திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
36 இரு மாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
பன்னிரு ஆழ்வார்கள் ஒவ்வொருவருமே ஒருவிதத்தில் தனித்வம் கொண்ட சிறந்த விஷ்ணு பக்தர்கள் என்று தான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறேனே. அதில் ஒருவர் தான் விப்ரநாராயணர். இவர் யார் என்று யோசிக்கிறீர்களா? வேறுயாருமில்லை, நமது தொண்டரடிப்பொடியாழ்வார்.
ஒரு காலத்தில் நான் சிறு வயதில் நாகேஸ்வர ராவ் நடித்த விப்ர நாராயணா தெலுங்கு படத்தை தமிழில் பார்த்தேன். அப்போது என் மனதில் புகுந்தவர் நாகேஸ்வர ராவ் மேற்படி ஆழ்வார். சில படங்களுக்கு, பாத்திரங்களுக்கு அசைக்கமுடிய பொருத்தமானவர் நாகேஸ்வரராவ். இந்த ஆழ்வாரை எனக்கு தந்த நா. ரா.வுக்கு நன்றி.
ஒரு சிறு கிராமம். திருமண்டங்குடி என்று சோழ தேசத்தில், இன்றும் இருக்கிறது. அங்கு பிறந்தவர் மேற்படி ஆழ்வார். விஷ்ணு பக்தர். திவ்ய தேசங்கள் எல்லாவற்றுக்கும் செல்லலாமே என்று முதலில் ஸ்ரீ ரங்கம் வந்தவர் பிறகு அதை விட்டு வேறு எந்த ஒரு தேசத்துக்கும் போகவில்லை. அரங்கன் ஆலயம் அருகே ஒரு நந்தவனம் அமைத்தார். புஷ்பங்கள் வளர்த்து மாலை தொடுத்து ரங்க நாதனுக்கு மனதார சாற்றுவது ஒன்றே வேலை. பெரியாழ்வார் போலவே இவரும் பூமாலையோடு பாமாலை (பாசுரங்களும்) பாடி ரங்கனுக்கு அளித்தவர்.
அரங்கனை விட அவன் பக்தர்கள் மேன்மை வாய்ந்தவர்கள் . அவர்களுக்கு தொண்டு செய்வது தான் சிறந்தது என்று அறிந்தவர். ஜனசேவை ஜனார்தன சேவை , மக்கள் சேவை மகேசன் சேவை என்று புரிந்து கொண் டவர். அவர் பெயர் ''தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்'' என்று அமைந்தது புரிகிறது அல்லவா? சுந்தரர் சொன்ன ''தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' புரிகிறதா?
அச்சுதா அமரர் ஏறே என்று சொல்லும் இந்த ருசியை, ஆனந்தத்தை விட, எனக்கு இந்திரலோகத்திற்கே நீ அரசனாகிற தேவேந்திர பதவி கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம்'' என்று சொன்ன ஆழ்வார் இவர். ''பச்சை மா மலை போல் மேனி '' பாசுரம் தெரியாத அக்கால தமிழர்களே கிடையாது. நமது குழந்தைகளுக்கு இந்த மாதிரி அருமையான பாடல்கள் பாசுரங்களை நமக்கு நம் பெற்றோர் தாத்தா பாட்டியர் கற்றுக்கொடுத்தது போல் நாமும் கற்றுக் கொடுக்க வேண்டாமா? தவறு செய்கிறோமே.
ராமானுஜரை பார்த்து வணங்கி திருக்கோளூர் பெண்மணி ''அய்யா நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். நான் இந்த திருக்கோளூர் க்ஷேத்திரத்தில் வசிக்க ஆசைப்படுகிறேன். நான் அதற்குண்டான தகுதி பெறவில்லையே . தொண்டரடிப்பொடியார் போல பூ தொடுத்து ஒரு நாளாவது அரங்கனுக்கு அருளினேனா, பாசுரம் இயற்றி பாடினேனா. பூமாலை பாமாலை இருமாலைகளும் ஒரு நேரமாவது அளித்தவளாக இருந்தால் எனக்கும் பெருமையோடு இங்கே இடம் கேட்க உரிமை உண்டு. நான் என்ன செய்வேன்? சொல்லுங்கள்'' என்கிறாள்.
No comments:
Post a Comment