Thursday, January 16, 2020

NOSTALGIA




                           
 வாழ்ந்த ஞாபகம்.  J K   SIVAN  

2020  வந்தாச்சு என்றால் என்ன அர்த்தம். 2019 போய்விட்டது. அதோடு  இன்னொரு வருஷ நிகழ்வுகளும்   மனதில் நினைவாக மாறிவிட்டது. இதுபோல்  80 வருஷ   நிகழ்வுகள்   நிழலாக,  நினைவாக  இருப்பதை எண்ணி  ஆச்சர்யமடைகிறேன். 

ஆஹா  சிரஞ்சீவிகள் எத்தனை யுகங்களை இப்படி நிகழ்வுகலை  எல்லாம்   மனதில் நினைவாக  வைத்திருப்பார்கள்?  ஹனுமான், விபீஷணன், அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், கிருபர், பரசுராமர் ..... அடேயப்பா.  எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கும் அவர்களுக்கு.   ரொம்ப  பெரிய  லைப்ரரி அவர்கள் மனசு இல்லையா?   இவர்களாவது எப்போதோ ஒரு சமயம் பிறந்து அதிலிருந்து சிரஞ்சீவிகள் ஆனவர்கள் . பிறப்பே இல்லாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணன் எப்படிப்பட்ட  ஞாபக காரன்.....!!   உலகமே, பிரபஞ்சமே  உருவாக்கியதிலிருந்து அவனுக்கு எல்லாமே ஞாபகத்தில் இருக்குமே...எவ்வளவு சந்தோஷத்தை அந்த நினைவுகள் கொடுக்கும். அதனால் தான் அவன் பரமானந்தனோ, பரந்தாமனோ?

பகவத் கீதையை  அர்ஜுனனிடம்  உபதேசிக்கும்போது  '' இதெல்லாம்  நான் உன்னிடம் சொல்வதைப் போலவே ஏற்கனவே  விவஸ்வானிடம் (சூரியனின்  தாத்தாவோ  கொள்ளுத் தாத்தாவோ , )  சொல்லி யிருக்கிறேன். அதை அவன் பல தலைமுறைகளுக்கு  இது  செல்லும்படி செய்தான்''.  என்றபோது  அர்ஜுனன் நம்பவில்லை  கிருஷ்ணனும் அவனும் ஏறக்குறைய ஒரே வயது போல் இருக்கிறது. இவன் எப்படி  பல யுகங்களுக்கு முன் இதை வேறொருவரிடம் சொல்லி இருக்க சாத்தியம் என்று சந்தேகித்தான். அப்போது கிருஷ்ணன் என்ன சொன்னார் :

''அர்ஜுனா  உனக்கு இந்த பிறவி ஒன்று மட்டுமல்ல  இதற்கு முன் பல பிறவி எடுத்தவன். அதெல்லாம் உனக்கு ஞாபகம் இல்லை, எனக்கு அந்த பிறவிகள் ஞாபகம் மறக்காதே. நான் உன்னை போல் பிறவி எடுப்பவன் இல்லை.   பிறப்பு இறப்பு அற்றவன்.    நிமித்த காரணமாக  வந்து போகிறவன்.  அதனால் எப்போது எது நேர்ந்தாலும் எனது ஞாபகத்திலில்லாமல் அது நகரமுடியாது'' என்கிறான். 

நாம்  அப்படி எல்லாம் ஆகமுடியாது. ஏதோ கொஞ்ச கால நினைவு இருக்கிறதே அதுவே எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறது. 

 குளிக்க   சிகப்பு  லைஃபாய்  lifebuoy  சோப்பை துண்டாக நறுக்கி அம்மா கொடுப்பதை  கிணற்றங்கரையில் குளிக்கும்போது  அதிகம் தண்ணீரில் கரைக்காமல்  உடம்பு  தேய்த்து விட்டு சோப் கட்டியை  அருகே தண்ணீர் படாமல் ஆடையில்லாமல்  தோய்க்கும் கல்லில் சிகப்பாக  வைப்போம்.   அருகே  துணி தோய்ப்பதற்கு  sunlight  சன்லைட் 501 சோப்பு துண்டு இருக்கும்.  சோப்புக் கட்டிக்கு  சவுக்காரம் என்று பெயர். அதன் அர்த்தம் இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை. 

  பல் தேய்க்க  பிரவுன் கலர்  காகித பொட்டலத்தில் நஞ்சங்கூடு  செங்கல் தூள் போல   சிகப்பு பொடி  இருக்கும்  அப்பா  அம்மாவுக்கு  1513 அல்லது இது போல் ஏதோ ஒரு நாலு நம்பர் போட்டு  வெள்ளை பவுடராக இருக்கும்  பல்பொடி.      நாக்கில் பட்டால் எரியும்  பயோரியா என்று அதற்கு பெயர். வெள்ளை காகித கவரில் வரும் 

குட்டி குட்டியாக  ஜெம் பிஸ்கட் தான்  எங்களது சிறந்த பக்ஷணம்.  சிகப்பு வெள்ளை நீலம்  கருப்பு பச்சை என்று சீரக  மிட்டாய் தான் வீட்டுக்கு வருபவர்கள் வாங்கி வருவார்கள். அரிசி பெப்பெர்மிண்ட் என்று சொல்வோம். 

எல்லோரிடமும் மான் மார்க்  umbrella  என்ற குடை உண்டு.  வெயிலுக்கும் மழைக்கும் குடை தான் பாதுகாப்பு.  சிலர் அதற்கு வெள்ளை உறை  போட்டு தைத்து வைத்திருப்பார்கள். எங்கள் அம்மா வழி  பெரியப்பாவிடம் அப்படி  வெள்ளை துணி உறை போட்ட குடை பார்த்திருக்கிறேன். 

கைக்கடிகாரம் வராத காலம்.   கோட்டு  அல்லது மொட்டை கழுத்து ஜிப்பாவில் பொத்தான்  சொருகி போட்டுக்   கொண்டு அதில் சங்கிலி நுழைத்து சங்கிலியின் இன்னொரு பக்கம் ரவுண்டாக ஒரு சுண்ணாம்பு டப்பா மாதிரி ஒரு கடிகாரம். அதற்கு பாக்கெட் கடிகாரம் என்று பெயர்.  அதை கோட்டுப்பையில், அல்லது சட்டையில் அதற்கென  சிறிதாக உள்ள  பையில் வைத்திருப்பவர்கள்  ரொம்ப பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் என்று அர்த்தம்.  மற்றவர்கள்  கோழிகளை, கோவில் மணிகளை, வெயில் நிழல்களை,  ரெயில் சத்தத்தை  வைத்து நேரம் அறிந்து கொள்பவர்கள்.  அல்லது  மணி பார்க்க வென்று ஒரு சில வீடுகளுக்கு ஓடி அவர்கள் வீட்டு சுவற்றில் டாண்  டாண்  என்று அடிக்கும் தாத்தா கடிகாரங்கள் சொல்லும் மணி.    கடிகாரத்தின் இக்கீழே  நீளமாக ஒரு  பெட்டியில்  அலாரம் தொங்கி டக் டக் என்று ஆடிக் கொண்டிருக்கும் அதில் மணி பார்ப்போம். 

எனக்கு  மணி பார்க்க தெரியாது.  பெரிய முள் சின்ன முள்  எதில் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு ஓடிவந்து வீட்டில் அப்பா  அம்மாவிடம் சொல்லி இருக்கிறேன். சில சமயம் அந்த வீட்டுக்கார மாமி வேலை எதுவும் இல்லாமலிருந்தால்   மணி  பார்த்து சொல்வதை வழி  எல்லாம் சொல்லிக்கொண்டே  ஓடி வந்து வீட்டில் சொல்வேன்.

நிறைய  வீடுகளில் போட்டோ  எடுத்தால் ஆயுசு குறைந்து விடும் என்று போட்டோ எடுத்துக் கொள்வதில்லை.  ஏதாவது குறிப்பிட்ட விசேஷ காலங்களில் பெரிய டப்பாவை மூன்று கால்  குச்சியின் மேல் அமர்த்தி தன்னையும் அந்த  பெட்டியையும்  கருப்பாக ஒரு  போர்வையில் நுழைந்து  போர்த்திக் கொண்டு ஒருவர்  எதிரே  அரைமணி நேரம் எல்லோரையும் சிலையாக அசையாமல் நிற்க சொல்லி போட்டோ எடுப்பார். பல வாரங்கள் கழித்து பழுப்பு நிற  வழவழ  அட்டைபோல் திக்காக  thick  காகிதத்தில் பெரியம்மா, பெரியப்பா, தாத்தா, பாட்டி, அப்பா, அத்தைகள் அவர்கள் மடியில் குழந்தைகள் காலடியில் நாங்கள் சிலர்  உட்கார்ந்த போட்டோ ஒன்று கொடுக்கும்போது ஆச்சர்யம் தாங்காது.  பெண்கள் புல்லாக்கு   காதோலை, கருகமணி, வழித்து வாரிய  எண்ணெய் தலை, வகிடு ஆரம்பத்தில் நெற்றி உச்சியில் நடு நெற்றியில் பெரிய காலணா சைஸ் குங்குமம். இழுத்து போர்த்திய  ஒம்பது கஜ  மடிசார் புடவை,  சிரிக்காத  முறைத்த முகம், முழங்கை வரை ரவிக்கை, கழுத்தில் கொஞ்சம் தெரியும் காசுமாலை பவழமாலை யோடு நிற்க, அவர்கள் முன் நாற்காலிகளில் தலைப்பாகை புருஷர்கள். கோட்டு , அதன்மேல் அங்கவஸ்திரம், பஞ்சகச்சம்,  காலில் கருப்பு பூட்ஸ், சிலர் கைத்தடி, சிலர் திண்டு மாதிரி புஸ்தகம். எப்போது படிப்பார்கள்? போட்டோவுக்காக.  சிலர் நெற்றியில் பட்டை பட்டை விபூதி, சிலர் நெற்றியில் கீர் சந்தனம். சிலர் பவ்யமாக கொஞ்சம் குனிந்தபடி மற்றவர்கள் கால்மேல் காலோடு விறைத்து காமிராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி.....  நான் சொன்ன பெண்மணிகள் அவரவர் கணவர் பின்னால்  குட்டையும் நெட்டையுமாக  நிற்பார்கள்.  மற்ற குழதைகள் உட்கார்ந்தவர் மாடிகளில் அல்லது தரையில் காலடியில் உட்கார்வோம். எங்கள் வீட்டில் இருந்த இப்படிப்பட்ட சில படங்கள் எங்கோ எப்படியோ தொலைந்து விட்டன. இப்போது எங்கே போய் அவர்களை, அந்த போட்டோக்களை தேடுவது?    இந்த selfy  காலத்தில் அதை நினைத்தால் வேடிக்கையாக இல்லை?

 விருந்தாளிகள்  உறவினர்கள்  வாசலில் குதிரை வண்டியில் வந்து இறங்குவார்கள்,  முன்னெச்சரிக்கை கிடையாது.  சிலர்  மாட்டு வண்டியில் வருவார்கள். சிலர் சொந்த வில்வண்டி வைத்திருந்தார்கள். ஒரு பெரிய கும்பலே  வண்டியில் வைக்கோல் பரப்பி அதன் மேல்   நீல சிகப்பு கருப்பு கோடுகள்  பட்டை பட்டையாக போட்ட ஜமுக்காளம் மேல் அமர்ந்து கையில் கூஜாவில் தண்ணீரோடு வந்து இறங்குவார்கள். 

கடையில் வாங்கி பக்ஷணம் சாப்பிடமுடியாது. கடைகள் கிடையாதே . எல்லோரும் வீட்டில் பக்ஷணம் பண்ணி விடுவார்கள்.  palmoil , refined  ஆயில் எல்லாம் தெரியாது. கடலை எண்ணையில் சுட்ட பக்ஷணங்கள். மிக்சி மாவு மெஷின் கிடையாது. வீட்டில் கல் இயந்திரத்தில் அரைத்த மாவு, கல்லுரலில் ஊறவைத்து அரைத்த  இட்டிலி, வடை,  அடை  யின் ருசியே   தனி.  இனி எங்கே இதெல்லாம் அனுபவிப்பேன்..

களிமண் அடுப்பின் மேல் வாணலி,  தோசைக்கல் வைத்து பிரவுன் கலரில் தடிமனாக  கையால் தட்டிய  அடை அது தனக்கு நடுவில் ஒரு சிறு குழி  வைத்துக்கொண்டு இருக்கும்.  அதன் வழியாக  எண்ணெய் விட்டு ரெண்டு பக்கமும் திருப்பி போட்டு சுடசுட  மொறு மொறு வென்று  வாழை ஏட்டில்  எதிரே  வந்து விழுந்ததும் அதன் மேல் சிவப்பாக  அம்மியில்  வீட்டிலே வறுத்து  அரைத்து பொடித்த    மிளகாய்ப்பொடி நல்லெண்ணையில் குளித்து அடைமேல்  பரவும். அதை சாப்பிட்ட நாக்கு  அடுத்ததற்கு காத்திருக்கும். விறகு  அடுப்பின் சூடு  அதிக நேரம் காக்க வைக்காது.  விறகை அடிக்கடி உள்ளே தள்ளி நெருப்பை கண்ட்ரோல் பண்ணுவது தனி சாமர்த்தியம். 

போதும் இத்துடன் இப்போதைக்கு 

   





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...