நன்றி நண்பர்களே.
திரும்பி பார்த்தால் அதன் துவக்கத்தை அடைய எண்பது வருஷங்கள் ஆகும்... அவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.
நான் எனது நீண்ட பயணத்தில் கண்ட முகங்களை நினைவில் கொள்ள முடியவே முடியாது. அவை எத்தனையோ நிறமானவை. நான் உலகில் பல நாடுகள் சென்றவன். கடலிலும் தரையிலும் என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
ஆங்கிலம் என்னை பல மொழியாளர்களிடையே உரையாடலுக்கு உதவியது. நல்லிதயங்கள் எங்கும் உண்டு. பல தேசம், பல மொழிகள் அதை கட்டுப்படுத்தாது என அனுபவம் சொல்லி தருகிறது.
தனிமை நான் தேடாமல் எனக்கு வெளிநாடுகளில் நிறைய கிடைத்து, பார்த்தேன், படித்தேன், அறிந்தேன், சிந்தித்தேன், தெளிந்தேன், பேசுகிறேன், எழுதுகிறேன். பாடுகிறேன்,.. இறைவன் நல்லவர்களையே எனக்கு அடையாளம் காட்டுகிறான்.
பல நண்பர்கள் எனக்கு இப்போது, உள்நாடு, வெளிநாடு என்று கணக்கற்றவர்கள். லக்ஷக்கணக்கானவர் என்னை படிக்கும்போது என் மனதை அறிகிறார்கள். எண்ணம் தானே மனது, மனது தானே பேச்சும் எழுத்தும். பலர் மனதில் சங்கமமாகிறார்கள். எல்லோருக்கும் என்னை இயக்கும் கண்ணன் அருள் புரியட்டும். நிகழ்காலத்தை போலவே இனி வருங்காலமும் இனிதே கழியட்டும். நண்பர்கள் ஊக்குவிக்க புது பலம், புதிய சக்தி பெற்று நாட் காட்டி காலண்டர் காகிதங்கள் தினமும் இனி நம்பிக்கையோடு கிழிக்கப் படட்டும்.
19+1= 20 அன்று நிறைய நட்புள்ளங்கள் மலர்ச்சியோடு முகம் காட்டி சிரித்தன. தெரிந்தது எத்தனை தெரியாதது எத்தனை. பெயர் மட்டும் தெரிந்து உருவம் தெரியாதவர்களுக்கு மீண்டும் வணக்கம். நன்றி. என்னால் அடையாளம் காண இயலவில்லை.
22.1.20 அன்று ஒரு கிராமத்தில் 120 + குழந்தைகளை சந்தித்தேன். அவர்கள் முகமலர்ந்து என்னை வரவேற்று என் சொல் கேட்டனர். அது பற்றி விவரமாக தனியே எழுதுகிறேன்.
கண்ணா உனக்கு நன்றி. தமிழுலகம் வியக்க எம்மிடையே வாழ்ந்த பன்முக கவிஞன் கொத்தமங்கலம் சுப்பு வின் வரிகள் நினைவில் நிற்கிறது:
''ஏட்டிலெழுதிய சித்திரமாய்
எங்களை மயக்க வந்தவனே
நாட்டில் எல்லோருக்கும் பாலகன் நீ
நந்தனுக்கு மட்டும் சொந்தமுண்டோ?
மந்தையில் நீ மேய்க்கும் மாடாகி - இனி
மாதவன் ஓட்டும் வழி நடப்போம்.''
கண்ணா இனி போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்..... ஜே.கே. சிவன்
No comments:
Post a Comment