Saturday, January 11, 2020

KRISHNA VISITS




         '' வா கிருஷ்ணா  வா  இது உன் வீடு...J K SIVAN

கேரளாவில் வசிக்கும்  ஹிந்துக்களுக்கு பக்தி ஜாஸ்தி  என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.  இல்லாவிட்டால் குருவாயூரப்பனும்  ஐயப்பனும் உலக பிரசித்தி ஆகி இருக்க முடியுமா?

ஒரு கிருஷ்ண பக்தர்.  கிருஷ்ணப்ரியன் என்ற  பெயரை நாம்  அவருக்கு சூட்டிவிடுவோம்.  சுருக்கமாக  அவரது கிருஷ்ண பக்தியை பற்றி சொல்லவேண்டுமானால்  அவர் எங்கும், எதிலும் கிருஷ்ணனை பார்ப்பவர். அவனோடு பேசுபவர்.  அவர் வீட்டிலிருப்பவர்களே  அதை நம்பவில்லை.  ஊரில் உள்ளவர்கள் எப்படி நம்புவார்கள்? .  எல்லோருக்கும் அவர்  மறை கழண்டவர்,   ''லூஸ்''.  அவர் அதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.

கிருஷ்ணப்ரியனிடம்  நீங்கள் சாதாரணமாக  ''என்ன சார்  சௌக்கியமா?'' என்று கேட்டால்   ''ஆஹா  கிருஷ்ணன் என்னை சௌக்யமாக வைத்திருப்பதாக தான் எப்போதும் சொல்கிறான். நானும் அப்படி தான் இருக்கிறேன்'. நேற்று பேசும்போது கூட...........''.


 கேள்வி கேட்ட நீங்கள் அவர்  பதில்  சொல்லி முடிப்பதற்குள்  ஓடி இருப்பீர்கள். எப்போதும்  கிருஷ்ணன் பெருமை, அவன் அழகு, கம்பீரம், உதார குணம். பக்தர்களிடம் அபரிமிதமான வாத்சல்யம் , அவனுக்கு பண்ணுகிற பூஜை , நைவேத்தியம்,,அவன் பேசியவைகள் , , இதெல்லாம் பற்றி தான் பேசுவார். வேறு பேச்சு பேச தெரியாது.

இந்த பூமியில் இது போன்ற  பக்தர்கள் இருந்திருக்கிறார்கள்,  இன்னும்  இருக்கிறார்கள். 

சமீபத்தில்  கோலோகம் போய் சேர்ந்த  எனது நண்பர்  கிருஷ்ணா மாமி இப்படிப்  பட்ட ஒரு க்ருஷ்ண பக்தை. 

கிருஷ்ணப்ரியன்  ஒருநாள் மனைவியிடம் '' சகுந்தலா  ஒரு குட் நியூஸ்''  என்கிறார்.
அஸ்வாரஸ்யமாக   ''உம் ..  ''  என்றாள்  அவள். அது நியூஸ் இல்லை, இருந்தாலும் ''குட்''  இல்லை  என்று அவள் அபிப்ராயம்.  

''நாளைக்கு  காலைலே  கிருஷ்ணன் நம்ம வீட்டுக்கு வரேன்''  என்று சொன்னான் . ''சும்மா வரப்படாது. நீ சாப்பிடணும்''  என்று சொன்னேன்.'' சரி'' என்று சொல்லிவிட்டான்''
''நாளைக்கு  நீ  நல்லதா  ஒரு  சமையல் கிராண்ட் grand ஆ  பண்ணிடு.''
'' இன்னொண்ணு  என்ன  சொன்னான் தெரியுமா?  என்னை அவனே  நேரில் வந்து அவன்   கூட  வைகுண் டத்திற்கு அழைச்சுண்டு போகப்போறானாம் , சான்ஸ் கிடைச்சா  உடுவேனா?  சொல் '''

''பைத்தியம்  ரொம்ப முற்றி விட்டது'' என்று  முணுமுணுத்தாள்  சகுந்தலா.  கிருஷ்ணானாவது  நமது வீட்டுக்கு சாப்பிட வருவதாவது?''
''சரி ''  என்றாள் .
''கரெக்ட்டா   காலம்பற  பதினொண்ணுக்கு  சாப்பிட வருவானாம்'' ரெடி பண்ணிடு''
மறுநாள்  பொழுது விடிந்தது..
கிருஷ்ண ப்ரியனுக்கு  நிலை கொள்ளவில்லை.  நண்பர்களிடம் கூப்பிட்டு சொன்னார். பாதிபேர் கேட்காமலேயே  டெலிபோனை வைத்து விட்டார்கள்.  நேரில் கேட்டவர்கள்  நிற்காமல் வேகத்தை அதிகரி த்துச் சென்றார்கள். 

'சகுந்தலா சமைக்காமல் அவர் தான் விடமாட்டாரே .  பகவானே  என் புருஷனுக்கு  உடம்பு சீக்கிரமே குணமாகணும்''  என்று வேண்டிக்கொண்டே  சமைத்தாள் .

குட்டி போட்ட பூனையாக  கிருஷ்ண பிரியன்  பொழுது விடிந்ததிலிருந்தே  அங்குமிங்கும் அலைந்தார். வாசலில் பெருக்கி  கோலமிட செய்து,  கோலத்தில்   ''krishna welcome'' எழுதப்பட்டது.  , பூக்களை  மாவிலை தோரணங்களை  வாசலில் தொங்கவிட்டார்.  கதவு ஜன்னல் எல்லாம் துடைத்து  எங்கும்  கார்த்திகை  போல  தீபங்கள் ஏற்றி வைத்தார்.
 வாசலில்  சென்று அடிக்கடி  தெருவில் பார்த்துக்கொண்டே இருந்தவர்  ''அடியே சக்கு , கிருஷ்ணன் வந்துட்டான்.    தெருமுனையில் இருக்கான். சங்கு  ஊதறான் . கேக்கறது.  ஆரத்தி கரைச்சு கொண்டா.இதோ வந்துடுவான். சீக்கிரம்.''

''இதோ  வந்துட்டான்  வாசலில் நிற்கிறான்'' ஓடிப்போய்  செம்பில் ஜலம்  கொண்டுவந்து கோலத்தில் யாரோ நிற்பது போலவும்  அவரது  பாதங்களில் ஜலம்  விட்டு  அலம்புவது போலவும்  செய்தார்.  சகுந்தலா கண்ணுக்கோ மற்றவர் கண்ணுக்கோ  எவரும் தெரியாமல்  தெரியாத   இல்லாத ஆளுக்கு  ஆர்த்தி எடுத்தாள் .  கிருஷ்ண பிரியன் முகத்தில் பரம ஆனந்தம்.  

பாத பூஜை செய்த கிருஷ்ண பிரியன்  அப்படியே  வாசலில் சாஷ்டாங்கமாக  விழுந்து நமஸ்காரம் பண்ணினார். 

''வா கிருஷ்ணா  வா . சொன்னபடியே  வந்துட்டாயே '' சுவர் கடிகாரம்   காலை  11 மணி காட்டியது.
''உள்ளே வா கிருஷ்ணா.  கை பிடித்து  அழைத்துக் கொண்டு வந்தார். 

''கிருஷ்ணா,   என்ன  பார்க்கிறாய்.   ரொம்ப பழைய வீடு... ஆனா,  என் வீடு இல்லை இது.  உன் வீடு''   வா  கிழக்கு பார்த்து உட்காரு. முதலில் சாப்பிட்டுவிட்டு அப்புறம் தான் பேச்சு எல்லாம் . உனக்கு நேரமாயிட்டுது. பசிக்கும்.  சகுந்தலா நன்றாக சமைப்பாள் . உப்பு காரம் புளி  எல்லாம் சரியாக இருக்கிறதா சொல். ஏதாவது வேண்டுமானால் கேள் ''

ஆசனத்தில்  கோலம் போட்டு அமரவைத்தார்.  கமகமவென  மணக்கும்  ரோஜா மாலையை  கிருஷ்ண னுக்கு  சாற்றினார்.  மாலை  எதிரே தரையில் விழுந்ததை தான் சகுந்தலா பார்த்தாள் .
எதிரே  நுனி வாழை இலை . அதில் ஜலம்  தெளித்து பரிமாறினார்.

சகுந்தலாவிற்கு இந்த  நாடகம் புதிதாக இருந்தது.  இது பைத்தியத்தின் உச்ச கட்டமோ  என்று நினைத்தாள் என்ன செய்யமுடியும்?

''கிருஷ்ணா  நிதானமாக  சாப்பிடு என்ன அவசரம் உனக்கு.  அதோ பார்  பச்சைமிளகாயை கடித்து விட்டாயே. இந்தா குளிர்ந்த ஜலம்  குடி. நாக்கு எரியப்போகிறது''  பரிமாறினார் கிருஷ்ணப்ரியன்.
கிருஷ்ணன்  என்ன சொன்னானோ. அவருக்கு தான் கேட்டிருக்கும்.  அவர் பதில் சொன்னார். 

''கிருஷ்ணா  நீ  வந்தது எதற்கு  என்று எனக்கு  ஏற்கனவே  தெரியும்.  நீ தான் அழுத்தம் திருத்தமாக  நேற்றே  சொல்லிவிட்டாயே.  முதலில் சாப்பிடு. நான் ரெடி. 
இந்தா கையை அலம்பிக்கொள். நான் ஜலம் விடுகிறேன்.  உட்கார். தாம்பூலம் போட்டுக்கொள் '' 
தாம்பூல தட்டை ஆசனத்தின் அருகே  நகர்த்தினார் கிருஷ்ணப்ரியன்.

கால் மணி நேரம் ஏதேதோ பதில் சொல்லுவது போல்  பேசினார். நடுநடுவே  சிரிப்பு, முகமலர்ச்சி.
கடைசியில்  கிருஷ்ணனிடம் பேசினது சகுந்தலாவுக்கு கேட்டது.மற்றவர்களும் கேட்டார்கள்.

''ஆமாம்  கிருஷ்ணா, நான்  ரெடியாக இருக்கிறேன்.  இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்குமா?  கிடைத்தும்  அதை கோட்டை விட நான் என்ன பைத்தியமா?''  இதோ புறப்படுகிறேன் உன்னோடு.வா  நாம்  போகலாம்''
 ஒரு நிமிஷம்  இரு..''
''சகுந்தலா,  நான் நேற்றே சொன்னேனே  ஞாபகம் இருக்கிறதா?  கிருஷ்ணன் என்னை தன்னோடு வைகுண்டத்துக்கு  கூப்பிட்டுக்கொண்டு போகப்போகிறான்  என்றேன். இதோ நான் அவனோடு கிளம்ப போகிறேன்.   வரட்டுமா?''''

தொப்பென்று  கிருஷ்ணப்ரியன் உடல் கீழே  விழுந்ததை முதலில் பார்த்தவள்  சகுந்தலா தான்.

ஆஹா  நாம் தான்  பைத்தியங்கள்.  

நமது கண்ணுக்கு கிருஷ்ணன் தெரியாததன்  காரணம் நாம்  அவனை லக்ஷியம் செய்யவில்லை, 
நம்பவில்லை. பக்த துக்காராம், ஞானதேவ், மாணிக்க வாசகர், வள்ளலார், ஜெயதேவர், சூர்தாஸ், சைதன்யர், ராமகிருஷ்ணர் போன்றவர்கள் தெய்வங்களை நேரில் பார்த்தவர்கள்.  

பைத்தியங்கள் மற்றவர்களை பைத்தியங்கள் என்பது சகஜமப்பா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...