Thursday, January 2, 2020

SHEERDI BABA





மனித உருவில் ஒரு தெய்வம்  J K SIVAN 
ஷீர்டி பாபா 

                                               பாபா  பாதுகை பிரதிஷ்டை 


ஷீர்டியில் முதன் முதலாக  அறிமுகமானபோது பாபா  இளைஞர்.  நீளமான  தலைமுடி. தாடி மீசையுடன்  வாலிபர்.  கட்டுமஸ்தான  தேகம்.  இருகப்பிடித்த   உடை.  ஷீர்டியிலிருந்து  3  மைல்  தூரத்தில்  உள்ள  ரஹதா  என்ற  ஊருக்கு குடிபெயர்ந்த  போது  சில  பூச்செடிகளை  கொண்டு சென்றார். அவற்றை அங்கே நட்டு  செடிகளை வளர்த்தார். அவற்றுக்கு தானும் நீர் வார்த்து பராமரித்ததால் கிடுகிடுவென்று அவை வளர்ந்தன. அந்த ஊரில்  வாமன்  தாதியா  என்ற மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இருந்தார்.  அவர் தினமும் பாபா  இருந்த இடத்தை தாண்டி தான் செல்வார். பாபா செடிகளை நட்டு அவற்றுக்கு  தகரகுவளையில் தண்ணீர் மொண்டு ஊற்றுவதை பார்த்துவிட்டு  ரெண்டு பெரிய  பானைகளை  செய்து கொடுத்தார். ஒரு கொம்பில்  அந்த பானைகளை இரு முனையில் கயிற்றில் கட்டி   ஊர் கிணற்றில் நீர் முகர்ந்து பாபா   தோளில்  தூக்கி வந்து செடிகளுக்கு தாராளமாக நீர்  வார்ப்பார்.

சாயந்திர வேளைகளில்  அந்த பானைகள்   பாபா   இருந்த  வேப்ப  மரத்தடியில் இருக்கும்.  மண்பானை களானதால்  அடிக்கடி உடைந்து போய் விட்டாலும்  அடுத்த நாளே  தாதியா புதிதாக  ரெண்டு பானை தருவார். இப்படியே, மூன்று வருஷங்கள் உடைந்த  பானைகளுக்கு  பதிலாக புதுப் பானைகள் பாபாவுக்கு தந்து வந்தார்.  பாபாவின் கடின உழைப்பால்  பல வண்ண பூக்கள்  பூத்து குலுங்கும் ஒரு நந்தவனமும் உருவாகியது. 

இப்போது அந்த இடம்  ''சமாதி மந்திர் ''என்ற பெரிய  மாளிகை கட்டிடமாக உருவாகி உள்ளது.  லக்ஷோப லக்ஷம்  ஸாயீ  பக்தர்கள்  அன்றாடம் குவிந்து வணங்கும் ஸ்தலம்.  

பாய்  கிருஷ்ணா அல்பகர் என்ற ஒருவர்  வெகுகாலமாக  அக்கல்கோட் மஹாராஜ் என்கிற  துறவியின் பக்தராக  வழிபட்டு வந்தார்.  அக்கல் கோட் மஹராஜ் என்ற துறவியின் படம் மட்டும் தான் அவரிடம் இருந்தது.   அல்பகருக்கு என்றாவது ஒருநாள்   அக்கல்கோட் செல்லவேண்டும்.  அங்கே உள்ள தனது  குருநாதரின்  பாதுகையை வணங்கி வழிபடவேண்டும் என்று ஆசை.  அக்கல்கோட்  ஷோலாப்பூர் ஜில்லாவில் இருக்கிறது.   

ஓருநாள் கிளம்பலாம் என்று  முடிவு செய்து  நடைப் பயணத்துக்கு  தயார் பண்ணிவிட்டார். முதல் நாள் இரவு ஒரு கனவு.  கனவில் வந்தவர்  அவரது  குருநாதர்  அக்கல்கோட்  மஹராஜ் .   அவர்  '' ஏ,  பக்தா, அல்பகர்,  நீ  ஏன் அப்பா  என்னை தேடி அவ்வளவு தூரம்  அக்கல்கோட்  வரை நடக்கிறாய்.   நான்  தான் ஷீர்டியிலேயே இருக்கிறேனே. அங்கேயே   நீ என்னை வழிபடலாமே''  என்கிறார். 

அல்பகருக்கு  ஆச்சர்யம்.   ''என்ன  நம் ஊருக்கு  அருகிலேயே இருக்கும்  ஷீர்டியிலா  என் குருநாதரும் இருக்கிறார். எங்கே?''   அல்பகர்  உடனே ஷீர்டிக்கு நடந்தார்.  அங்கே  ஷீர்டி பாபாவை  தவிர யாருமில்லை என்று தெரிந்தது.  சரி பாபாவை சந்திக்கலாம் என்று மசூதிக்கு வருகிறார். 

பாபாவை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. குருவை சந்தித்த  ஆனந்தம்.   ஆறுமாதமாகியும்   ஊர் திரும்ப மனம் வரவில்லை.  கனவில் வந்த  குரு அக்கல்கோட் மஹாராஜின்  பாதுகைகள் மனதை விட்டு நீங்க வில்லை.  குருநாதரின் பாதுகைகள் தயார் செய்தார். ஆவணிமாதம் ஒரு புனிதநாளில்  1912ல்  பாபா  தங்கியிருந்த  வேப்ப மரத்தடியில்  அக்கல்கோட் மகாராஜ்  பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  பூஜைகள் விமரிசையாக அதற்கு நடந்தது.  தாதா கேல்கர், உபாஸனி  ஆகிய இருவர் இதில் பங்கேற்றனர். 
பாதுகை பூஜைக்கு  ஒரு பிராமணரை பூஜாரியாக நியமித்தார்கள் . சாகுன் மேரு நாயக்   என்ற ஒரு பக்தர்  அந்த பாதுகை  பூஜா ஸ்தானத்தை   பராமரிக்க, பொறுப்பேற்றார்.

இது பற்றி  இருக்கும்  ஒரு விவரம் தருகிறேன்.   ஸ்ரீ   பி. வி  ராவ் (B.V. RAO) என்கிற  ஓய்வுபெற்ற தானா நகரத்து  மாம்லத் தார்   (நம்முடைய தாசில்தார் மாதிரி ஒரு பெரிய  பதவி )  அவர்  ஷீர்டி பாபாவின் பக்தர்  ஷீர்டி வந்தபோது  சாகுன் மேரு நாயக்கிடமும்    கோவிந்த கமலாகர் தீக்ஷித் என்பவரிடமும் இந்த  பாதுகை பிரதிஷ்டை  விஷயங்கள் எல்லாம் அறிந்து   சாய்லீலா  என்கிற தனது புத்தகத்தில் எப்படி  விளக்கி இருக்கிறார் என்று பார்ப்போம்:

''1912ம் வருஷம்  பம்பாயிலிருந்து  ஒரு  டாக்டர்,  ராமராவ் கோதாரே  என்பவர் ஷீர்டிக்கு  பாபாவை தரிசனம் செய்ய வந்தார்.  டாக்டருக்கு உதவியாளராக, (compounder )  கம்பௌண்டர் என்று மருந்து கலக்கி,  ஜாடியிலிருந்து மாத்திரைகள் பொட்டலம் கட்டி தருபவர்  தான்  மேலே சொன்ன பாய் க்ரிஷ்ணாஜி அலிபகர். நல்ல நண்பரும் கூட.  ஆகவே அவரும் ஷீர்டி வந்தார். இவர்கள்  சகுன்  மேரு நாயக், தீக்ஷித், ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்த போது  ''நமது பாபா  முதன் முதலில் இந்த ஷீர்டி  ஊருக்கு வந்து  இந்த வேப்ப மரத்தடியில் தங்கியதற்கு  ஏதாவது ஒரு ஞாபகார்த்த  சின்னம் இருக்க  வேண்டாமா?'' என்று யோசித்தார்கள்.

''பாபாவுடைய  பாதுகைகளையே அங்கே  பிரதிஷ்டை பண்ணினால்  என்ன? '' என்று  அலிபாகர் கேட்க,  டாக்டர் கோதாரேக்கு  தெரிந்த ஒருவர்  கல்லில் சிலைவடிப்பவர். அவரை விட்டு பாபாவின் பாதுகைகளை உருவச்சிலையாக  வடிக்கலாம் என்று  முடிவானது.  காண்டோபா கோவிலில்  உபாஸனி  மஹாராஜிடம் பேசினார்கள், பாதுகையின்  உருவப்படத்தை காட்டி இது  சரியாக இருக்குமா  என்று அவரிடம்  காட்ட,  அதை அவர்  சிறிது மாற்றி, அங்கங்கே  தாமரை இதழ்கள் , பூக்கள்  சங்கு  சக்கரம்  எல்லாம் சேர்த்து, கீழே  பாபா அமர்ந்த  வேப்ப மர  மஹிமை , பாபாவின் யோக சக்தி பற்றிய  ஒரு ஸ்லோகமும்  எழுதிகொடுத்தார். அந்த ஸ்லோகம்: 

 "Sada Nimbarvrikshasya mooladhiwasat, Sudhasravinam tiktamapi-apriyam tam, Tarum Kalpavrikshadhikam sadhayantam Namameeshwaram Sadgurum Sai Natham" 

 சதா நிம்பர் விருக்ஷயஸ்ய மூலாதி வஸத் , சுதாஸ்ரவிணம் திக்தமபி  அப்ரியம் தம், தரும் கல்ப விருக்ஷாதிகம் சதயந்தம்  நாமமீஷ்வரம் ஸத் குரும்  சாய் நாதம் ''

''ஆஹா ரொம்ப  நல்ல வாசகம்'' என்று இருவரும் மகிழ்ந்தார்கள்.  பம்பாயில்  பாதுகைகள் தயாராயின. அலிபாகர் பாதுகையை  பம்பாயிலிருந்து ஷீர்டிக்கு  கொண்டுவந்தார்.  ஒரு  ஆவணி  பௌர்ணமி அன்று  காலை 11 மணிக்கு  பாபாவின் பாதுகை ஷீர்டியில் வேப்பமரத்தடியில்  பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாது கை கண்டோபா கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு,   பக்தியோடு   தீக்ஷீத் தனது  சிரத்தில் பாதுகையை தாங்கி  ஷீர்டியில் துவாரகாமாயீ  மசூதிக்கு கொண்டுவந்தார்.  மேல தாளங்களுடன் பாதுகை ஊர்வலம் வந்தது.  

பாபா தனது கரங்களால் அந்த பாதுகையை  தொட்டார்.   ''இது பகவானின்  பாதம்'' என்று அருகிலிருந் தோரிடம் சொன்னார். 

பாதுகை வேப்பமரத்தடியில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட  தினத்திற்கு முந்தைய தினம்  யாரோ  ஒரு  பார்ஸிக்கார  பாபா பக்தர்  பம்பாயிலிருந்து  25 ரூபாய்  மணி ஆர்டர் செய்திருந்தார்.  அந்த காலத்தில் அது 2 லக்ஷத்துக்கு சமம்.  பாதுகையை  பிரதிஷ்டை செய்யும் செலவிற்கு அதை பாபா  அளித்தார்.  மொத்த செலவு  நூறு ரூபாய்கள் ஆனதில்  மீதி  75 ரூபாய்  நன் கொடையாக  பக்தர்களிடமிருந்து  வசூல் ஆகி யிருந்தது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...