கூர்மையாக்கு J K SIVAN
புண்யகோடி படிப்பு வராததால் ரொம்ப ஒன்றும் கஷ்டப்படவில்லை. நான்காவது வகுப்பில் மூன்று வருஷம் பொறுமையாக உட்கார்ந்து பயனில்லை என்பதால் அப்பாவின் தோப்பில் மரங்களை பராமரிக்க சென்றுவிட்டான் . விறகு வெட்டியாக சம்பாதிக்க ஆரம்பித்தான். பட்டணத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்த சுப்பாரெட்டி அவனை வேலைக்கு அமர்த்தி மரம் வெட்ட அனுப்பினார். நல்ல சம்பளம். வேலை அப்படி ஒன்றும் அவனுக்கு புதிதானதல்ல.
சுப்பாரெட்டி ஒரு கோடாலியை கொடுத்து அவரது காட்டுக்கு அனுப்பி ''அதோ அந்த 15 மரங்களை வெட்டிக்கொண்டு வா'' சாயந்திரத்துக்குள் பதினைந்து மரம் வெட்டிவிட்டான்.
''அட புத்திசாலியாக இருக்கிறாயே. தொடர்ந்து இப்படியே வேலை செய்'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார் ரெட்டியார்.புண்யகோடி மறுநாள் கோடாலியோடு புறப்பட்டான். அன்று அவனால் கடினமாக உழைத்தும் 10 மரம் தான் வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் 7 மரங்கள் தான். ஏன் இப்படி நாளாக நாளாக கடினமாக உழைத்தும் வெட்டும் மரங்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
" ஒருவேளை எனக்கு சக்தி குறைந்து கொண்டே போகிறதோ?'' என்று புண்யகோடிக்கு கவலை. ரெட்டியாரிடம் சென்றான். பவ்யமாக கைகட்டி நின்று மன்னிப்பு கேட்டான். ''என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் முதல் நாள் வெட்டிய 15 மரம் மாதிரி அடுத்தடுத்து நாட்களில் வெட்ட ,முடியவில்லையே. ஐயா, எதனால் என்று எனக்கு புரியவில்லை, என் உடம்பை பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது'' என்றான்.
புண்யகோடியின் நேர்மையான உழைப்பு ரெட்டியாருக்கு தெரியும். ஆகவே வேறு ஏதாவது காரணமாக இருக்கவேண்டும் என்று யோசித்தார். ஒரு எண்ணம் உதயமாயிற்று.
''ஏண்டா புண்யகோடி, எப்போது கடைசியா உன் கோடாலியை சாணைபிடிச்சு கூர் தீட்டினே?''
"சானியா, கூர் தீட்டி ரெண்டு மாசமாயிட்டுது ரெட்டியார். எங்கே நேரமே இல்லையே பட்டறைக்கு போக ?'' என்றான் புண்யகோடி.
என்ன தான் உடலுழைப்பு இருந்தாலும் புத்தி கூர்மையை அடிக்கடி சாணை பிடித்துக் கொள்ள வேண்டாமா. நமக்கு எல்லாம் தெரிந்தது போல் யார் யாரோ சொல்வதை எல்லாம் யோசிக்காமல் தலை ஆட்டுகிறோம். சுயபுத்தி என்பது தான் புத்தி கூர்மை. அதற்கு சாணை பிடிப்பது தான் தீர நிதானமாக எது சரி எது தப்பு என்று யோசிப்பது.
No comments:
Post a Comment