த கண்கள் உன்னைத்தவிர இரவும் பகலும் வேறெதையும் நாடாது.
நான் உன் உடைமை, நான் உன் அடிமை, உன் திருவடி பற்றி உனக்கே ஆட்பட்டோம். பரமேஸ்வரா, பராத்பரா, எனக்கு வேண்டுவதெல்லாம் நான் மேலே சொன்னதை செய்ய நீ அருளவேண்டும். உன் நினைவில், உன் பணியில், நான் சதா சர்வகாலமும் இந்நிலவுலகில் நீயே கதியென்று வாழும் வகையை நீ அருளவேண்டும், ஆம், அப்படி எமது விருப்பத்தை நீ பூர்த்தி பண்ணுவாயாகில், என்னைப்பொறுத்தவரை, சூரியன் மேற்கே உதித்தால் என்ன கிழக்கே உதித்தால் என்ன?
நந்திகேஸ்வரர் காலா காலமும் சிவனுக்கே தன்னை தொண்டனாக அர்பணித்துக்கொண்டு வாஹனமானவர். அவரை தரிசிக்காமல் எந்த சிவாலயத்திலும் சிவன் சன்னதி செல்ல இயலாது. எனது ஸப்தஸ்தான யாத்திரையில் ஒரு ஆலய தர்சனம் பற்றி சொல்கிறேன்.
ஸப்தஸ்தானம் க்ஷேத்ரங்களில் மிகவும் ஸ்வராஸ்யமான விஷயங்கள் கொண்ட ரெண்டாவது புண்யஸ்தலம் திருப்பழனம். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவை யாறுக்கே முதல் இடம்.
சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் பிரத்யேகமான அழகிய கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பூச்றிசொ றிதல் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவையாறிலிருந்து 3-4 கி.மீ. தூரத்தில் காவிரி ஆற்றின் வடகரை யில் உள்ள 50 கோவில்களில் ஒன்று திருப்பழனம் ஆபத் ஸஹாயர் ஆலயம். . 7ம் நூற்றாண்டில் அப்பர் எனும் திருநாவுக்கரச நாயனார் திங்களூர் வழியாக வந்து தரிசித்த பாடல் பெற்ற ஆயிரம் ஆண்டுகள் முந்தைய சிவ ஸ்தலம்'
“வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே'' - திருநாவுக்கரசர்.
ஸ்வயம்புவான ஆபத்சகாய நாதர் கிழக்கே பார்த்துக்கொண்டு அருள் பாலிக்கிறார். அம்மன் பெரியநாயகி. அழகு சொட்டும் வடிவம். ரெண்டு பிரகாரங்கள், மூன்று நிலை பழைய கோபுரம். கொடிமரம் இல்லை. நந்தி இங்கே முக்கியமானவர். திருப்பழனத்துக்கு பிரயாண புரி, கதலிவனம் என்றும் பெயர்கள் . வயல்களும், மரங்களும் சூழ்ந்த அமைதியான ஊர். முதலாம் ஆதித்த சோழன், பின்னர் பராந்தகன் ஆகியோரால் கட்டப்பட்ட அற்புத ஆலயம்.
உள்ளே நுழைந்ததும் கிழக்கு பக்கம் சப்தமாதா சந்நிதிகள் . தொடர்ந்து விநாயகர், வேணுகோபாலன் , சிவலிங்கங்கள் பல பெயர்களுடன் க்ஷேத்ர நாமங்களுடன். நடராஜ சபை. பைரவர் மற்றும் நவகிரஹங்கள்.
ஒரு காலத்தில் சுசரிதன் என்ற அப்பா அம்மா இல்லாத பிராமண பையனுக்கு காலம் முடிந்துவிட்டது. பையன் சிவபக்தன். திருப்பழனத்தில் சிவ தரிசனத்துக்கு வந்த பையன் ஒரு சத்திரத்தில் தங்குகையில் இரவில் கனவில் எமன் தோன்றி ''அடே பையா இன்னும் ஐந்து நாளில் உனக்கு மரணம் என்று சொல்ல, சுசரிதான் சிவனை தஞ்சம் அடைகிறான். அவனைப் பின் தொடர்ந்த யமனிடமிருந்து பையனையும் பையன் உயிரையும் காத்து அருளியதால் சிவனுக்கு ஆபத் ஸஹாய நாதர் என்று பேர். மார்கண்டேயன் கதை போல் இருக்கிறது இல்லையா?
கௌசிக முனிவர் ஆஸ்ரமம் இங்கே இருந்தது. அவர் அசுரர்கள் கண்ணில் படாமல் அம்ருதத்தை இங்கே வைத்திருந்ததை அசுரர்கள் எப்படியோ கண்டுபிடித்து ஆக்கிரமிக்க, அவர்களை சிவன் காளி ஐயனார் ஆகியோர்க்கு கட்டளையிட்டு அழித்தார் என்று புராண கதை. கௌசிகர் அவர் காப்பாற்றி கொடுத்த அம்ருதத்தாலேயே ஸ்தாபித்த சிவன் என்பார்கள். இங்கே பௌர்ணமி காலத்தில் சந்திரன் முழு ஒளியும் ஸ்வாமிமேல் பொழிகிறது. அருகிலேயே திங்களூர் என்ற சந்திரன் அருள் பாலிக்கும் கோவில் இருக்கிறதே.
சிலாத முனிவர் மகளை நந்திகேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைக்க சிவனுக்கு எண்ணம் தோன்றி அந்த திருமணம் பிரமாதமாக நடக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டார். திருமண ஊர்வலம் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திலிருந்து துவங்கி, திருப்பழனம் வந்து, அங்கிருந்து திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லைத் தானம் ஆகிய ஏழு கிராமங்களை அடைந்து திரும்ப அங்கிருந்து திருவையாறு வந்தடையும். இவையே சப்தஸ்தான க்ஷேத்ரங்கள்.
நந்தி கல்யாணத்திற்கு நிறைய பழங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டதால் இது திருப்பழனம், கதலி வனம் என்ற பெயர் பெற்றது +
No comments:
Post a Comment