திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
41 மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே
ஹிந்து பக்தர்கள் விநோதமானவர்கள். நமது புராணங்கள், புத்தகங்கள், ஸ்லோகங்கள், எல்லாமே அநேக விதமான சிறந்த சிவபக்தர்களை, விஷ்ணு பக்தர்களை பற்றி ஏராளமாக கூறுகின்றன.
சாக்கியர் என்கிற சிவபக்தர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும்போது பூக்கள் கிடைக்காததால் அருகில் இருந்த கற்களை கொண்டுவந்து அர்ச்சித்து (அடித்து!) சிவனை வழிபட்டார். கண்ணப்பன் தனக்கு பிடித்த பன்றி இறைச்சியை கொண்டு வந்து கொடுத்தான். வாயால் நீர் கொண்டுவந்து சிவலிங்கம் மேல் கொப்புளித்து அபிஷேகம் பண்ணினான் என்று கதை உண்டு. நமது தெய்வங்கள் பக்தனின் மனதை, அவனது தூய இதயத்தை தான் பார்க்கின்றது என்பதால் மற்றதெல்லாம் லக்ஷியம் செய்வதில்லை.
தொண்டைமான் என்கிற அரசன் திருமால் பக்தன். திருப்பதி வெங்கடாசலபதி அவனுக்கு விசேஷ தெய்வம். தனது அரண்மனைக்கும் திருப்பதி வெங்கடேசன் ஆலயத்துக்கும் சுரங்கப்பாதை அமைந்து வேண்டியபோதெல்லாம் வந்து தரிசிப்பவன். வெங்கடேசனுக்கு திருப்பதியில் வசதியாக தங்க ''ஆனந்த நிலையம்'' எனும் ஆலயத்தை திருமலையில் அமைத்து கொடுத்தவன். அவன் தினமும் பாலாஜி வெங்கடேசனுக்கு தங்கத்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்விப்பவன் .
ஆனால் இன்னொரு ஸ்ரீனிவாச பக்தரும் அதே சம காலத்தில் வாழ்ந்து வந்தார். திருப்பதி திருமலை அருகே ஒரு சின்ன கிராமம் அதற்கு குரவபுரம் என்று பெயர். அதில் வாழ்ந்த ஒரு ஏழை வைணவர். அவர் பெயர் மறைந்து போனாலும் அவரை குரவ நம்பி என்பார்கள்.
மண்பாண்டங்கள் களிமண்ணால் தயாரித்து விற்று, அதில் வரும் சொற்ப வருமானத்தில் கால் வயிறு கஞ்சி குடித்து வாழ்ந்த குயவர். அவரிடம் இருந்த ஒரு விசேஷம் என்னவென்றால் தினமும் வெங்கடேசனுக்கு முதலில் உணவு உண்ண தண்ணீர் குடிக்க மண் சட்டிகள், குடுவைகள் செய்து கோவிலுக்கு அளிப்பவர். இதைத் தவிர தன்னால் தொண்டைமான் போல் தங்கத்தால் அர்ச்சனைப்பூக்கள் பண்ண இயலாது என்பதால் தினமும் தன் கைகளால் பக்தியோடு களிமண் புஷ்பங்கள் செய்து திருமலை ஸ்ரீனிவாசனை அர்ச்சிப்பவர்.
ஒருநாள் என்ன நடந்தது? ராஜா தொண்டமானுக்கு வெங்கடேசனை தரிசிக்க எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ரகசிய சுரங்க பாதை வழியாக திருமலை ஆனந்தநிலையம் செல்வான். அன்றும் அப்படியே சென்று வெங்கடேசனை தரிசித்தான். அவனுக்கு அங்கே ஒரு அதிசயம் காத்துக்கொண்டிருந்தது. தான் அளித்த தங்க புஷ்பங்களுக்கு பதிலாக களிமண்ணால் செய்த புஷ்பங்கள் வெங்கடேசன் மேல் நிறைந்திருந்தது அவனுக்கு வருத்தத்தை, ஆச்சர்யத்தை அளித்தது.
எதனால் தான் அர்ச்சித்த தங்க மலர்கள் களி மண் மலரகளாக மாறிவிட்டது? அவன் தான் பெருமாளோடு பேசுவானே. ''ஸ்ரீநிவாஸா என் மேல் கோபமா, வெறுப்பா, எதற்காக நான் அன்போடு அளித்த தங்கமலர்களை நீ களிமண் மலர்களாக மாற்றிக்கொண்டாய்? அல்லது யார் நான் அளித்த மலர்களை எடுத்துக் கொண்டு களிமண் மலர்களை உனக்கு சாற்றிய கள்வன்? சொல் அவனை உடனே தண்டிக்கிறேன்'' என்று கேட்டான்.
பெருமாள் அவனுக்கு குரவ நம்பியின் பக்தியை பற்றி கூறுகிறார். ''தொண்டைமானே , எனக்கு பொன்னும் ஒன்று தான், மண்ணும் ஒன்றுதான். பக்தனின் மனதை, இதயத்தை மட்டும் தான் நான் பார்ப்பவன். உன்னைப்போல் தான் எனக்கு குரவ நம்பியும்.'' என்கிறார்.
ராஜா தொண்டமான் குரவபுரம் போய் அந்த ஏழை பக்தர் குரவநம்பியின் குடிசைக்குள் நுழைந்து அவரை வணங்குகிறான். வெங்கடேசன் ஆலயத்தில் நடந்த சம்பவத்தை சொல்கிறான். குரவ நம்பி கண்களில் ஆனந்த கண்ணீரோடு ராஜாவுக்கு தரிசனம் தந்த வெங்கடேசனை மனதில் நினைத்து ராஜாவை வணங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி உங்களுக்கும் எனக்கும் இன்று தான் தெரிந்தது என்றாலும் திருக்கோளூர் மோர் தயிர் விற்கும் அந்த பலே பெண்மணிக்கு வெகுகாலம் முன்பே தெரிந்திருக்கிறது என்பதால் தான் அவள் ''ஸ்ரீ ராமானுஜ சுவாமி, நான் என்ன குரவநம்பி போல், எதையும் எதிர் பார்க்காமல், களிமண்ணால் மலர்கள் செய்து கொண்டுபோய் திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பூஜை செய்தவளா? எந்த விதத்தில் நான் இந்த க்ஷேத்ரத்தில் தங்க அருகதை கொண்டவள் சொல்லுங்கள்'' என்று கேட்கிறாள்.
No comments:
Post a Comment