''சார் புத்தி கூர்மை என்பது பிறக்கும்போதே கூட வருவது இல்லையா சார் ? ஞானம் அறிவு என்பது கொஞ்சமாக கொஞ்சமாக சேர்த்து வயது முதிர்ந்ததும் நிறைய இருப்பது இல்லையா சார்'' என்று ஒரு நாள் என்னை கேட்டான்.
அறிஞனாக வேண்டும் என்று எவ்வளவோ பேர் வாழ்நாள் முழுதும் முனைந்து, முயன்று தேடுகிறார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
முதலில் எல்லோரிடமும் நிறைய நெருங்கி பழகவேண்டும். பிறரிடமிருந்து நல்ல விஷயங்களை இப்படித்தான் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொருத்தரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும் அல்ல, கட்டாயம் இருக்கிறது. அதை அறிந்து தெரிந்து கொள்வது பெரிதும் நம் அறிவை வளர்க்கும். புது செயதிகள், விஷயங்கள், அனுபவங்கள் இப்படித்தான் நமக்குச் சேரும்.
மனத்தை விசாலமாக வைத்துக்கொள்ள பழகவேண்டும். அவன் முட்டாள், அவனுக்கு ஒன்றும் தெரியாது. சொன்னதையே (என்னை மாதிரி) திருப்பி திருப்பி சொல்பவன் அவனை நெருங்கவேண்டாம். இவன் யூஸ்லெஸ். useless என்று முத்திரை குத்துவதை விடவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித துன்பம், கஷ்டம், குறை, அதை அவர்கள் எப்படி தீர்த்துக் கொள்ள, அதிலிருந்து விடுபட, முயல்கிறார்கள் என்பது ஒரு படிப்பினை. அவர்களை, அவர்கள் குறைகளை, அவர்கள் வழிமுறையை தப்பு, தவறு என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது.
ஒவ்வொரு நாளும் அன்றன்று நடந்த விஷயங்களை குறித்துக் கொண்டு நாம் என்னென்ன செய்தோம் ஒவ்வொரு பிரச்னையையும், எப்படி அணுகினோம் என்று அன்றிரவோ மறுநாளோ பார்த்தால் ''அடடா இப்படி செயதிருக்கலாமே என்று ஏதாவது புதிதாக ஒன்று தோன்றும்'' அல்லது அடடா எவ்வளவு அழகாக இதை தீர்வு செய்தோம், எப்படி அது நமக்கு தோன்றியது, என்று நமது செயலை வியக்கத் தோணும். இது ஒரு பாடம். வாழ்க்கை பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு கண நேரமும் ஒரு புது பாடம் கற்க முடியும்.
எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள இயலாது. புதுப்புது சந்தர்ப்பங்கள் அதனால் தான் நம்மை முன்னேற வந்தடைகிறது. நமது தவறுகள் நாம் வருந்துவதற்கு மட்டும் அல்ல. நம்மை திருத்துவதற்கும் தான். தவறை அறிந்துகொள்வது அறிவு முதிர்ச்சிக்கு ஆதாரம். தவறை ஒப்புக்கொள்வது ஒருவனை உயர்த்துகிறது.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் எதிலாவது ஆர்வம் காட்டுகிறோம். படிப்பது, சங்கீதம், கைவேலை, தோட்டக்கலை, தையல் காலை, சமையல், சித்திரம், நாடகம், நாட்டியம், சினிமா, பூனை, நாய் , முயல் வளர்ப்பது, என்று எத்தனை எத்தனையோ ..அதிலிருந்து தான் நமக்கு தேவையான உலக ஞானமும் கிட்டுகிறது. சரித்திரம் எப்படி எவரை பின்பற்றவேண்டும், எவர் போல் இருக்கவே கூடாது என்ற பாடம் கற்பிக்கிறது.
அவ்வப்போது நம்மை நாமே அசைபோட்டு எடைபோட வேண்டும். எப்படி எல்லாம் இருந்தோம், நடந்திருக்கிறோம், எது தவறு, எது இப்போது திருத்திக்கொள்ளப்பட்டது , இன்னும் எதை எல்லாம் திருத்திக் கொள்ளவேண்டும், என்பது அனுபவத்தில் புரியும். இது தான் அறிவு முதிர்ச்சி. கெட்டிக்காரத்தனம். புத்திசாலித்தனம். ஒவ்வொரு அனுபவமும் ஒரு மைல்கல். பிறருடைய அனுபவங்களும் சேர்த்து அறியும்போது நம் மனது விசாலமடைகிறது.
கடைசியாக ஒரு வார்த்தை. கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவு என்பதை மறக்காமல், '' தான்'' ''நான்'' என்பது மறந்து எல்லாம் அவன் உடைமை, எல்லாம் அவன் அடிமை, எல்லாம் அவனுடைய செயலே என்ற ஞானம் தான் மிகப்பெரிய, உயர்ந்த ஞானம் நாம் பெறவேண்டியது. பெற்றவன் புத்திசாலி, ஞானி.அது நாமாக வேண்டாமா?
No comments:
Post a Comment