திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
44 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே
கம்சன் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா கடைசியில் சிங்கத்தின் குகைக்குள்ளேயே வெள்ளாடுகள் புகுந்து விட்டன. வேட்டை தான் இனி என்று ஆனந்தத்தில் கூத்தாடினான் கம்சன். அது சரி எதற்கு இந்த சந்தோஷம்?
ஓஹோ அவன் திட்டமிட்டப்படி அக்ரூரரை பிரிந்தவனத்துக்கு அனுப்பி கிருஷ்ணனையும் பலராமனையும் மதுராவுக்கு விருந்தாளிகளாக அழைத்தது வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கிருஷ்ணனுக்கு கம்சனின் அழைப்பா அல்லது கம்சன் மரணதேவதையை வரவழைத்துக் கொண்டானா. கிருஷ்ணனும் உள்ளூர மகிழ்ச்சியாக தான் இருந்தான். அவன் எதிர்பார்த்த வேளையும் நெருங்கிவிட்டதே. இனி கம்சனின் முடிவு ஒரு சில நாளில் என்பது கிருஷ்ணனுக்கு மட்டுமே தெரியும்
வரும் வழியில் மதுரா நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது எதற்கு? கம்சன் நடத்தப்போகும் தனுர் விழாவுக்கா, கண்ணனின் வரவுக்கா, கம்சனின் முடிவுக்கா? .
மதுரா நகர வீதிகள் பெரியவை, பிருந்தாவன வீதிகள் போல அமைதியானவை அல்ல. மக்கள் கூட்டமாக வியாபார, கேளிக்கைகளில் ஈடுபடுபவை. எங்கும் இனிப்பு தின்பண்டங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள், எல்லாமே விற்பனையாகிக் கொண்டிருந்தன.
கிருஷ்ணன் பலராமன் இருவருமே அவற்றை ரசித்துக் கொண்டே நடந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் நல்ல அரச போக உடை அணியவில்லை. சாதாரண கிராமிய உடையில் தான் இருந்தனர். இந்த இருவரின் பராக்கிரமம் அவர்களுக்கு முன்பே மதுராவில் சென்று மக்களை அடைந்து அவர்கள் ஆர்வமாக இந்த இருவரின் வரவை எதிர் நோக்கி இருந்தனர்.
எனக்கு தெரிந்து என் சிறிய வயதில் துணிவெளுக்கும் லாண்டரிகள் எங்கோ ஒன்றிரண்டு தான் இருந்தது. அவரவர் வீட்டிலேயே துணி தோய்த்து அதை அப்படியே அணிந்து கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். முக்கியமான இடங்களுக்கு, விழாக்களுக்கு செல்லும்போது அவற்றை இஸ்திரி என்று சொல்லும் சலவை மடிப்புக்கு சுருக்கமில்லாமல் தேய்த்துக் கொடுக்க கன்னியப்பனை தேடுவோம். வீட்டில் பெரிய வெண்கல இஸ்திரிப்பெட்டி வைத்திருந்து. கள்ளிப்பெட்டி அடுக்கி அதன் மேல் பெட்ஷீட் போட்டு இஸ்திரி செயது தருவான். அது தான் லாண்டிரி. வீட்டில் விசேஷம் என்றால் யாருடையதோ, எவருடைய புடைவை, வேஷ்டி சட்டை எல்லாம் ஒருநாள் ரெண்டு நாள் வாடகைக்கு விடுவார். வாடகை எட்டணா, ஒரு ரூபாவுக்கு மேல் தாண்டியதில்லை. அதுவே பெரிய அமௌன்ட். ''ஜாக்கிரதை கிழியாமல் கறைபடாமல் சீக்கிரம் கொண்டு தரவேண்டும்'' என்று பல முறை சொல்வான்.
கிருஷ்ணன் காலத்திலும் இது நடைமுறையில் இருந்தது போல் தோன்றுகிறது. கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் ஒரு வண்ணான் அழகிய வஸ்த்ரங்கள் தந்தார். அக்காலத்தில் ஆண்கள் மலர் மாலை அணிந்து தான் விழாக்களில் பங்கேற்பார்கள். சுதாமா என்ற ஒரு புஷ்பங்களை தொடுத்து மாலையாக கட்டி விற்கும் ஒரு கிருஷ்ண பக்தர் பரம சந்தோஷமாக இருந்தார். மாலா காரர் என்று அழைக்கப்பட்டவர்.
'
' ஆஹா கிருஷ்ணன் பிருந்தா வனத்திலிருந்து இங்கே மதுராவுக்கு வந்திருக்கிறாராமே அவரை பார்த்து அவருக்கு இந்த மாலைகளை அணிவிக்க வேண்டும் என்று ஓடினார். கிருஷ்ணனையும் பலராமனையும் கூட்டத்தில் தெருவில் அடையாளம் கண்டு கொண்ட சுதாமா அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கி அழகான, வாசனை மலர்கள் கொண்டு ஸ்பெஷலாக தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து தனது கையாலே கிருஷ்ணனுக்கும் பலராமானுக்கும் அணிவித்தார்.
ஒரு சின்ன விஷயம்..... மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் வாசத்தில் மயங்கி, அதன் மீது இச்சை கொள்ளக்கூடாது . அப்படி செய்தால் புனிதம் கெடும் என்பதற்காக. கோவிலில் பிரசாதங்கள் நைவேத்தியங்கள் அற்பணிக்கும்போது நைவேத்திய பாத்திரங்களை மூடி, தனது மூக்கையும் மூடிக்கொண்டு தான் கொண்டு சந்நிதிக்கு கொண்டுவருவது வழக்கம்
தனது இந்த சிறந்த மாலை படைப்பு கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம் என்று சுதாமா இவ்வாறு பூமாலைகளை அணிவித்ததை அக்ரூரர் பார்த்து மகிழ்ந்தார். கீதா பாஷ்யம் சொல்கிறது இதை. .
திருக்கோளூர் அம்மாள் ஒரு என்சைக்ளோபீடியா என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. அவளுக்கும் மேலே சொன்ன விஷயம் தெரியும். ஆகவே தான் ஸ்ரீ ராமானுஜரை பார்த்து '' சுவாமி, நான் மாலாகாரர் போல் பகவானுக்கு என்றாவது பூவையாவது கொடுத்தேனா, எவ்விதம் நான் திருக்கோளூரில் வசிக்க அருகதை யானவள்? என்று கேட்கிறாள்
No comments:
Post a Comment