Wednesday, January 1, 2020

THIRUVEMBAVAI



திருவெம்பாவை.   J K  SIVAN  

                                     பூக்காடர் ..

திருவெம்பாவை மொத்தம்  20  பாடல்கள் மட்டுமே  மணிவாசகர் அருளி இருக்கிறார்.  போதுமே இது என்று நினைத்தாரோ?  ஒரு பாடலை அலசினாலே மென்று சுவையை ருசித்தால்  அதற்கே  எத்தனையோ நாளாகும் முடிக்க.. ஒவ்வொரு கோணத்திலும் புது அர்த்தங்கள் உள்நின்று ஒளிர்வதை  உணரலாம். அதனால் தான்  ஹே  மனிதா. இது  ஆனந்தவிடகன், கல்கி இல்லையடா. உன் வாழ்க்கைக்கு வழிகாட்டி. நிதானமாக இதை அறிந்து உன் சரியான பாதையை அடையாளம் கண்டுகொண்டு நட  என்று நடராஜனை நாட வழிகாட்டிவிட்டார்.

திருவையாறு சென்றபோது எனக்கு சப்தஸ்தான க்ஷேத்ரங்கள் அருகில் தானே இருக்கின்றன சென்று பார்க்கலாமே என்று ஒரு ஆசை உந்த, நண்பர்களோடு சென்றோம். அதில் ஒன்றை மட்டும் இன்று  நினைவு கூர்ந்துவிட்டு  இன்றைய 17வது திருவெம்பாவைக்குள் செல்வோம்.

மேலைத் திருக்காட்டுப்பள்ளி வழியாக வந்தால் திருக்கண்டியூருக்கு மேற்கே 3 கி.மீ., நடந்தால் தான்   இன்னொரு சப்தஸ்தான க்ஷேத்ரம் வரும்.  அதற்கு பெயர் திருப்பூந்துருத்தி .   சப்தஸ்தான க்ஷேத்ரங்களில் இது ஆறாவது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரம்.

நந்திகேஸ்வரனின்  திருமண வைபவத்திற்கான அத்தனை மலர்களையும் வாரி வழங்கிய ஸ்தலம். தேவர்கள் அனைவரும் நிறைய பூக்கள் கொண்டுவந்து இங்கே சுயம்புவாக சிவனை வழிபட்டதால் இப்பெயர். “வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’ என அப்பர் பாடல் சொல்கிறது. 

திருமாலும், திருமகளும் இத்தல இறைவனை வழிபாடு செய்தனர் ஆகவே திருப்பூந்துருத்தி. இன்னொரு காரணம் சோழ ராஜா ஒருத்தன் இங்கே துருத்தியை லிங்கமாக வைத்து பூஜை செய்ததால் என்பார்கள். 

இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ரெண்டு ஆறுகளுக்கு இடையே இருக்கும் ஊருக்கு துருத்தி என்ற பெயராம். காவிரி குடமுருட்டி ரெண்டுக்கும் இடையே உள்ளதால் இது திருப்பூந் துருத்தி. மேலைத்திருப்பூந்துருத்தி என்று சில தஸ்தாவேஜுகளில் இதற்கு ஒரு பெயர். எது எப்படி இருந்தாலும் இது மிகவும் சிறப்பு மிக்க காவேரி தென்கரை சிவாலயங்களில் பதினொன்றாவது. சிவனுக்கு இங்கே மிகப்பொருத்தமான  பெயர்.  புஷ்பவனேஸ்வரர்,   பூக்காடர்,   புஷ்பவன நாதர் என்ற பெயர். அம்பாள் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சேர்ந்து வந்தது எப்படி என்று ஒரு சிறு கதை சொல்லட்டுமா?

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமம் ,, திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய 13 தீர்த்த க்ஷேத்ரங்களில்   ஸ்னானம் செய்ய  நினைத்தார்கள்.   இப்படிப் பண்ணினால் ஈடற்ற புண்ணியம், பித்ரு சாபங்கள் விலகும்.     இந்த புனித தீர்த்தங்களில் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட   நமக்கும்  கூட ஆசைதான். ஆனால் இது யாரால் எப்படி முடியும் ? என்று அந்த ரிஷிகள்  அதிசயித்தார்கள். அங்கே காசியப முனிவர் இருந்து, அவர் காதில் இந்த பேச்சு விழுந்ததால் அவர் குறுக்கிட்டு பேசினார்:

‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடிக்க  வழி  காட்டுகிறேன்.பார்க்கிறீர்களா?’ என்றார்.   உடனே காசியபர் சிவனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்கள் சென்றவர் திருப்பூந்துருத்திக்கு வந்தார். இங்கேயும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய பரம சிவன் ஆடி அமாவாசை அன்று காசியபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தபோது மேலே சொன்ன 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அதுவே இப்போது இங்கே காசியப தீர்த்தம். கிணற்றில் நீரெடுத்து தானும் ஸ்நானம் செய்தபின் புஷ்பவனீச்சரவுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தார். முக்தி அடைந்தார்.  இப்படி  கஷ்டப்பட்டு  காசியபர் நமக்கு உதவியதால் நாம்  சுலபமாக  திருப்பூந்துருத்தியில்  ஸ்னானம் செய்ய முடியாவிட்டாலும் ஒரு துளி ஜலம்  ப்ரோக்ஷணமாவது செய் து கொண்டு பாபம் தீர்ப்போம்.

காசியப தீர்த்தம் சோமாஸ்கந்த மண்டபம் பக்கத்தில் தென்கிழக்கு மூலையில் கிணறாக இருக்கிறது. வடிவில் உள்ளது. அருகே ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை நாச்சியார்,மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் எல்லோரும் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமாவாசையிலும் இந்த ஸ்தலத்தை வலம் வந்தால் அது தான் கிரிவலம்.      அதிலும் ஆடி அமாவாசை நாளில் இந்த கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

வில்வ மரம் ஸ்தலவிருட்சம். அப்பரின் திருமடம் ஆலயத்திற்கு எதிரில் உள்ளது. ராஜ ராஜ சோழன் சிலை வைத்திருக்கிறார்கள். வள்ளி- தெய்வானை சமேத முருகன் இங்கே ஆறுமுகத்தான் இல்லை.   ஏக முகன். ஒரு முக முருகன்.  நான்கு கரங்களோடு விசேஷனாக அருள் பாலிக்கிறான். காசி க்கு சென்றுவந்த பலன் இங்கே ஒரு முறை தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கே இன்னொரு விசேஷமும் நடந்தது. அப்பர் பெருமான் திருஞான சம்பந்தருக்கு தெரியாமல் அவர் அமர்ந்திருந்த பல்லக்கை சுமந்து வந்த இடம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்ய நடந்த இடம், அவர் கால் பட்ட இடத்தில் என் கால் படக்கூடாதே என்று சம்பந்தர் வெளியே இருந்தே சிவனை தரிசிக்க விரும்பியபோது பெரிய நந்தி மறைத்தது. திருப்புன்கூரில் நந்தனாருக்கு வழி விட்டது போல் இங்கே நந்தி திருஞான சம்பந்தருக்கு வழிவிட்டதால் அழகாக நந்தி இங்கே சந்நிதியை விட்டு விலகி இருக்கிறது. இன்னொரு அற்புத சிற்பமாக காட்சி தருபவர் வீணா தட்சிணாமூர்த்தி.

இங்கே கொடிமரம் காணோம். பலிபீடம் நடராஜர் சபை இருக்கிறது. அம்பாள் சந்நிதி தெற்கு பார்த்து இருக்கிறது.

   
இப்படிப்பட்ட  சிவனை போற்றப்பட எழுந்திரு பெண்ணே என்று  மாணிக்கவாசகர் ஒரு பெண்ணாகி மற்றவர்களோடு சேர்ந்து  ஒரு பெண்ணை இந்த மார்கழி 17ம் நாள்  துயிலெழுப்புகிறார். என்ன சொல்லி?

17. ''செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்''.

''கம கம வென நறுமண மலர்கள் வாசம் வீசும் கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாத, எல்லையற்ற ஆனந்தம் எங்களிடம் உண்டாகும்படி பெருமைப் படுத்தி விட்டாய். நம் இல்லத்தில் வந்து செந்தாமரை போன்ற அழகிய திருவடியை தரிசிக்க தந்தருளும் அந்த ஆடலரசனை, இணையற்ற மா வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, நம்மை தடுத்தாட்கொள்ளும் பேர் அமுதனை எம்பிரானைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, எழுந்து வா. எங்களோடு இந்த பொற்றாமரை நிறைந்த நீரில் குதித்து நீராடுவோம்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...