Thursday, January 16, 2020

MORAL STORY



 நாரதன் கவலை    J K  SIVAN 

யார்  கண்டுபிடித்ததோ  தெரியவில்லை.  அவருக்கு  ஆயிரம் நமஸ்காரம்.

கதை சொல்வதைக்  காட்டிலும்  கேட்பது ரொம்ப சுகானுபவம்.  குழந்தைகளும் கதைகளும்  பிரிக்க முடியாதவை. நாம்  எல்லோருமே கொஞ்சமாவது கதை கேட்டு வளர்ந்தவர்கள்.  நான் நிறையவே  கேட்டவன்   இதை சரியாக உபயோகித்து கொள்ளவேண்டியது நமது கடமை. ராமாயணம்  மஹாபாரதம், பாகவதம் இவைகளில் இல்லாத  நீதி கதைகளா. அடடா  பக்தவிஜயம் ஒன்றே போதுமே.   லக்ஷம் கதைகள் சொல்லலாமே.  என்னால் முடிந்தவரை நல்ல விஷயங்களை கதைகளில் புகட்டி அனுப்ப ரொம்ப  பிடிக்கும். இன்று ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

திரிலோக சஞ்சாரி  நாரத மகரிஷி நாராயணனையே  மூச்சாக  கொண்டவர். வழக்கம்போல்  பூமிக்கு விஜயம் செய்த ஸ்ரீ நாரத மகரிஷி  ஒருநாள் எங்கோ ஒரு   காட்டுப்பாதையில் செல்லும்போது   ஒரு  தாய்  பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.  பிறந்த  பன்றிக்குட்டி  நாரதரை பார்க்கிறது. அடுத்த கணமே  அது மரணமடை
கிறது. 

'' இந்த குட்டி நன்றாகத்தானே  பிறந்தது.  எதற்காக இப்படி என்னைப்  பார்த்ததும் இறந்தது?'' என்று  வருந்திய  நாரதர் போகும் வழியில்  இன்னொரு பிரசவத்தையும் காண்கிறார்.   ஆடு ஒன்று  குட்டி  அப்போது தான் குட்டி போட்டது  இந்த ஆட்டுக்குட்டி எப்படி இருக்கிறது என்று கவலையோடு பார்த்தார் நாரதர்.  பிறந்த அந்த ஆட்டுக்குட்டி நாரதரைப் பார்த்ததும் உடனே  இறந்து போகின்றது .    இதேபோல்  ஒரு  காராம்பசு கன்று ஒன்றும்  அவர்  பார்வை பட்டவுடன் அடுத்தகணம் மரணம் அடைகின்றது .

வைகுண்டம் திரும்பிய  நாரதர்   கவலையாக  இருப்பதை பார்த்த  நாராயணன்  

'' என்ன நாரதா உனக்கு ஏதோ கவலை போல் இருக்கிறதே? என்ன ஆச்சு சொல்?'' என்கிறார்.

'' நாராயணா  என்ன சொல்வேன்?  இந்த தடவை பூலோகம் சென்றபோது என் கண்ணில் பட்ட  மூன்று உயிர்கள் உடனே   இறந்து  விட்டன. நான் ஏதோ பாப கார்யம் செய்திருக்கிறேனோ?''

நாரதா,  “ போனது போகட்டும்  நீ மீண்டும் பூமிக்கு சென்று  மருத  நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனைப் போய்  பார்த்து விட்டு வா''  என்று அனுப்புகிறார்.

''ஸ்வாமீ , அங்கும்  என் பார்வை பட்டு  ஏதாவது துயர சம்பவம் நடந்துவிடாதே ?'' 

''வீண்  கவலைப்படாதே நாரதா  சொன்னதை செய் '' -    மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி மருத நாட்டுக்கு சென்றார். யார் கண்ணிலும் படாமல் அரண்மனைக்குள் அந்தப்புரம் செல்கிறார்.  மஹாராணிக்கு அப்போது தான்  பிரசவம் ஆகி  இளவரசன் சிரித்துக்கொண்டே பிறந்தான்
 நாரதரை பார்த்தான் .
அவன் மேல் பார்வை செல்லாமல் நாரதர் திரும்பிக் கொண்டார். 
நமது கதையில் பிறந்த குழந்தை கூட  பேசும்: அது  என்ன சொல்லிற்று?

''நமஸ்காரம்  நாரத மஹரிஷி ,  திரும்புங்கள். ஏன்  என்னை பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?  கொஞ்சம் என்னைப்  பாருங்கள் .  நான் உங்களுக்கு என்றும்  நன்றிக்கடன் பட்டவன் .  நான்  ஒரு பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட அந்த பிறவி முடிந்து  ஒரு  ஆட்டின் குட்டியாக மறுபிறப் பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வை அனுகிரஹத்தால்  ஒரு காராம்பசுவின் கன்றுக்குட்டியாக பிறந்தேன்.  அங்கும் என்னைத்தேடி வந்து என்னை இன்னும் உயர்ந்த பிறவி எடுக்க வைத்தீர்கள். இதோ உங்களின் திவ்ய கடாக்ஷத்தால் கடைசியில்  இப்போது ஒரு  ராஜகுமாரனாக  பிறந்திருக்கிறேன். 

உங்களது  அருள் பார்வையால்  நான் இந்த பூமியில்   ஒரு நல்ல அரசனாக  வாழ்ந்து குடி படைகளுக்கு  நல்லது செய்ய நீங்கள் தான் அருளவேண்டும்.''என்றது.

நாரதர்  ''ஸ்ரீமந் நாராயணா'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார். 

பல பிறவிகள் நாம் எடுப்பதன் காரணம்  நமது கர்ம வினைப்பயன்.  அரிது அரிது மானிடனாக பிறத்தல் அரிது என்றாள்  ஒளவைக்கிழவி.  இது தான் உயர்ந்த பிறவி.  மனத்தில் மாயை நம்மை அதன் வழியில் சுண்டி இழுக்கும்.   புலன்கள் வசம் சிக்காமல்  இந்த  அரிய  வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி எல்லோருக்கும் நம்மாலான உதவி செயது  இந்த பிறப்பின் மேன்மையை  உபயோகப்படுத்திக் கொள்வோம்.   இந்த சரீரம் எடுத்த  காரணமே பரோபகாரத்துக்கு தான்.  '' இதம் சரீரம் பரோபகாரம் '' இந்த ஒரு பிறவியில் தான் நாம்  எண்ணங்களை உணரமுடியும், பேச முடியும்,  பகவானை நினைத்து வணங்கமுடியும்.
எளிதில் கிட்டாத ஒரு சந்தர்ப்பம் இது.  இதை கேவலப்படுத்தி வாழ்ந்து  மறைந்து போகாமல்  பிறவியின் அருமையை உணர்ந்து மேன்மையான  வாழ்வு  வாழ்ந்து  மீண்டும் பிறக்கும் நிலை அற்றுப்போய்  பிறவித்துன்பத்திலிருந்து விடுபட்டு இறைவனைக்   கூடுவோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...