மார்கழி விருந்து J K SIVAN
25. ஒருத்தி மகன்....
குளிர் சாதாரணமாக நமக்கு தெரியாது. காற்று கலந்து விட்டால் தான் அதன் கடுமை நடுக்கும். இந்த வருஷம் சென்னையில் பனியும் குளிரும் விடிகாலை எழுந்து குளித்து ஆலயம் செல்வதை ஒரு கழகமாக எதிர்த்து தடுக்கிறது.
சூரியன் கண்ணில் படாததால், மார்கழி பனியுடன் இருளும் கவ்வி அந்த நிர்மானுஷ்யமான நந்தவனத்தில் எங்கும் அமைதி நிலவியது. விஷ்ணு சித்தர் மீண்டும் தீபத்தை ஏற்றினார். காற்று அதன் மீது படாதவாறு அதைச் சுற்றிலும் ஒரு பிறை அமைத்தார். அந்த வெளிச்சத்தில் ஆண்டாளின் மார்கழி 25ம் நாள் பாசுரத்தை ஏந்திய ஓலைச்சுவடியை அரங்கன் விக்ரஹம் முன் கோதை எழுதி வைத்திருந்தாளே அதை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு மெதுவாக படித்தார்.
கண் தெரியவில்லை. ஓலைச்சுவடியின் எழுத்துகள் புரிபடவில்லை.
''அப்பா. நீங்கள் ஏன் ஸ்ரமப்படுகிரீர்கள். நானே படித்துக்காட்டுகிறேனே'' என்று சொல்லிக்கொண்டே கோதை வந்து விட்டாள்.
''படித்துக்கொண்டே நீ பாடினால் இன்னும் அற்புதமாக இருக்குமே அம்மா. பாலில் தேன் கலந்தாற்போல்'' இது வழக்கமான வேண்டுகோள் அல்லவா!
கணீரென்று வெண்கலக்குரலில் கோதை பாடியபோது நமக்கெல்லாம் திருப்பாவையின் 25வது பாசுரம் கிடைத்தது.
''ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்''
ஆஹா அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கம்மல் குரல் இன்னும் காதில் அந்த வைரக் கம்மலோடு மின்ன, பிர்காவுடன் ஒலிக்கிறது.
''அப்பா, அந்த குட்டி கிருஷ்ணன் எப்படியப்பா ஒவ்வொருநாளும் நாளொரு ராக்ஷசனும் பொழுதொரு ஆபத்துமாக வளர்ந்தான். நினைத்துப்பார்க்கவே ஆச்சர்யமாகவே இருக்கிறது''.
''அம்மா கோதை, என் தாயே, அவனுக்கா ஆபத்து... ஹா ஹா இல்லவே இல்லை. அந்த ராக்ஷசர்கள் தான் ஒவ்வொருவராக வரிசையில் வந்து, அவன் கையால் ஆபத்தையும் மரணத்தையும் வாங்கிக் கொண்டார்கள், தேடிக்கொண்டார்கள் என்பது தான் உண்மை. அவன் எதற்கு அவதரித்தானோ அந்த வேலையை பிறந்த கணம் முதல் தொடங்கிவிட்டான். சுறுசுறுப்பில் அவனைத்தான் நாம் பின்பற்றவேண்டும்! சரியான கர்ம யோகி கிருஷ்ணன் தான் அம்மா''
இறைவனுக்கே உகந்த சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதம் இன்று 25வது நாளைத் தொட்டு விட்டது. இன்னும் ஒரு கை விரல் விட்டு எண்ண இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இன்று நடந்த விஷயத்துக்கு வருவோம். அதற்கு நாம் ஆயர்பாடி போயாகவேண்டும். புறப்படுவோம்.
''சரணாகதி நீயே என்று கண்ணன் திருவடிகளில் மெய்மறந்து மனம் கனிந்து அவன் பேரருள் பெற வேண்டிய ஆண்டாளுக்கு திடீர் என்று கிருஷ்ணனின் பழைய ஞாபகங்கள் வந்து விட்டது.
இந்த மாயாவி கிருஷ்ணன் உண்மையில் யார்?
யாரோ ஒருத்திக்கு பிறந்தவன்,
பிறந்த கணத்திலேயே அவளை விட்டு பிரிந்தவன்,
பிறந்ததையே ரகசியமாக்கி விட்டு வேறு எங்கோ ஒருத்தியிடம் ரகசியமாகவே வளர்ந்தவன்.- (இதனால் தான் பிற்காலத்தில் நமக்கெல்லாம் கீதா ரகசியம் கற்பித்தானோ!)
தன் உயிரைக் காத்துக் கொள்ள உன்னைத் தேடிக் கொல்ல அலைந்த கம்சனை தூக்கமின்றி தவிக்க விட்டு அவன் வயிறு பூரா பய நெருப்போடு கவலையில் துடிக்க வைத்தவனல்லவா கிருஷ்ணா நீ? என்று ஒரு கணத்தில் ஆண்டாள் கிருஷ்ணனைபற்றி சிந்தித்து பெருமிதம் கொண்டாள்.
அப்படிப்பட்ட மகோன்னதமான பெருமாளே!, உன் பெருமையும், செழுமையும், வீரமும் கருணையும்-- எதைப்பற்றி பாடினாலும் சந்தோஷக் கடலில் மூழ்க வைக்கிறதே!! எங்ளுக்கு அருள் செய்வாயாக”” என்று இந்த நன்னாளில் ஆண்டாள் அன்று வேண்டுகிறபோது
அதே மார்கழி 25ம் நாளான இன்று ஸ்ரீ வில்லி புத்தூரில் ஆண்டாள்- கண்ணன் திருக்கோலம் ஊர்வலமாக வருஷா வருஷம் நடைபெறுகிறது. பக்தர்களை மகிழ்விக்க தந்தத்தில் செய்யப்பட்ட பல்லக்கில் அந்த தெய்வங்கள் ஊர்வலம் வரும்போது, அதை மனதில் மட்டுமே பார்க்கக் கொடுத்து வைத்த நாம் அந்த ஊர்வலத்தில் ''மனதார'' கலந்துகொள்வோம். நம் வேண்டுதலையும் அவள் திருவடிகளில் வைத்து வழிபடுவோமாக.!! .
No comments:
Post a Comment