Sunday, January 12, 2020

life lesson




         தன்னை அறிந்தால்  ... உலகத்தில் நாம் வாழலாம் 
                                                    j k   sivan 

 சில சமயங்களில் நாம்  யாரையோ பற்றி நினைப்போம். திடீரென்று அவர்களிடமிருந்து கடிதம் வரும், இல்லை நேரில் வருவார்கள், இல்லை போனிலாவது , வாட்சப்பில்  பேசுவார்கள். அல்லது அவர்கள் அனுப்பிய ஒரு ஆள்  எதையாவது கொண்டு வந்து தருவான்.  

ரொம்ப நாளாச்சே  மார்க்கண்டேய நாயுடுவை பார்த்து என்று  நேற்று தான்  திடீரென்று  எனக்கு ஞாபகம் வந்தது. இன்று காலை வந்து நிற்கிறார். 

 ''எங்கே  நாயுடு  சார் ரொம்ப நாளாக காணோம்?''

''க்ஷேத்ராடனம் போனேன்.  வடக்கே கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட  இடங்களுக்கு ஒரு சுற்றுலா கோஷ்டியோடு சென்றேன். அவன் பிறந்து, வளர்ந்து, ஆண்டு,  மஹாபாரத யுத்தத்தில் பங்கேற்ற, கீதை சொன்ன இடம் எல்லாம் பார்த்தேன்.  நானும் ரெண்டு நாளாக உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கவேண்டும்.  கேட்கட்டுமா?''

''ஆஹா  கேளுங்கோ.தெரிந்தால்  சொல்கிறேன்.'' என்றேன்..  

''எனக்கு சத்ய சந்தனாக வாழ விருப்பம் என்றால்  நான்  என்ன செய்யவேண்டும்?''

''முதலில் சத்யம் எது, என்ன என்று புரியவேண்டும்.  அதை நாட உங்கள் முயற்சி பரிசுத்தமாக இருக்கவேண்டும். அதற்கு பிறகு இந்த கேள்வி எழாது?  சத்யசந்தனாவதற்கு  நீங்கள் சத்தியத்தை கடைப்பிடித்து வாழவேண்டும். அவ்வளவு தான்.  இதிலென்ன  சந்தேகம்?  உங்களுக்கு இது புரிந்து விட்டால் சந்தேகமோ கேள்வியோ  எழாதே. 

''இது என்ன  வெய்யிலா பகலா  சூரிய வெளிச்சமா என்று யாரையாவது கேட்கிறோமா?  அல்லது யாராவது நம்மை கேட்கிறார்களா?   எல்லோருக்கும் தெரிந்தது அல்லவா அது.   நீ  சத்யத்தோடு  உன் சொல் செயல் எல்லாவற்றிலும்  ஈடுபட்டால், நீ சத்யசந்தனாகி விட்டாயே.  நீ அப்படி இல்லை என்று உனக்கே  தோன்றினால் உன் சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

''ஏன் சார், அப்படி  தோன்றாதவன், இதுவரை சத்தியத்தை உணராதவன், அதன் படி நடக்காதவன், சத்யசந்தனாக முடியுமா?''

''கொஞ்சமாக கொஞ்சமாக  படிப்படியாக அவன் தன்னை உயர்த்திக் கொள்ளலாமே. முதலில் மனதில் அந்த  தேடல்  இடம் பெற்று,  அது சீர்ப்பட வேண்டும். பின்னர்  செயல்பட வேண்டும். ''

நான் மட்டுமல்ல சார். நிறைய பேருக்கு  தாங்கள் யார்  என்று தெரியுமே. ஆனால் அவர்களால் அதை ஆழமாக  சிந்தித்து புரிந்து கொள்ள முடியவில்லையே. அதற்கு  உந்துதல்  தேவைப்படுகிறதே,  இது போதாமையால் சிந்தனை சரிந்து விடுகிறதே. முழுமை பெறமுடியவில்லையே சார்.''

''சிந்தனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தான்  முன்னேறமுடியும்.  ஒரே ராத்திரி  மரத்தில் மாங்காய் பழுக்குமா நாயுடு சார்? சரியான புரிதல் இருந்தால் சரிவு, சறுக்கல்   கிடையாது.  சறுக்கினால் முயற்சி முழுமனதோடு இல்லை என்று தெளிவாகிறது.   ஏதோ யாரோ சொல்லி கேட்பது வேறு. தானாகவே  அனுபவத்தில் உணர்வது வேறு. அதனால் தான் வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள் நம்மில் அநேகம். அது கறிக்கு உதவாது''.

''சரிங்க சார்,  அப்படி  தன்னை உணர்ந்தவன் என்ன காண்கிறான்? அதை சொல்லுங்கள்''

''தான் யார் என உணர்ந்தவன்  ''அடுத்தவர்களை, மற்றவர்களை, மற்றவைகளை '' காண முடியாது நாய்டு சார்.   ஒன்றையே எல்லாமாக  பார்க்க துவங்கினால் அடுத்தது, மற்றவர்  ஏது?  ஒன்றிலேயே  எல்லாம்  அடங்கி  விடுகிறதே.எல்லாமே ஒன்றாக  தோன்றும் போது   ''மற்றது""  எங்கே  இருக்கும்?

எங்கிருந்தோ தனித்தனியாக  வந்த சாக்கடை நீர்,  கால்வாய்கள்,  வெவ்வேறு நதிகள் எல்லாமே  கடலில் ஒன்றாக கலக்கும்போது  கடலில் அவை எங்கே மறுபடியும் தனித்தனியாக தெரியும் சொல்லுங்கள்?

ஜீவன் பரமனில் ஐக்கியம் ஆகிறான்.  ''நான் நீ''  அங்கே  இல்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்   ஆனந்த பூர்த்தியாகி,,,,    பார்க்குமிடமெங்கும்  ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணாந்தம்....  என்று  தாயுமானவர் பாடியதற்கு அர்த்தம் இதுதான்.   

இப்போதைக்கு  இது போதும் நாய்டு.  ப்ராக்டிஸ்  பண்ணுங்கோ.  PRACTICE  MAKES A   MAN   PERFECT .












No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...