Friday, January 3, 2020

SURSAGARAM




சூர் சாகரம் J K SIVAN
சூர்தாஸ்

நான் பேச நினைப்பதெல்லாம்....

''ஆஹா, தப்பு பண்ணிவிட்டேனே . இந்த சூர்தாஸ் கண்ணில்லாதவர் என்று நினைத்து ஏமாந்து விட்டேனே. ஆள் பலே ஆளாக இருக்கிறாரே. எப்படி சாமர்த்தியமாக இந்த கிருஷ்ணன்- ராதை மனதில் இருப்பதை யெல்லாம் அறிந்து வைத்திருக்கிறார்? மூக்கின் மேல் விரல் இல்லை, முகத்தில் தாவாக் கட்டை யிலேயே கை வைத்து அக்காத்ர்ய பட வைக்கிறது.

சூர்தாஸ் மனதில் உருவான அந்த காட்சி என்ன ?.

ரெண்டு சிறுசுகள். ஒன்றை ஒன்று அபரிமிதமாக விரும்பி தேடுபவர்கள். ஒருவர் மனதை இன்னொருவரிடம் இழந்தவர்கள். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொருவரும் மற்றவர் நினைவிலேயே வாழ்பவர்கள்.

இப்போது மாதிரி வாட்ஸாப், மெஸ்ஸெஞ்சர், sms, ஈமெயில், வசதிகள் இருந்தால் ஒன்றை ஒன்று காதாலேயே மொபைலில் விழுங்கிக்கொண்டு சதா சர்வகாலமும் உலகை மறந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து இருக்கும். அப்போது பாவம் குறிப்பாகத்தான் தன் மனதை மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டி இருந்தது. ஒருவர் சொல்வது, ஜாடையாக மற்றவருக்கு மட்டுமே புரியவேண்டும். இதர ஆண் பெண்ணுக்கு கண்ணில் பட்டாலும் காதில் விழுந்தாலும் அர்த்தம் புரியக்கூடாது. சந்தேகமும் வரக்கூடாது. இது எவ்வளவு கஷ்டம். அடேயப்பா. கண்ணனும் ராதையும் இதில் கை தேர்ந்த கில்லாடிகள் போல இருக்கிறது.

நிறைய பெண்கள் தோழிகள் சூழ ராதை கண்ணன் வீட்டு கூடத்தில் அமர்ந்திருக்கிறாள். வாசல் கதவு திறந்து இருக்கிறது. எதிரே மாமரத்துக்கும் புன்னைமரத்துக்கும் இடையிலே ஒரு கிளையில் பொன்னிற கன்னுக்குட்டியை கட்டி வைத்திருக்கிறான் கண்ணன் .

அம்மா பசு சற்று தள்ளி ஓடும் புழைக்கடை ஓடை கரையில் காற்று வாங்கிக்கொண்டு வயிறு நிறைய தின்ற இளம் புல்லை அரைக்கண் மூடி சுவாரஸ்யமாக அசை போட்டுக்கொண்டிருக்கிறது. தலை ஆடும் போது அதன் கழுத்து மணி கணீர் என்று ஒலிக்கிறது. வால் ஓய்வில்லாமல் சாட்டை மாதிரி அசைந்து ஈக்களை ஒட்டிக் கொண்டிருக்கிறது. காதுகளும் அதற்கேற்ப அசைகிறது.

கிருஷ்ணன் பார்வை ராதாவின் மேல் பதிந்தது. அவள் கண்கள் மற்ற தோழிகளை ஜாடையாக பார்த்தது. அவள் என்ன சொல்ல நினைத்தாளோ அதை அவள் கண்கள் சொல்ல அவன் பூரணமாக அதை வார்த்தைகளில் லாமலேயே புரிந்து கொண்டான்.

''இவர்கள் எதிரே இப்போது என்னோடு பேசாதே.''-- இது தான் பார்த்தான் ஓஹோ...

புரிந்து கொண்ட கிருஷ்ணன் குறுக்கும் நெடுக்கும் ஏதோ வேலையாக இருப்பது போல் நடமாடினவன் உரக்க அனைவர் காதும் கேட்க சொன்னான்.

' அடாடா நேரமாகிக் கொண்டே போகிறதே. கீழண்டை வீதி ஓரத்தில் ரெட்டை புங்க மரத்தின் கீழே காராம் பசு மடி நிறைய பாலோடு எனக்காக காத்துக்கொண்டிருக்கும். உடனே நேராக நான் அங்கே தான் பால் கறக்க போகவேண்டும். யார் என்னோடு வந்தாலும் வராவிட்டாலும் நான் போயாக வேண்டும் ஒருமணி நேரமாவது எனக்கு வேலை இருக்கிறது. இதோ நான் அங்கே கிளம்புகிறேன்.''

தோளில் துண்டுடன் மணிக்கயிறு, கையில் பால் கறக்கும் நீளமான வாயகன்ற ஒரு காது வைத்த பாத்திரம் எல்லாம் எடுத்துக் கொண்ட கிருஷ்ணன் வேகமாக நடக்க ஆரம்பித்தான். போகுமுன் கண்கள் ஒரு வீச்சு ராதையை நோக்கி பாய்ந்தது.

தான் மட்டும் தனியாக அங்கே இல்லை என்பதையும் குறிப்பாக ராதைக்கு உணர்த்தினானே அது எப்படி தெரியுமா?

''அப்பா வேறு அங்கே பசுக்களை வழக்கம்போல் எண்ணி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பார். எல்லாவற்றையும் திரும்பி அழைத்துக்கொண்டு வீடு திரும்புவதில் கவனமாக இருப்பார்; அவரை தொந்தரவு பண்ணாமல் யமுனைக்கரைக்கு பசுக்களை அழைத்துக்கொண்டு சென்று குளிப்பாட்டவேண்டும். எப்படியும் குறைந்தது ரெண்டு மணி நேரமாகவாவது அங்கே இருக்கவேண்டுமே...'

ராதாவுக்கு தான் கிருஷ்ணனை எங்கு எப்போது எப்படி எவ்வளவு நேரம் குறைந்தது தனியாக விளையாட சந்திக்கலாம் என்ற செய்தி போய் சேர்ந்தது.

யமுனை ஆற்றோரத்தில் புங்கமரத்தடியில் பசுவுமில்லை. பாலுமில்லை. பால் கறக்கும் பாத்திரம் மரத்தில் தொங்கியது. நந்தகோபன் பசுக்களை எண்ண எங்கோ காட்டில் நடுவே தான் சுற்றிக்கொண்டிருந்தார்.....

கிருஷ்ணன் போன சில நிமிஷங்களில் ராதையின் நாடகம் துவங்கியது ''அடடா நான் மறந்தே போனேன். உடனே வீட்டுக்கு நீர் கொண்டு போக நினைத்தேன்.. உங்களோடு பேசிய சந்தோஷத்தில் மறந்துவிட்டது.... ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு ராதை வேகமாக வெளியேறினாள்'' ...

''ப்ருந்தாவனமும் நந்த குமாரனும் ....... ஏனோ ராதா.........யார் தான் உன் அழகால் மயங்காதவரோ.''.... பாட்டு ஒலிக்கிறது.

வேணுகானம் கண்ணன் விரலில் ஆட, ராதா அபிநயம் பிடிக்கிறாள் .....ஜெயதேவர் இதை பார்த்துவிட்டு எத்தனை அஷ்டபதிகள் எழுதினாரோ. அவருக்கு தானே தெரியும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...