Monday, January 20, 2020

PESUM DEIVAM



  பேசும்  தெய்வம்   3ம்  பாகம்  J K  SIVAN 



                                                        
                         பெரியாரும் பெரியவாளும்  

  காஞ்சி  மஹா    பெரியவா ஒரு  ஆழம் காணமுடியாத  மஹா ஞான சமுத்திரம். அவருடன் நிழலாக இருந்த  புண்யசாலிகள் அளவற்ற ஞான ச்செல்வம் பெற்றவர்கள்.  அவர்களிடமிருந்து   கசிந்து எங்கெங்கோ பரவி என்னை வந்தடைந்த சில   அற்புத  விஷயங்களை  சுருக்கி  என்  வழியில் உங்களுக்கும் தெரிவிக்கும் புண்யம் ஒன்றே எனக்கு போதும்.  

லக்ஷ்மிநாராயணன் என்ற  பக்தர் மகா பெரியவாளோடு  இருந்து  40 வருஷகாலம்   போல  சேவை செயத  பாக்கியசாலி.  மாங்காட்டில் வசித்தவராம். அவர்  நினைவு  கூர்ந்த ஒரு சம்பவம்:  

பெரியவா  மைலாப்பூர் லஸ்  நோக்கி கபாலி  கோவில் போக   தனது பக்தர்களுடன் வந்து கொண்டிருக்கிறார்.  அவர்    வருகிறார் என்று அறிந்து  அவரையும்  பக்தர்களையும்  தாக்கவேண்டும் என்று  உருட்டு கட்டைகளோடு   தி.க.   தொண்டர்கள்  கூட்டமாக  நிற்கிறார்கள்.   ஏதாவது ஏடாகூடமாக  நடந்துவிடக்கூடாதே,  பெரியவாளுக்கோ  பக்தர்களுக்கோ  ஏதேனும்  அசம்பாவிதம் நடந்தால் எப்படி  தாங்கிக்கொள்ளமுடியும்?  மத்திய  மந்திரி,பிரபல தொழிலதிபர்  டீ.டீ. கிருஷ்ணமாச்சாரி ,  கல்கி  அதிபர் சதாசிவம்  ஆகியோர்  அங்கே  பெரியவா  அருகில்  இருந்தார்கள். என்ன செய்வது என்று புரியவில்லை.    பெரியவா அருகே சென்று  மேற்கொண்டு போகவேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள்.  போதிய  போலீஸ்  பாதுகாப்பு இருக்கிறது.     இருந்தாலும்   அசம்பாவிதம் எதுவும்  நடக்க இடம் கொடுக்கவேண்டாம் என்று  போலீஸ்காரர்கள் வேறு   மேற்கொண்டு போகவேண்டாம் என்று  கேட்டுக்கொண்டார்கள்.  

பெரியவா  பற்றி நாம்  அறிவோம் அல்லவா?     குழந்தை மாதிரி சிரிப்பு.    “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!’''  என்று  சொன்னவர்   முண்டகக்கண்ணி  அம்மன் கோவில் பக்கம்   திரும்பி  நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டுவிட்டு, மேலே விடுவிடு
வென்று  நடந்தார்.   அருகில் இருந்தவர்களுக்கு  தான்  அதிர்ச்சி.  சொல்லமுடியாத   சங்கடம் மனதில்.  என்ன ஆகுமோ?  ஏது  நடக்குமோ?

லஸ்  அருகே  தி.க.   தலைவர் , ஈ.வே.ரா. பெரியார்    தி.க. கூட்டத்துக்கு  அங்கே வருகிறார்.   திரளாக கூடியிருந்த  தொண்டர்களை பார்த்து  உரக்க   என்ன  சொல்கிறார்  கேளுங்கள்: 

“எல்லாரும்   கையிலே வச்சிருக்கிற  கழி,கொம்பு,  கட்டையெல்லாம் கீழே போடுங்க. போட்டுட்டு  போய்   ஓரமாக ஒதுங்கி  நில்லுங்க.. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது  எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!’ . இப்படி  ஒரு கட்டளையை  கணீரென்று  தோழர்களுக்கு  பெரியார்  இடுவது  பெரியவாளுக்கும் கேட்கிறது. 

 “பெரியவா   அருகில் இருந்தவர்களை பார்த்து    சிரித்துக்  கொண்டு  நடந்தபோது அவர் பார்வை  என்ன  வெளிப்படுத்தியது?   ''நான்  தான்  அப்பவே சொன்னேனே, ஒண்ணும்  நடக்காதுன்னுட்டு  பார்த்தீர்களா!’ 

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக  பின்  தொடர்ந்து  அவர் செல்லவேண்டிய  இடம்  வரை எந்த  இடையூறும்  இல்லாதபடிக்கு   தி.க. தொண்டர்கள் கூடவே  செல்கி
 றார்கள்.

 இப்போது ஒரு  சம்பவம் பெரியவா சரித்திரத்தில்  ஒரு திருப்பு  முனையானதை அறியப்போகிறோம்.  மேலே  சொன்ன சம்பவம் நடப்பதற்கு  சில  வருஷங்களுக்கு முன்னர் வரையில் எங்கே   போனாலும் பெரியவா   ‘மேனா’   என்னும்  குட்டி    பல்லக்கில் தான் பிரயாணம்   செய்வார்.  ஒரு   தடிமனான கழியில்  நடுவில்  அந்த மேனா  எனும்  ஒருவர் அமரும்   பெட்டி  பல்லக்கு.  முன்னாலேயும்  பின்னாலேயும்  நாலு  நாலு  ஆட்கள்  சுமந்து  வருவார்கள்.

பெரியவா   இதுபோல் மேனாவில்   வந்துகொண்டிருக்கும்போது   வழியில் எங்கோ ஒரு  இடத்தில்   தி. க.  வினரின்  பொதுக்கூட்டம்.  பெரியார்  மேடையில்  பேசிக்கொண்டிருக்கிறார்.  பெரியார்   பேச்சு தூரத்தில் பெரியவா  மேனாவில்  வருவதில்  கலைகிறது. ஒலிபெருக்கியில்  பேச்சு வேறுவிதமாக  போகிறது. 

“மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு  போக, இவர் மட்டும் உள்ளே  சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே,   இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்பவன் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவன் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?’  --   பெரியார்  குரல்  உரக்க   முழங்குவது  பெரியவா 
காதுகளில் விழுந்தது. 

''நிறுத்துங்கோ ''    பெரியவா  மேனாவை  நிறுத்த சொன்னார்.  தரையில்  இறங்கிவிட்டார்.

''பெரியவா  மன்னிக்கணும்,  அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப்   போகட்டுமே.அதை பெரியவா பெரிசா எடுத்துண்டு  லக்ஷியம் பண்ணாதேங்கோ. உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா
கருதறோம்!’  --  மடத்து  சிப்பந்திகள் பெரியவா கிட்ட  எவ்வளவோ கெஞ்சினார்கள்.   இம்மியும் பெரியவா .அசைந்து கொடுக்க வில்லை. 

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை.   இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்’ என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்ட   பெரியவா   கடைசி வரையிலும்,  அப்புறம்   மேனாவில் ஏறவில்லை. அந்த  தொண்டு கிழவரின் கால்கள்  அவரை  கடைசிவரை  சுமந்து எங்கும் கொண்டு சென்றன. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...