Friday, January 24, 2020

SOOR SAGARAM



சூர் சாகரம்                              J.K SIVAN

                                                                   

                       நான் பேச நினைப்பதெல்லாம்....

கண்ணிருந்தும்  காட்சிகளை காணாதவர்கள் தான் குருடர்கள்.  சூர் தாஸ்  போன்றவர்கள் ஊனக்கண் இல்லாததால் எதையும் இழக்காமல் ஞானக்கண்ணால் சகலத்தையும் கண்டு களித்தவர்கள்  என்று தாராளமாக சொல்லலாம்.

 கிருஷ்ணன் ராதை மனதில் இருப்பதையெல்லாம் அவர்கள்  சொல்லாமலேயே  தன்னும்  அறிந்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது மூக்கின் மேல் விரல் மட்டும் இல்லை. கைகள் இரண்டையும் சிரத்தின் மேலேயும்  வைத்து வணங்க வைக்கிறது. 

சூர்தாஸ் மனதில் உருவான ஒரு காட்சியை விவரிக்கிறேன்..

அடர்ந்த சோலைகள், மரங்கள்,  மாலை வேளை , சூரியன் இனிமேல் தான்  மேற்கே மறையப் போகிறான்.  மந்த மாருதம் தொடர்ந்து வீசி  காற்றில் மலர்களின் நறுமணம், யமுனையின் குளிர்ச்சி  இரண்டையும் பக்குவமாக கலந்த தென்றல்.    

ரெண்டு இளசுகள். ஒன்றை ஒன்று அபரிமிதமாக நேசிப்பவர்கள்.  நண்பர்கள். ஒருவரின்றி மற்றவர் கிடையாது என்று மனங்களால்  இணைந்தவர்கள்.   ஒவ்வொரு நிமிஷமும்  ஒருவர்  மற்றவர்க்காகவே  வாழ்பவர்கள்.  நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை ரகம். 

இப்போது மாதிரி வாட்ஸாப், மெஸ்ஸெஞ்சர், sms, ஈமெயில்,  முகநூல் வசதிகள் இருந்தால் ஒன்றை ஒன்று காதாலேயே  கண்ணாலேயே  மொபைலில் விழுங்கிக்கொண்டு சதா சர்வகாலமும் உலகை மறந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து இருக்கும். அப்போது பல ஆயிர வருஷங்களுக்கு முன்பு,  குறிப்பாகத்தான் தன் மனதை மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டி இருந்தது.   பலபேர்  நடுவிலே,  ஒருவர் சொல்வது, ஜாடையாக குறிப்பிட்ட மற்றவருக்கு மட்டுமே  புரியவேண்டும்  சங்கேதமாக , சந்தேகமாக இல்லை.   மற்றவர்கள்  காதில் விழுந்தாலும்  சாதாரணமாக  ஏதாவதாக  தான்  இருக்கும். இப்படி  சம்பாஷிப்பது  எவ்வளவு கஷ்டம். அடேயப்பா. கண்ணனும் ராதையும் இதில் கை தேர்ந்த கில்லாடிகள் போல இருக்கிறது.

நிறைய பெண்கள் தோழிகள் சூழ ராதை கண்ணன் வீட்டு  கூடத்தில் அமர்ந்திருக்கிறாள். வாசல் கதவு திறந்து இருக்கிறது. எதிரே மாமரத்திற்கும்   புன்னைமரத்துக்கும் இடையிலே  உள்ள   செண்பக  மலர் மரத்தில் ஒரு க பொன்னிற கன்றுக்குட்டி  கட்டி வைத்திருக்கிறான்.  கண்ணன் என்றால் அதற்கு உயிர்.

அம்மா பசு சற்று தள்ளி   வீட்டின் பின்  ஓடும் ஓடையின் கரையில் காற்று வாங்கிக்கொண்டு வயிறு நிறைய தின்ற இளம் புல்லை அரைக்கண் மூடி சுவாரஸ்யமாக அசை போட்டுக்கொண்டிருக்கிறது. தலை ஆடும்போது அதன் கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது. வால் ஓய்வில்லாமல் அசைந்து ஈயை ஒட்டிக் கொண்டிருக் கிறது. காதுகளும் அதற்கேற்ப அசைகிறது.

கிருஷ்ணனின்  பார்வை ராதாவின் மேல் பதிந்தது. அவள் கண்கள்  அவன் மேலே  காந்தத்தில் சிக்கிய இரும்பாக நிலைத்திருந்தது.  மற்ற தோழிகளை ஜாடையாக  அவ்வப்போது  பார்த்தது. அவள் என்ன சொல்ல நினைத்தாளோ அதை அவள் கண்கள் சொல்ல அவன் பூரணமாக அதை வார்த்தைகளில்லாமலேயே புரிந்து கொண்டான்.

''இவர்கள் எதிரே இப்போது என்னோடு பேசாதே.''

புரிந்து கொண்ட கிருஷ்ணன் குறுக்கும் நெடுக்கும் ஏதோ வேலையாக இருப்பது போல் நடமாடினவன் உரக்க அனைவர் காதும் கேட்க சொன்னான்.

' அடாடா,  நேரமாகிக் கொண்டே போகிறதே. அந்த புங்க மரத்தின் கீழே காராம் பசு மடி நிறைய பாலோடு எனக்காக காத்துக்கொண்டிருக்கும். உடனே நேராக நான் அங்கே தான் போகவேண்டும். யார் என்னோடு வந்தாலும் வராவிட்டாலும் நான் போகவேண்டும் அங்கே. ஒருமணி நேரமாவது நான் அங்கே இருக்க வேண்டுமே.  பால்  கறக்க வேண்டும் , கன்றுக்குட்டியை  குளிப்பாட்ட வேண்டும்.

கையில் மணிக்கயிறு, பால் கறக்கும் நீளமான வாயகன்ற ஒரு காது வைத்த பாத்திரம் எல்லாம் எடுத்துக் கொண்ட கிருஷ்ணன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். போகுமுன் கண்கள் ஒரு வீச்சு ராதையை நோக்கி பாய்ந்தது.

தான் மட்டும் தனியாக அங்கே இல்லை என்பதையும் குறிப்பாக ராதைக்கு உணர்த்தினானே அது எப்படி தெரியுமா?

''அப்பா வேறு அங்கே பசுக்களை வழக்கம்போல் எண்ணி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பார்.  பொழுது சாய்வதற்குள்   எல்லாவற்றையும் திரும்பி அழைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் கவனமாக இருப்பார்; அவரை தொந்தரவு பண்ணாமல் யமுனைக்கரைக்கு பசுக்களை அழைத்துக் கொண்டு சென்று குளிப்பாட்டவேண்டும். எப்படியும் குறைந்தது ரெண்டு மணி நேரமாகவாவது அங்கே இருக்கவேண்டுமே...'

ராதாவுக்கு தான் கிருஷ்ணனை எங்கு எப்போது எப்படி எவ்வளவு நேரம் குறைந்தது தனியாக சந்திக்கலாம் என்ற செயதி போய் சேர்ந்தது.

பசுவுமில்லை.பாலுமில்லை. பால் கறக்கும் பாத்திரம் மரத்தில் தொங்கியது. நந்தகோபன் பசுக்களை எண்ண வில்லை,   அவர்  எங்கோ காட்டில் சுற்றிக்கொண்டிருந்தார்.....

கிருஷ்ணன் போன சில நிமிஷங்களில் .. 

''அடடா நான் மறந்தே போனேன். உடனே வீட்டுக்கு நீர் கொண்டு போக நினைத்தேன்.. உங்களோடு பேசிய சந்தோஷத்தில் மறந்துவிட்டது.... ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு ராதை வேகமாக வெளியேறினாள் ...

ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் ....... ஏனோ ராதா.........யார் தான் உன் அழகால் மயங்காதவரோ..... பாட்டு  நமது வீட்டில்   A  M  ராஜாவின் குரலில் ஒலிக்கிறது. அதுவே  நம்மை  இப்படி மயக்குகிறதே.  பிருந்தாவனத்தில் உண்மையாகவே  தனை மறந்து  ஜீவநாதம் கலந்து புல்லாங்குழலில்  தனது மகிழ்ச்சியை நாத வெள்ளமாக  காற்றில் கலக்கவிட்ட கண்ணனின் இசை எப்படி  எல்லோரின்  செவியிலும்  பாய்ந்து ... ''இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே''.... யாக ஆனந்தத்தை அள்ளி  தந்திருக்கும்!

வேணுகானம் கண்ணன் விரலில் ஆட, ராதா அபிநயம் பிடிக்கிறாள்.  நண்பர்களே  கண்ணன் ராதா இருவருமே  சிறுவர்கள்.  கண்ணனை விட  ராதா  பத்து வயது பெரியவள்.  இது   இரு பாச மலர்களின் நேச விளையாட்டு..கற்பனை  தடம் புரளக்கூடாது.

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...