Thursday, January 9, 2020

THIRUK KOLOOR PEN PILLAI

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
39 அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ராமாயணத்தில் ஒரு அருமையான காட்சி. அறுபதினாயிரம் வருஷங்கள் வாழ்ந்த தசரத மகாராஜாவுக்கு புத்ர பாக்யம் இல்லை. புத்ர காமேஷ்டி யாகம் பண்ணுகிறார். யாகத்தில் பாயசம் தேவர்களால் தரப்படுகிறது. அதை தனது மூன்று மஹாராணிகளுக்கும் கொடுக்கிறான் தசரதன். கௌசல்யாவுக்கு ராமன் மூத்தமகனாக பிறக்கிறான். மற்ற ராணிகளுக்கு பரதன் லக்ஷ்மணன் சத்ருக்னன் ஆகியோர் பிறக்கிறார்கள். ராமர் பதினாறு வயது கூட ஆகி இன்னும் பட்டத்து இளவரசனாக ஆகவில்லை. அதற்குள் ஒருநாள் மிகச்சிறந்த தவ யோகி விஸ்வாமித்ர முனிவர் தசரதன் அரண்மனைக்கு வந்து ''தசரதா உன் உதவியை நாடி வந்திருக்கிறேன். செய்வாயா?'' என்று கேட்கிறார். ''ஆஹா, மகரிஷி விஸ்வாமித்ரரே, எதுவேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் '' என்கிறான் தசரதன். ''நான் காட்டில் ஒரு யாகம் பண்ணவேண்டும். அதை தடைசெய்து, கெடுக்க அநேக ராக்ஷஸர்கள் முனைகிறார்கள். அந்த யாகம் சிறப்பாக பூரணமாக நடந்து முடியவேண்டும். அதை பாதுகாக்க வேண்டுமானால் கொடிய ராக்ஷஸர்களை விரட்டியடிக்க உன் மகன் ராமன் தான் எனக்கு தேவை. அவனை என்னுடன் அனுப்பு' இதற்கு மேல் ஒரு பேரிடி தேவையா? தூண்டில் புழுவாக துடிக்கிறான் தசரதன். ''குருதேவா, ராமன் பச்சிளம் பாலகன், கொடிய ராக்ஷஸர்களை அவனால் எவ்வாறு சமாளிக்க முடியும்.அவன் உயிருக்கு ஆபத்து விளையுமே . அவனுக்கு பதிலாக நான் ஒரு பெரிய படையுடன் வந்து உங்கள் யாகத்தை ராக்ஷஸர்கள் அணுகாமல் தடுத்து பாதுக்காக்கிறேனே' -- தசரதன் கெஞ்சுகிறான். அப்போது ஒரு அற்புதமான விளக்கத் தை விஸ்வாமித்ரர் கொடுக்கிறார். ''தசரதா , பாவம் ஒன்றும் அறியாதவ னாக நீ பேசுகிறாய். உனக்கு ராமன் யார் என்று தெரியாது. எனக்கு தெரியும், அவன் யார், ஏன் உன் மகனாக அவதாரம் செய்திருக்கிறான்,என்று நீ அறிய வில்லை, நான் அறிவேன். இதோ இந்த வசிஷ்டர் போன்ற மஹா முனீஸ்வரர், ரிஷிகள் அறிவார்கள். அவன் சக்திக்கு, பலத்துக்கு முன் நீ ஒரு தூசு.'' என்று எடுத்துச் சொல்கிறார் விஸ்வாமித்ரர் ராமன் யார் என்று நான் அறிவேன் எனும் பொருள் படும் (' அஹம் வேத்மி '' ) 100 காரணங்களை விஸ்வாமித்ரர் தசரத னுக்கு எடுத்து சொல்கிறார். அதை தனியாக ஒரு புத்தகமாக எழுதி இருக்கி றேன். அதிலிருந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுருக்க மாக சொல்கிறேன். இதை ஒரு மஹான், பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் அற்புதமாக ஸமஸ்க்ரிதத்தில் எழுதி ஊரெல்லாம் சென்று உபன்யாசம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு . அவர் எழுதிய இந்த புத்தகத்தை ஒரு நண்பர் எனக்கு அளித்தார். அதிலிருந்து தான் நானே தெரிந்துகொண்டு ரசித்து மகிழ்ந்தேன். ஏற்கனவே முகநூல் வாட்ஸாப்பில் எல்லாம் பதிவிட்டிருக்கிறேன். அதனாலென்ன அதை அப்போது படிக்காதவர்கள் இப்போது படிக்க ஆசைப்பட்டால் படிக்கட்டுமே. இன்னொரு முறை பதிவிடுகி றேன்.காசா பணமா? விஸ்வாமித்ரர் இவ்வாறு எடுத்துச் சொன்னதை கூடவே இருந்து கேட்ட வசிஷ்டர் '' தசரதா, துளியும் கவலையே இல்லா மல் ராமனை உடனே விஸ்வா மித்ர முனிவரோடு அனுப்பு, ராமனுக்கு ராக்ஷசர்களால் எந்த ஆபத்தும் வராது, அவனால் அவர்களுக்கு தான் இனி ஆபத்து '' என்று பரிந்துரைக் கிறார். ஸ்ரீ ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு காட்டுக்கு செல்லும்போது கூப்பிடாம லேயே லக்ஷ்மணனும் ராமனுடன் செல்கி றான். தாடகை, கரன் தூஷணன் போன்ற
ராக்ஷஸர்கள் அழிகிறார்கள் என்று ராமாயணம் தான் சொல்கிறதே. திருக்கோளூர் அம்மாள் ரொம்ப ஆச்சர்யமான பெண்மணியாக இருக்கிறாள். அவளுக்கு தெரியாத ஒரு விஷயமும் இருக்க முடியாது போல் தோன்றுகிறது. இந்த சம்பவம் அவள் நினைவில் இருக்கவே தான் ராமாநுஜரைப் பார்த்து கேட்கிறாள்: “ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்ய சுவாமி, ராமன் நாராயணன், பரம்பொருள், அவனை ஒரு மானுட சிறுவனாக எடை போடாதீர்கள், அவனால் தீயவர்களுக்கு, அரக்கர்களுக்கு தான் ஆபத்து வரும் மற்றவர்களை அவன் காப்பவன், தசரதா, நீ உடனே ராமனை விஸ்வாமித்ர முனிவரோடு அனுப்பு என்று பரிந்துரைத்து, அப்படி அனுப்பு வதால் உலகத்தில் சாதுக்களுக்கு நன்மை ஏற்படுமே என்று வசிஷ்ட மகரிஷி எடுத்து சொல்கிறார். நான் அப்படி ஏதாவது என்றாவது ஒரு வார்த்தை எவருக்காவது பரமாத்மாவால் நன்மை கிடைக்கும் எடுத்து சொன்னதுண்டா? எந்த விதத்தில் நான் திருக்கோளூர் புண்ய க்ஷேத்ரத்தில் வசிக்க தகுதி பெற்றவள் ஆவேன்? சொல்லுங்கள் ' என்று கேட்கிறாள் திருக்கோளூர் பெண்மணி .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...