Monday, January 13, 2020

NATARAJA PATHTHU





 நடராஜ பத்து -- J.K. SIVAN

                 7.   எதை நினைத்து அழுவேன்?

நமக்கு எப்போது அழுகை வருகிறது? ஏதோ தாங்கமுடியாத துக்கம், உடல் வலி, எதிர்பார்த்து ஏமாற்றம், போன்ற சில மன அழுத்தங்கள் உண்டாகும்போது. அவை தரும் வருத்தத்தால்.
இது மட்டும் பதில் என்று சொன்னால் பாதி மார்க் தான். ஏதாவது தப்பு கிப்பு பண்ணிவிட்டு, நம் குறையை உணர்ந்து அதற்காக பின்னால் வருந்தும்போது வருகிறதே ஒரு அழுகை அது தான் என்று சொன்னால் கொஞ்சம் மதிப்பும் மார்க்கும் அதிகம் கொடுக்கலாம்.

ஒரு தூய பக்தரின் குமுறலை கேட்போமா?

நான்  எதற்கு  என்று  அழுவேன்?  ஒன்றா  இரண்டா?

''என்னைப் போய் பெற்றார்களே அருமையான சற்குணம் பொருந்திய என் தாய் தந்தையர்.  அதை நினைத்து அழுவேனா?

அறிவே கொஞ்சமும் இல்லாமல் அவதிப்படுகிறேனே அதற்காக ஒரு மூலையில் அமர்ந்து அழுவேனா?

அடே பிரம்ம தேவனே, எதற்காக வேலை மெனக்கெட்டு என்னைப் படைத்தாய் என்று அழுவேனா?

நிறைவேறாத ஆசைகள் ஒன்றா இரண்டா, எத்தனையோ என்னிடம், என் நெஞ்சின் அடிவாரத்தில் இருக்கிறதே, அதற்காக உருகி அழுவேனா?

என் போறாத காலம், நான் செய்த தீவினை, என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவேனா?

எதுவும் நடக்காதபடி என்னை அலைக்கழிக்கும் நான் செய்த பாப கர்ம வினையை உணர்ந்து அழுவதா, அது என்னை விட்டு விலகி, உன் மூலம் மோக்ஷம் கிடைக்காதா என்று ஏங்கி அழுவேனா?

ஏன் ஏன் ஏன் நான் பிறந்தேன் என்று   நினைத்து அழுவேனா?

அல்லது இவ்வளவு கெஞ்சியும் நீ வந்து அருள்புரியாதது ஏன் என்று அழுவேனா?

என் வறுமை, என் உடல் உபாதையில் வருந்தி அழுவேனா?

ஐயோ, இதுபோல் இன்னும் எத்தனை பிறவி வரப்போகிறது என்ற பயத்தில் அழுவேனா?
எனக்கு தெரியவிலையே. நீயே வந்து சொல்லேன்.

ஆடும் சிதம்பரேசா.. வா வந்து சொல்லப்பா. என்னப்பா, பொன்னப்பா.

நண்பர்களே,   மேலே சொன்னபடி  எல்லாம் நினைத்து அழும் பக்குவம் எனக்கு இனி இன்னும் வரவில்லையே   என்று நான் அழட்டுமா?

இப்படி  அழுவேனா  என்று  கதறியவர் ஒரு அற்புத சிவ பக்தர்.  சிறுமணவூர்  முனுசாமி முதலியார்... இவ்வாறு அருமையாக நமக்கும் அழ தோன்றும் வகையில் கனிந்து பாடலாய் வடித்திருக்கிறார்.  நடராஜ பத்து. பத்தே பத்து பதிகங்கள்.  அதில்  இதுவரை 7 பதிகங்கள்  படித்து அனுபவித்து விட்டோம்.    இந்த  7ம்  பதிகத்தை , அவர் இவ்வாறு வருந்தும் கெஞ்சும் பாடலை சுவை குன்றாமல் அவர் வார்த்தைகளிலேயே படித்து  அவரது பக்திச்  சுவையி நாமும் பங்கேற்போம்:

 இன்னும் மூன்று தான் இருக்கிறது இது நிறைவு பெற.  யாரேனும் ஒரு அன்பர்  இதை புத்தகமாக போட முன் வந்தால்  இந்த நடராஜ பத்து  சிறிய  புத்தகம் பலரிடம்  இலவசமாக  சென்றடையட்டும்.

''அன்னை தந்தைகள் எனை ஈன்றதற்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''

பல புராதன சிவன் கோவில்களை முடிந்த போதெல்லாம்  சென்று தரிசிக்கும் பாக்யம் அவ்வப்போது கிடைத்தால்  அதெல்லாம்   பற்றி   வழக்கம் போல் ''யாத்ரா விபரம்'' என்று எழுதும் வழக்கமும்  உண்டு.  INRU 

வேதபுரீஸ்வர் ஆலயம் சென்னையில் இருந்து 105 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து  33 கி.மீ. தூரத்தில்  செய்யாற்றின்  வட கரையில்  இருக்கிறது. புராண பெயர் திருவோத்தூர், திருவத்திபுரம் என்ற  பெயர்   பலகையில் காண்கிறது.  அவசியம்  தரிசிக்க வேண்டிய  ஒரு சிவன்  ஆலயம்.  திருவோத்துர் எங்கே இருக்கிறது  என்று கேட்காதீர்கள். உங்களை திருவொற்றியூருக்கு  அனுப்பிவிடுவார்கள்  செய்யாறு  என்று கேட்டுக்கொண்டு போனால் போதும். இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. “திரு” அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாகியிருக்கிறது.  சிவன் வேதபுரீஸ்வரர்.   அம்பாள்  பால குஜாம்பிகை.  திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம். 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராஹாரங்கள்.   நந்தி   சிவனைப்பார்க்கவில்லை.  முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி இருக்கிறார்.   தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை  சிவன்   ஓதுவிக்கும் போது  வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி  வாசலை பார்த்து திரும்பி இருப்பதாக ஐதீகம். சுயம்புலிங்கம்.  ஆவுடை சதுர வடிவமாக  இருப்பது வினோதம்.  சிவன்  வீரநடனம் புரிந்த ஸ்தலம். 


வெளிப் பிராகாரத்தில்  வடக்குப் பக்கம்   ஸ்தல விருக்ஷமான  பனைமரம்  ஓங்கி வளர்ந்துள்ளது.  உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண்பனை பெண்பனையாகுமாறு பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்..

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைமரங்களை வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண்பனைகளை பெண்பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். “திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்” என்று அருளியபோது அவை பெண்பனைகளாயினவாம். 

உள் பிராகாரத்தில்  விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர், நடராஜர், 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள் ஆகியோர்  சந்நிதி கொண்டுள்ளார்கள்.  பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசனம் செய்தால் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, சிதம்பரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய தலங்களைத் தரிசித்த பலனுண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தின் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது. மேலும் உட்பிராகாரத்தில் உயரமான பீடத்தில் அமைந்துள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

அம்மன் பாலகுஜாம்பிகைபிக்கு  தனி  சந்நிதி. தனி கோயில்.  சுற்றுப் பிராகாரம் உள்ளது. நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள் . ஆலயத்திற்கு வெளியே உள்ள செய்யாறு. கல்யாணகோடி தீர்த்தம்.  பழைய  சிவன் கோவில்களில்   சிவாலயத்துள்ளேயே  பெருமாள்  உண்டு.  இங்கே  ஆதிகேசவப்பெருமாள் சந்நிதி உள்ளது. 

முருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...