Friday, November 30, 2018

RAGAVENDRAR

ஸ்ரீ ராகவேந்திரர் J.K. SIVAN

வெள்ளையன் செய்த புண்யம்

மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி கொண்டு அருள்பாலிக்கிறார். இந்த பூவுலகில் நம்மோடு 76 வருஷங்கள் வாழ்ந்தாலும் 300 வருஷங்கள் மந்த்ராலய பிருந்தாவனத்தில் அவர் இயற்றிய நூல்களில் காணப்படுவார். 400 வருஷங்கள் அரூபமாக சூக்ஷ்ம சரீரத்தில் பிருந்தாவனத்தில் நமக்கு அருள்வார். இவ்வாறு 700 வருஷங்கள் நமது வாழ்வில் நமக்குதவ காத்திருக்கிறார் என்று அறிந்து தான் பக்தர்கள் மந்திராலயத்தில் அலைமோதுகிறார்கள். பக்தி வீண் போகவே போகாது. நம்பிக்கை தான் மனித வாழ்வின் அடிப்படை அஸ்திவாரம்.

ஒரு சம்பவம் சொல்கிறேன். அபூர்வமான விஷயம்.

வெள்ளையர்கள் நம்நாட்டில் அத்து மீறி நுழைந்ததுமில்லாமல் கிழக்கிந்திய கம்பனி என்று ஒன்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்ட காலம். அப்போது தாமஸ் மன்ரோ என்பவன் கலெக்டர். வெள்ளையர் அரசாங்கத்திற்கு நிதி வசூல் பண்ணுபவன். பழைய தஸ்தாவேஜ்களை தேடி அலசி ஒவ்வொரு இடமாக வளைத்து போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மந்த்ராலயம் இருந்த இடம், ராகவேந்திரா மடத்துக்கு சொந்தம் என்பதற்கு போதிய ஆவணம் காட்டவில்லை எனவே மந்த்ராலயத்தை கம்பனி ஆட்சிக்குள் கொண்டுவர நிர்பந்தம். யாரோ சிலர் ஒரு துறவியின் பெயர் சொல்லி அதை அனுபவித்து வருகிறார்கள் என்று மண்ரோவிடம் செயதி போயிற்று. விசாரித்தான். நிறைய ஹிந்து பக்தர்கள் செல்கிறார்கள். ஆகவே அதை நமது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு முன் மந்த்ராலயத்தை அரசாங்க சொத்தாக இணைக்கும் ஆணை இடுவதற்கு முன் ஒரு முறை மந்த்ராலயத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு முடிவு எடுக்கலாம் என்று மன்ரோ வுக்கு தோன்றியது. மடத்தை அப்புறப்படுத்துவதற்கு முன் அதை பார்வையிட சென்றான். அவன் குதிரை பிருந்தாவனத்துக்குள் சென்றது. அவனை அறியாமல் அங்கே ஜீவ சமாதியாக இருக்கும் ராகவேந்திரர் என்பவருக்கு வணக்கம் செலுத்த மன்ரோ வுக்கு தோன்றியதால் பிருந்தாவனத்தில் நுழைந்தான் .

அந்தி நேரம். மங்கிய ஒளியில் மன்ரோ சுற்று முற்றும் பார்த்தான். எவருமே கண்ணில் படவில்லை. வனாந்திரம். குதிரை பிளிறியது. மேலே நடக்க அஞ்சியது. எதிரே நீண்ட மண் தரையில், சுற்றிலும் இடுப்பளவு மண் சுவர், மேலே தென்னை ஓலை வேய்ந்த கூரை, எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள். அந்த அமைதியான அந்த இடம் மன்ரோ மனத்தை கவர்ந்தது. குதிரை மீதிருந்து இறங்கி மெதுவாக நடந்தான். யார் இது?

எதிரே ஒரு அதிக உயரமற்ற சற்றே பருமனான தேகத்தில் யார் இந்த முதியவர் ? காவி உடை, கழுத்து நிறைய துளசி மாலை, உடலில் சந்தன கீற்றுக்கள், நெற்றியில் நாமம், ஆழ்ந்த, கூரிய, ஊடுருவும் அமைதியான கண்கள், வெண்ணிற தாடி, தலையை மூடிய மெல்லிய காவித்துணி. புன்சிரிப்பில் வெண்ணிற வரிசையான பற்கள் உறுதியான உதடுகளுக்கு இடையே தெரிந்தது

முகத்தில் அன்பு கொப்புளிக்க கண்களில் நட்போடு ''வாருங்கள்'' என்று பொருள் பட கையால் சைகை செய்து வரவேற்று தலை ஆட்டினார் முதியவர்.

மன்ரோ கை கூப்பி வணங்கினான் . அருகே யாருமில்லை. ஆங்கிலத்தில் மன்ரோ நிதானமாக முதியவரிடம் பேசினார்.
''நீங்கள் இந்த ஆலயத்தை சேர்ந்தவரா?
''ஆலயமல்ல, மடம் . நான் இங்கு தான் இருக்கிறேன்.'' தெளிவான ஆங்கிலத்தில் முதியவரும் பதிலத்தார்.
''ஓ மடம்.. மடம்.. இருக்கட்டும். இந்த மட விஷயமாக ஒரு முக்ய செய்தி தெரிவிக்கவேண்டும். ''.
''என்ன சொல்லுங்கள்''?
''இது எங்கள் அரசாங்க மனை. இதில் அத்து மீறி எந்த ஆதாரமும் இன்றி உங்கள் மடம் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஆவணங்களை நான் பார்த்தேன். இங்கிருந்து உங்களை அப்புறப்படுத்த ஆணை இட எனக்கு அதிகாரம் இருப்பதால், அதை செய்யுமுன் தீர விசாரிக்க நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்கிறார் மன்ரோ.
''இங்கே எந்த அத்து மீறலுமில்லை. உங்கள் ஆட்சிக்கு முன் இந்த பிரதேசத்தை ஆண்ட அரசன் இந்த இடத்தை எங்கள்
மட த்துக்காக ஒதுக்கி அது அரசாங்க தஸ்தாவெஜில் பதிவாகி இருக்கிறது. எனவே அதை பரிசீலனை செய்து பிறகு நீங்கள் முடிவெடுக்கவேண்டும்.''

மன்ரோ துருவித்துருவி கேட்டார். எந்த அரசன், எப்போது, எதற்காக, எப்படி எந்த இடத்தை மடத்துக்கு மான்யமாக அளித்தான் என்று கேட்டதற்கெல்லாம் அந்த முதியவர் புன்சிரிப்பு மாறாமல் பொறுமையாக, பெயர்கள், காலம் நேர குறிப்புகள் கொடுத்ததை மன்ரோ குறித்துக் கொண்டார்.

''பெரியவரே. நன்றி. நீங்கள் சொல்லும் விவரங்களை எனக்கு யாரும் இதுவரை தரவில்லை. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கு வந்தது நல்லதாக போயிற்று. எனது நல்லவேளை உங்களை நேரில் சந்தித்தது நல்லதாக போய் விட்டது'' என்கிறார் மன்ரோ .
அந்த பெரியவர் மன்ரோவிற்கு அந்த ஆஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார். ''இந்தாருங்கள்'', என தன் கையால் மன்ரோவுக்கு பிரசாதம் வழங்கினார்.
''இது என்ன? நான் என்ன செய்யவேண்டும்?''
''பொங்கல் என்று இதற்கு பெயர். இதை உண்ணவேண்டும்.'''
''ஒ நான் அப்படியே செய்கிறேன்''
அதை ஜாக்ரதையாக வாங்கிக்கொண்டு ''இதை இன்று என்னுடைய உணவோடு கலந்து உண்கிறேன் '' என்றார் மன்ரோ. இவளவு நல்லவராக இருக்கிறாரே, யார் என்று சொல்லவில்லையே என யோசித்து திரும்பி போகுமுன்பு அவரை வணங்கி
''இவ்வளவு நேரம் எனக்கு எல்லாவற்றையும் திருப்திகரமாக விளக்கினை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்றார் மன்றோ.
''என்னை ராகவேந்திரர்'' என்பார்கள்
''ஒ இந்த பெயர் கேட்டிருக்கிறேன். அது நீங்கள் தானா? ஆனால் நீங்கள் பல வருஷங்களுக்கு முன்பே ........''
''ஆமாம். எனது ஸ்தூல சரீரம் இதோ இந்த ஜீவ சமாதிக்குள் இருக்கிறது..''..

மன்ரோ அதிசயித்து சிலையானார். அன்று அங்கே சிலையாக நின்று தாமஸ் மன்ரோ வை சென்னையில் தீவுத் திடலில் அழகிய ஒரு குதிரை நிற்க கம்பீரமாக அதன் மீது ஆரோகணித்து அமர்ந்த சிலையாக இன்றும் காண்கிறோம். ராகவேந்திரரை நேரில் தரிசித்து அவர் கையாலேயே பிரசாதம் பெற்ற ஒரு யோக்கியமான வெள்ளைக்காரர் என்பதால் அவர் செய்த புண்யத்திற்காக சென்னை சென்றபோதெல்லாம் மன்ரோ சிலையை ஒரு முறை தரிசியுங்கள். இப்போதுள்ள நம்மவர்கள் மந்திரிகள் அதிகாரிகள் ஒன்றும் விசாரிக்காமலேயே தவறான சட்டங்கள், தீர்மானங்கள் அதிகாரங்கள் இடும் நிலையில் ஒரு வெள்ளைக்காரன், சர்வ அதிகாரமும் தனது கையில் இருந்தும் ஒரு எளிய மடத்தை அதது மீறி அபகரித்த இடம் என்று அப்புறப்படுத்தாமல் நேரில் சென்று விசாரிக்கவேண்டும் என்று தோன்றி நியாயமாக நடந்த ஒரு நேர்மையான மனிதன் என்பதற்காகவாவது மன்ரோ சிலையை நேரில் காண்போம். ராகவேந்திரர் நினைவு வந்து மானசீகமாக அவரை வணங்குவோம்.

ராகவேந்திரரை சந்தித்ததிலிருந்து மன்ரோவுக்கு உள்ளே ஏதோ ஒரு விவரிக்கமுடியாத சந்தோஷம் தோன்றியது. நாகபாசத்தில் கட்டுண்டவர் போல் ஆனார். எந்த நாளில் ,எந்த ஓலைச்சுவடியில், எந்த அரசாங்க முதிரையுடன், மந்த்ராலயம் மடத்துக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை மகான் தெரிவித்ததெல்லா வற்றையும் விவரங்கள் சேகரித்துக் கொண்டு சென்னபட்னம் வந்து அதிகாரிகளை அனுப்பி அவற்றையெல்லாம் சேகரித்து, மீண்டும் அவற்றை பரிசீலித்தார். தேடிய ஆவணங்கள் மஹான் சொன்ன இடங்களிலேயே இருந்தன. மந்திராலயம் இருந்த நிலமும் தானமாக அளிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது.

''மந்த்ராலயம் மடத்திற்கே சொந்தம். எனவே அரசாங்கம் அதில் தலையிட உரிமையில்லை'' என மன்ரோ ஆணை பிறப்பித்தார்.இன்று மந்திராலய பிருந்தாவனம் நமக்கு மிஞ்சியது. உனது நேர்மைக்கு நியாயத்துக்கு நன்றி மன்ரோ.

பிறகு குருவருளால் மன்ரோ தென் மாநிலங்களுக்கு கவர்னர் ஆனார். ராகவேந்திரரும் மன்றோவும் பேசியது எவர் கண்ணிலும் படவில்லை எவர் காதிலும் விழவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை என மன்றோ வெளியிட்ட அரசாங்க அதிகார செய்தி வெளிவந்தது. கீழே அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மகிழவும்.





AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்      J.K. SIVAN 
மஹா பாரதம் 

                                                     ஹனுமத்  தர்சனம் 
''மகரிஷி, எப்படி ஒவ்வொரு சின்ன  விஷயத்தையும்  கூட அப்படியே நேரில் பார்த்தமாதிரி உங்களால்  விவரிக்க முடிகிறது. எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை என்று ஜனமேஜயன் ஆனந்தமாக  சொன்னபோது வைசம்பாயனர்  ''மஹாராஜா, இதெல்லாம் ஈஸ்வர கிருபை.  என் குருநாதர்  வேத வியாசர்  இதை உனக்கு சொல்ல இதை பணித்தபோது அவரது பரிபூர்ண ஆசீர்வாதம் இருந்ததால் தான் அவரது ஞானத்தில் சிறிது எனக்கு கிட்டி இருக்கிறது என்று தான் சொல்வேன். மேலே நடந்ததை சொல்கிறேன் கேள் '' என்கிறார் முனிவர்.

++                                                                

''அண்ணா, இதை என் வாழ்வில் ஒரு மகத்தான சம்பவமாக நான் கருதுகிறேன்.  உங்களை பற்றி எவ்வளவு கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து உங்கள் ஆசியை பெற நான் பாக்யம் செய்தவன். எனக்கு வெகுநாளாக மனதில் ஒரு ஆசை அதை நிறைவேற்றுவீர்களா''    என்று  கேட்ட பீமன் ஹனுமான்  பாதங்களை இருக்கரத்தாலும் பிடித்துக்கொண்டு வணங்கினான்.

''உனது ஆசை என்ன சொல் பீமா?

''நீங்கள்  100 யோசனை நீளம் கடலைத்  தாண்டும் முன்பு  எடுத்த  விஸ்வ ரூபத்தை நான்  கண்ணாரக் காணவேண்டும்''

''இல்லை  பீமா,  அதை நீ காண முடியாது.  த்ரேதா யுகத்தில்   நடந்தது அது.  அப்போதைய உருவங்கள்  இப்போது மாறிவிட்டன. அளவில் குறைந்து விட்டன. யுகத்துக்கு யுகம்  மாறுதல்  அநேகம்.  பழங்கதை வேண்டாம் உனக்கு.  சந்தோஷமாக திரும்பு.  உனக்கு  சர்வ மங்களமும்  உண்டாகுக.''

''மன்னிக்கவேண்டும் அண்ணா.  உங்கள்  பழைய உருவத்தை நான் ஒரு கணமாவது  பார்த்தே ஆக வேண்டும். பார்க்காமல் இங்கிருந்து நகர மாட்டேன்  என்னை க்ஷமிக்கவேண்டும்.  ஆஞ்சநேய ப்ரபு,  கண்குளிர ஒரு முறை உங்களை அப்படி  காண அடக்கமுடியாத ஆவல் எனக்கு .''

 ''சரி,  நீ  பிடிவாதக்காரன்  பீமா  இப்போது என்னைப் பார்''  என்றார்  சிரித்துக் கொண்டே  ஹனுமான்.   பீமன் இரு விழிகள் பிதுங்க ஆ வென்று வாய் பிளந்து எதிரே பார்த்தான்.

ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  சிவந்த  தாமிர  நிறம், சிவந்த கண்கள், வெண்ணிற பற்களைக் கடித்துக்கொண்டு  விந்திய பர்வதம்  எதிரே நின்றது போல்  ஹனுமான்  இடுப்பில்  கைகளைத்  தாங்கி  நின்றார் .ஒரு கணம் நேரம் தான்  ஆனால் பல யுகங்களில்  தொடர்ந்து பார்த்து ஆனந்தித்து  கண்ட ஒரு அனுபவமாக  பீமனுக்கு  அது மனதில் பதிந்தது. அவனை அறியாமல் அவன் கரங்கள்  சிரத்தின் மேல்  குவிந்தது. மண்டியிட்டு  ஹனுமான் பாதங்களில் விழுந்தான். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

''பீமா,  இது ஒரு அளவு தான்  இருந்தபோதிலும்,   இந்த  அளவு போதும் உனக்கு.  என்னால்  நினைத்த  அளவுக்கு உயரவும்,  வளரவும்  முடியும்''

''ஆகா, அற்புதம்  அதிசயம்,  என்ன  புண்யம் எனக்கு.   போதும்,  போதும்,  அண்ணா,  என்னால் இதற்கு மேல் பார்க்க முடியவில்லை,  அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்,  எனக்கு  விதிர் விதிர்க்கிறது  தங்கள்  சக்தி ஸ்வரூபத்தை காண முடியவில்லை. கண்கள்  இருள்கிறது. தலை  சுற்றுகிறது.'' என்கிறான் பதினாயிரம்  யானை பலம் கொண்ட  பீமசேனன்.

''சரி பீமா,  இந்த வழியே  நேராகப் போ,   சௌகந்திகா புஷ்ப மரம் அங்கே தான் குபேரனின் தோட்டத்தில்  இருக்கிறது.   அதை  யக்ஷர்களும்  ராக்ஷசர்களும் காவல் காக்கின்றனர்.   மனிதர்கள் அதை தொடக்கூடாது. பறிக்கக்கூடாது.. உனக்கு எப்போதாவது என் உதவி தேவை என்றால் என்னை  நினைத்துக்கொள் நான் அங்கே உன்னிடம் இருப்பேன் '
 என்று அருள்கிறார் ராம பக்த ஹனுமான்.

ஹனுமான்  தனது உருவத்தைச்  சுருக்கிக்கொண்டார். பீமனை ஆலிங்கனம் செய்தார்.  அவர்  அணைத்தபோது ஹனுமானின் பலம்  பீமனுக்கு புரிந்தது. அவன்  புத்துணர்ச்சி பெற்றான்.

''ராமனை நினை, சர்வ சக்தியும் பெறுவாய்.  உனக்கு ஒரு வரம் தருவேன் கேள்.  '' துர்யோதனாதிகளைக் கொல்லவேண்டுமா, அவர்களை நகரத்தோடு சேர்த்து அழிக்கவேண்டுமா,  அவர்களை  கட்டி  தூக்கி கொண்டுவந்து உன் காலடியில் போடவேண்டுமா. சொல். செய்கிறேன்'' என்றார்  ஹனுமான்.
''உங்கள் அருள் இருந்தாலே  போதும். எங்களை வாழ்த்துவதே  போதும். உங்கள்  பராக்கிரமம்  நான்  அறிவேன்.''

'''நல்லது  பீமா.  பாண்டவர்களுக்கு  என்  ஆசி. உங்கள் யுத்தத்தில்  அர்ஜுனன் கொடியில்  நான் இருப்பேன்.  காற்றில்  என் பலம் கலந்து உனது சப்தத்திலும்  உங்களது ஆயுதங்கள்  செல்லும் வேகத்திலும்  நான்  சக்தியாக இருப்பேன்.  எதிரிகள் வீழ்வார்கள்  போதுமா?

ஹனுமான்  மறைந்தார்

 தான் கண்டது கனவா  நினைவா  என்றே  புரியாத நிலையில்  பீமன் ஹனுமான் சென்ற திசையையே  பார்த்திருந்தான். 

''என்ன பலம், என்ன ராம பக்தி என்று ராமனின்  பராக்ரமத்தில் எண்ணம் போயிற்று. பிறகு  ஒருவழியாக தன்னை சுதாரித்துக்  கொண்டு  கந்தமாதன பர்வதத்தில் நடந்தான். கால்  தானாகவே  குபேரனின் தோட்டத்தை நோக்கி சென்றது.  உச்சி வெயில் வந்தும் கூட  அவன் நடந்து கொண்டு தான் இருந்தான். இன்னும்  சௌகந்திகா  புஷ்ப மரம் தென்படவே இல்லையே.  ஹனுமான் சொன்ன பாதையில் சென்றுகொண்டிருந்தான்.  திடீரென்று காற்றில்   அந்த சுகந்த  நறுமணம்  கலந்து வீசியது.  அருகே வந்துவிட்டோம் என்று  பீமன் சுற்றுமுற்றும்   பார்த்தான். கைலாச பர்வதம் பனிமூடி  காட்சி  அளித்தது.  தாமரை பூத்த ஏரி  ஒன்று அருகே. அதன் கரையில் க்ரோதவாசர்கள்  என்ற  பெயர்கொண்ட  ஆயிரக்கணக்கான  ராக்ஷசர்கள் ஆயுதங்களோடு  காவலிருந்தனர் . ஏரிக்கரையில்   குபேரனின் நந்தவனம்  தெரிந்தது.  அதில் அடர்ந்த மரங்கள், செடிகள், கொடிகளோடு  பூத்துக் குலுங்கியது. அந்த  ஏரியிலும்  சௌகந்திகா தாமரை மொட்டுகள்  நிறைய  இருந்தன.  ஒரு வாய்  ஏரி  நீரை அள்ளிக் குடித்தபோது  அமிர்தமாக இனித்தது. சௌகந்திகா  மலரின் வாசனை  அந்த பிராந்தியத்தையே மயங்க வைத்தது.

பீமனைப்   பார்த்ததும்  அந்த  ராக்ஷசர்கள் சூழ்ந்து கொண்டு  '' யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? என்றபோது,  ''நான்  பாண்டுபுத்திரன், யுதிஷ்டிரன் தம்பி, பீமசேனன். எங்கள்  யாத்ரையில்  வழியில் ஒரு சௌகந்திக  தாமரை மலர்  காற்றில் இங்கிருந்து பறந்து வந்தது.  அதன் நறுமணம் கவர்ந்திழுக்க  பாஞ்சாலி அந்த புஷ்பங்கள்  வேண்டும் என்று விரும்பியதால் அதை பறித்து கொண்டு போக இங்கே வந்திருக்கிறேன்'' என்றான் பீமன்.

''தேவர்கள் மட்டுமே  வரும் இடம்  இது.  குபேரன் அனுமதியைப் பெற்றே  இங்கு வரவேண்டும். அத்து மீறினால் மரணம்.''

பீமன்  சிரித்தான்.   இது கந்தமாதன மலையின்  பள்ளத்தாக்கு, குபேரனின் சொந்த இடம் இல்லை. பரமேஸ்வர க்ஷேத்ரம்.  எல்லோருக்கும் சொந்தமானது. நான் எனக்கு வேண்டியதை எடுத்துச் செல்வேன். எவரையும் அனுமதி கேட்டு நிற்பவன்  நான் இல்லை'' எனக் கூறி  ஏரியில் இறங்கினான் பீமன். அவர்கள்  அவனைத் தாக்க, நூற்றுக்கணக்கானோர் அவனால் மரணமடைய, மற்றவர் ஓடிவிட்டனர்.  ஏரியின்  அம்ருத நீர் பருகினான்.  புது சக்தி வந்தது. சௌகந்திகா  தாமரைகளை பறித்தான்.  இதற்குள் குபேரனிடம் செய்தி போனது.  குபேரன் சிரித்தான்.

''பீமன் எத்தனை தாமரைகளை வேண்டுமானாலும் திரௌபதிக்கு எடுத்து செல்லட்டும். இது எனக்கு  முன்பே தெரிந்த விஷயம்''  என்றான் குபேரன். ஒருவேளை ஹனுமார் சொல்லியிருப்பாரோ?
தொடரும்...

GITANJALI

கீதாஞ்சலி J.K. SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

கண்ணனை காண்பதெப்போ?

நீ வருவாய் வருவாய் என்று நான் காத்துக்கொண்டே தானே இருக்கிறேன்.
இதில் எனக்கு பகலுமில்லை, இரவுமில்லை. எப்போதும் என்றால் எனக்கு எப்ப்ப்ப்போதுமே தான்.

அப்பாடா .... மெதுவாக அவன் அடிமேல் அடி எடுத்து மெதுவாக நடந்து வருவது இந்த நிசப்தத்தில் கேட்கிறது. ஆம் வந்து விட்டான். இதோ இதோ வருகிறான். வந்துகொண்டே இருக்கிறான்.எப்போதும் வருபவன் தானே.
இன்றா ,நேற்றா, காலையா மாலையா, இரவா பகலா, யுகம் யுகமாக அவன் வருவான். இதோ வருகிறானே.

என் உணர்ச்சிகள் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் உணர்ச்சிக்கேற்றபடி அவனை பாடுவேன். எந்த உணர்ச்சியில் என் மனம் எப்படியெல்லாம் துணிகிறதோ அப்படியெல்லாம் பாடினாலும் ஒரே வார்த்தை ''அவன் வருகிறான். வருகிறான். இதோ வருகிறான்.'' இது ஒன்றே தான்.
வெயில் காலத்தில் பளிச்சென்று வெளிச்சத்தத்தில், சுள்ளென்று வெயிலில் வியர்த்து கொட்டினாலும் அவன் வருகிறான். அதோ அந்த காட்டுப்பாதையில் மர நிழலில் வந்து கொண்டே இருக்கிறான். எப்போதும் வருவான்.

வெயில் காலத்தில் என்று சொன்னேனா? கொட்டும் மழை காலத்திலும் தான். சீக்கிரமே இருட்டிவிடும். எங்கும் கும்மிருட்டு. இடி விடாமல் இடிக்கட்டுமே. அதனால் என்ன? அவன் என்னைத்தேடி வருகிறான். வந்து கொண்டிருக்கிறான். எப்போதும் வருபவன் வருவான்.

நான் படும் கஷ்டங்களை, பட்ட துயரங்களை நான் எதற்கு லக்ஷியம் பண்ணவேண்டும். அவனது மெத்து மெத்தென்ற காலடிகள் என் இதயத்தில் படும்போது தடவிக் கொடுக்
கும்போது அப்பா, என்ன சுகம், அந்த தங்கமான அவன் காலடி என் இதயத்தை, மனத்தை தொடும்போது என்ன ஆனந்தம். சுகம், சொல்ல வார்த்தை அகப்படவே இல்லையே. என் சந்தோஷம் எங்கும் அவன் காலடி போலவே பளபளக்க ஒளிவீசி ரெக்கை கட்டி பறக்கிறது. ''பாரோ கிருஷ்ணயா.....மா இன்டிகி.... ''

மேலே கண்டதை ரபீந்திரநாத் தாகூரின் ஆங்கில ''கீதாஞ்சலி'' மொழிபெயர்ப்பில் ரசியுங்கள்:

Have you not heard his silent steps? He comes, comes, ever comes.
Every moment and every age, every day and every night he comes, comes, ever comes.
Many a song have I sung in many a mood of mind, but all their notes have always proclaimed, `He comes, comes, ever comes.'
In the fragrant days of sunny April through the forest path he comes, comes, ever comes.
In the rainy gloom of July nights on the thundering chariot of clouds he comes, comes, ever comes.
In sorrow after sorrow it is his steps that press upon my heart, and it is the golden touch of his feet that makes my joy to shine.

_____________________________

SUR SAGARAM



சூர் சாகரம்   J.K. SIVAN
                                                        

                              கண்ணனை  பணி  மனமே...!!

பக்தி பரவசத்தால்  தன்னை இழந்து  இறைவனோடு ஒன்றி அவனது ப்ரபாவத்தில் மூழ்கி ஆனந்த மயமான  நிலையிலிருக்கும்  மஹான்கள் இந்த உலக சிந்தனை துளியும் இல்லாதிருப்பவர்கள்.  அவர்களது வாக்கில் சத்யம் எதிரொலிக்கும்.  அவர்கள் எழுத்தில்  கற்பனையில் உண்மை பிரதிபலிக்கும்.  நம்மால் காண முடியாததை எளிதில் ஆனந்தமாக கண்டு  ரசிப்பவர்கள்,  அனுக்ரஹிப்பவர்கள்.

அப்படி ஒருவர் தான் கண்ணற்ற சூர் தாசர்.  கண்ணன்  அவர் மனதில் நிரம்பி, மூச்சாக  அவரிடமிருந்து வெளிப்பட்டு  பாடலாக வெளிவந்து எவராலோ எழுத்தில்   இன்று நம் முன்னே புத்தகமாக நிற்கிறான். அவனை  அந்த புத்தகத்தில் ரசிக்கவேண்டாமா?  அதன் மூலம் சூர்தாஸின் இன்பத்தில் கடுகளவாவது நாமும் பங்கு கொண்டு  அனுபவிக்க வேண்டாமா?
 


சூர்தாஸ் சொல்கிறார்: 

''ஹே  மனமே  வா  உனக்கு ஒரு  நல்ல வழி சொல்லித்தருகிறேன்.  அங்கே இங்கே ஓடாதே. அதோ பார்  ஒளிவீசும் சிவப்பு நிறத்தில்  ஏதோ  தெரிகிறதே  என்னவென்று  புரிகிறதா?  என்ன யோசனை?  நானே சொல்கிறேன்.அது செந்தாமரைமலர்ப்  பாதங்கள்.

ஓ....யாருடைய பாதம் என்று தெரியவில்லையா?அவன் யாரென்று  யோசிக்கிறாயா ? அதுதான்  அப்பா,  நமது நந்தகோபன் மகன் கிருஷ்ணன். எவன் திருவடி துணை  இருந்தால் பயங்கள் நீங்குமோ அவன்.

அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது. அப்படிப் பிறந்து, இந்த வாழ்க்கை சம்சார கடலை தாண்டவேண்டாமா? அதற்கு சாதுக்களின் சத் சங்கம் தேவை இல்லையா?

இதோ என்னை பார்.  இரவு எது பகல் எது எனக்கு?  எல்லாமே இருட்டு.  .எல்லாமே  வெளிச்சம்.   தூக்கம் ஏது?  உடலில் உஷ்ணம் குளிர்ச்சி, மழை வெயில்  படுவது தெரிகிறது. அனுபவிக்கிறேன்.  அற்ப சுகத்தை, (என் விஷயத்தில்  காகித பணத்தை தேடி,)  நாடி எத்தனையோ வருஷங்கள் கொடிய,  கருமிகளுக்கு உழைத்தேன். என்ன பிரயோஜனம்?

நான் யார்?  அந்த கோவிந்தனின் தாசானு தாசன்.   நவ வித பக்தி என்பார்களே  அதில் விருப்பம்  வேண்டாமா?  அது என்னவா? சொல்கிறேன்.  என் ஹரியின் பெருமைகளை கேட்பது,  அவன் பெருமைகளை நாவினிக்க சொல்வது, பேசுவது, ஸ்மரிப்பது, கணநேரமும் விடாமல் அவனை நினைவினில் நிறுத்திக் கொள்வது, பிரார்த்திப்பது, அவன் செந்தாமரை திருவடிகளில் சரணடைவது, நறுமண வாசமிகு மலர்களால் அவனை அர்ச்சிப்பது, வாசனாதி திரவியங்களால் அவனை மகிழ்விப்பது,  அவனுக்கு உற்ற நண்பனாக சேவை புரிவது, இதையெல்லாம் விடு..... என்னையே  அவனுக்காக மறந்து இழந்து அவனுக்கு என் உயிர் உடல் பொருள் ஆவி அனைத்தும் அர்ப்பணிப்பது.... போதுமா ??

போதும் போதும் போதும்.....  என்கிறார்  சூர்தாஸ் இந்த அருமையான பாடலில்:

Bhajahoon re man sri nand nandan abhaya charan arvind hey
Durlabh manav janam satsange tar jaave bhav sindh re
Sheet Aatap Vatavariyat , ae din aavanijaani re
Biphale sevenu kripan durjan chapal sab sukh lagi re…
Sravan Kirtan Smaran Vandan Paadsevan Dasya re
Poojan Sakhijan Atmanivedan , Govind Das abhilashi re…
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare . 

MY SCHOOLING



இப்போது எழுத வருகிறது... J.K. SIVAN

​மாறுதல் ஒவ்வொரு வினாடியும் தான் நடந்து கொண்டு வருகிறது. உருவத்தில் மட்டுமா? குணத்திலும் தான்.
சமீபத்தில் சூளைமேடு சென்றபோது அதற்கும் நான் வாழ்ந்த சூளைமேட்டுக்கும் ஸ்நான பிராப்தி கூட இல்லை.
​அப்போது மண் ரோட். வளைந்து வளைந்து ரெண்டு பக்கமும் புதர், செடிகளோடு ரோடு இருந்தது. விளக்கு கம்பங்கள் கிடையாது. காம்பௌண்ட் சுவர் பார்க்கவே வழியில்லை.

நான் ​ முதலில் அக்ஷராப்யாசம் கற்றுக்கொண்டது வடபழனியில் பிள்ளைமார் தெருவை தாண்டி இருந்த -- இப்போது புலியூரா, கோடம்பாக்கமா? -- ஒரு பாண்டுரங்கன் கோவில் பக்கத்து ஆரம்ப பள்ளியில். கூரைக்கட்டு பள்ளிக்கூட​ம் . ​மண் தரை. ​ வெள்ளைக்காரன் கால கார்பொரேஷன் ஸ்கூல். சம்பளம் வாங்காத பள்ளிக்கூடம். ஐந்து வயது முடிந்தால் தான் ஒண்ணாங்கிளாஸ் சேர்த்துக் கொள்வார்கள். யாருக்குமே வயசு ரெகார்ட் கிடையாது. கேட்கமாட்டார்கள். கேட்டால் பள்ளிக்கூடம் வரமாட்டார்கள் என்று தெரியும். குத்து மதிப்பாக சொல்வதை எழுதிக் கொள்வார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரோ அல்லது வகுப்பு ஆசிரியரோ. அவ்வளவு தான். சிலர் பள்ளிக்கூடத்தில் மத்தியான வேளையில் பால் கொடுக்கிறார்கள் என்று அறிந்து நாலு வயது குழந்தைகளை கூட கொண்டு வந்து ஆறு வயது என்று சொல்லி சேர்ப்பது தெரிந்து வகுப்பு ஆசிரியர் ஒரு பிளான் போட்டார். வாசல்படியில் அல்லது சுவற்றில் ஒரு இடத்தில் பென்சிலால் ஒரு கோடு . அதன் கீழ் நிற்க வைத்து தலை கோடை தொட்டால் ஐந்து வயது முடிந்ததாக ஏற்றுக்கொள்வார். சில பையன்கள் எட்டு வயதானாலும் குள்ளம். அப்போது என்ன செய்வது? அதற்கும் ஒரு விடை எந்த ரூபத்தில் என்றால். பையனோ பெண்ணோ, இடது கையை தூக்கி தலைக்குமேல் சுற்றி வலது காது மடலை தொடவேண்டும். தொட்டால் ஐந்து வயது முடிந்துவிட்டது. நிறைய குழந்தைகள் ''கை நீளம்'' இல்லாத நல்ல குழந்தைகள் தொடமுடியாமல் கை வளர காத்திருந்தனர்.

வடபழனி கிராமத்தில். காவேரியமா ஸ்லேட்டில் ''அ'' னா ''ஆ'' வன்னா பெரிதாக எழுதிக் கொடுத்தாள் ஸ்லேட்டின் ரெண்டு பக்கமும் ஒவ்வொரு எழுத்து. அதன் மேல் அப்படியே எழுதவேண்டும். எழுத பழக வேண்டும். முடியவில்லை. இப்படி எல்லாமா கோணல் மாணலாக வளைந்து வளைந்து எழுத்து இருக்கும். அடேயப்பா எழுதுவது இத்தனை கஷ்டமா? எனக்கு பயமாகிவிட்டது. பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு ஓடிவிடலாமா? இதை எப்படி நம்மால் எழுதமுடியும்​?​. ஒரே வளைவாகவே இருக்கிறதே. இதில் எது ஆரம்பம். எது முடிவு.? ஸ்லேட்டுக் குச்சி (பலப்பம் என்று அதற்கு நாமகரணம்) பிடித்துக்கொண்டிருந்த என் கையை பற்றிக்கொண்டு காவேரியம்மாள் அந்த '' அ" "ஆ'' எழுத்துகளின் மேல் பிரயாணம் தொடர்ந்தாள் . என் பல்பம் அவற்றின் மேல் ஊர்ந்தது. ஆயிரம் நடுக்கங்கள். காலம் சென்றது. காவேரியம்மாளும் காலமாகிவிட்டாளோ, பள்ளிக்கூடத்தில் இருந்து நிறுத்தி விட்டார்களோ தெரியாது.​ அவள் கற்றுக்கொடுத்த தமிழில் தான் இப்போது எழுதுகிறேன்.
​அப்புறம் பள்ளிக்கூடத்தில் ஒரே வாத்யார் ​வரதராஜ முதலியார்​ தான். சிறு காளை பூட்டிய ஒற்றை மாட்டு வண்டியில் தான் வருவார். யாரோ சைதாப்பேட்டை என்ற ஒரு ஊரிலிருந்து தினமும் வருகிறார் என்பார்கள். சைதாப்பேட்டை எங்கே இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. யானைக்கால் என்பார்களே (ELEPHANTIASIS ) இடதுகால் பெரிசாக இருக்கும் . வேஷ்டியால் இழுத்து மூடிக்கொண்டு வருவார். நடக்க முடியாமல் கஷ்டப்படுவார். கோபம் ரொம்ப ஜாஸ்தி. காளை மாட்டை அடிக்கும் கொம்போடு தான் எங்களையும் நெருங்குவார். அவ்வப்போது திடீரென்று நாற்காலியில் மரத்தடியில் தூங்கிவிடுவார். எழுப்பினால் கே திட்டுவார்.. வீட்டில் என்ன கஷ்டமோ?

அவ்வப்போது அவரது வெள்ளை காளை மாட்டுக்கு தண்ணீர் பக்கெட் கொண்டு வைப்பது, அதற்கு புல் போடுவது என்கிற வேளைகளில் நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதை பராமரித்து தடவிக்கொடுப்போம். அப்பாதுரை கெட்ட வார்ததையில் முதலியாரை திட்டிக்கொண்டு காளைமாட்டு சாணியை அப்புறப்படுத்துவார்.

​நான் ​இப்போது ரெண்டாவதில் இருந்து மூன்றாவது. நானாகவே எழுதுவேன். எழுத்துக் கூட்டி படிப்பேன். ​ தப்பாக படித்தால் ​தலையில் குட்டுவார் முதலியார். கஷ்டப்பட்டு​ ஒருவழியாக ''கல்லார்க்கும் கற்றவர்க்கும்'' வள்ளலார் செய்யுள் மனப்பாடம் ஆகியது.

பள்ளிக்கூடத்தில் எப்போதும் எங்கள் வகுப்பு கப்பும் கிளையுமாக நிறைய பறவைகள் வாழ்ந்த தூங்கு மூஞ்சி மரத்தடியில். பெரிய மரம். நிறைய கிளைகள். இலைகள். வெள்ளைக்காரன் காலத்து மரம். நிழல் கொடுத்தது. நிறைய பறவைகள் சத்தமும் போடும். எச்சமும் இடும். புத்தகத்தில், எழுதும்போது நோட்டில், தலையில், பை மேல். சட்டையில், நிறைய பறவைகள் எச்சம் பெற்றிருக்கிறேன். ​ வடபழனி ஆண்டவர் கோவிலோ, சினிமா ஸ்டுடியோக்களோ தலை எடுத்து உயராத காலம். AVM விஜயா வாஹினி என்கிற பேர்கள் பேச்சில் அடிபடும். கேட்டிருக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் மணியடித்து கதவுகள் சாற்றி, பெருக்கி, துடைக்கும் அப்பாதுரை பெரிய குரலில் சத்தம் போட்டால் பறவைகள் பறந்து போகும். ஒருமணி நேரத்துக்கு ஒருதடவை வந்து கத்துவார். இல்லாவிட்டால் அவற்றின் தொந்தரவு சத்தம் அதிகம்.

​நான்காவது முதல் சுப்ரமணிய அய்யர்​ தலைமை ஆசிரியராக இருந்த கார்பொரேஷன் ​ பள்ளிக்கூடத்தில். சூளைமேட்டில். கோடம்பாக்கத்தில்.​ ​நான்காவது ஐந்தாவது. அந்த அனுபவம் வினோதமானது. சமீபத்தில் ஒருநாள் அந்த பள்ளிக்கூடத்தை பார்த்தேன். பெரிய கட்டிடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் படிக்கிறார்கள் போல் இருக்கிறது. மாடிகட்டிடமாக உயர்ந்து விட்டது. ஒரு நிமிஷம் நின்று சுப்ரமணிய அய்யரை நினைத்துவிட்டு கண்களில் பெருகிய ஜலத்தை துடைத்துக் கொண்டேன். அவரைப் பற்றி சொல்கிறேன்.








Thursday, November 29, 2018

POONTHANAM

​​ ​பூந்தானம்.

​என்னோடு ​கிருஷ்ணனிடம் போக​ யார் ரெடி? ​- J.K. SIVAN


இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். நம் ஊரில் ​எத்தனை எத்தனை சிதம்பரங்கள், பழனிகள்,​ மதுரைகள் ,​ காசிகள், திருமலைகள், ​ என்ற ஊர்களின் பெயர்களில் மனிதர்கள். ​

மலையாள தேசத்தில் குடும்ப வீட்டின் பேரில் நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் காணாமல் போய் விட்டது. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர் பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?. கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்தகுழந்தை திடீரென்று இறந்து விட்டது​. ​ எப்படி பட்ட சோகம்? கிருஷ்ணனிடம்​ சென்று ஓ வென்று கதறினார்.

.குருவாயுரப்பன் என்ன செய்தான்?

“பூந்தானம்​, நீ ஏன் வீணாக கவலை​படுகிறாய்? .​ நானே உ​ன் பிள்ளை தானே. எங்கே உ​ன் மடி​யைக் காட்டு நான் வந்து உட்காருகிறேன். என்னை கொஞ்சம் கொஞ்சேன்? ​”

​குருவாயூரப்பன் உன்னி கிருஷ்ணன் பூந்தானம் மடியில் வந்து​ தொப்பென்று விழுந்து ​ அமர்ந்து கொண்டான். ​''கொஞ்சம் உன் மடியில் ​படுத்து கொள்ளட்டுமா​?​” என்றான்.

தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.

"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு ?"

கடல் ம​டை யென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்​தி ​ ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்கவில்லை. ​அவர் வேறு யாருமில்லை. ​பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாரயணீயம் எழுதியவர். ​ ​அவர் பூந்தானத்தை​ப் பற்றி கேள்விப்பட்டார்.

' சே, இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்​''​ என்று இகழ்ந்தார். ​

நண்பர்களே நான் இதை எழுதும்போது பட்டாத்திரி ஆணவத்துடன் சொன்னது உங்களுக்கே பிடிக்கவில்லையே, ​ குருவாயூரில் கிருஷ்ணனுக்கு இது பிடிக்​குமா? சரியான நேரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

ஒருநாள் ​மேப்பத்தூர் நாராயண பட்டாத்ரி ​ குருவாயூரில் ​ கிருஷ்ணனை காண வந்தபோது ​கணீரென்று கிருஷ்ணன் முன் நின்று தனது நாராயணீயத்தை ஆரம்பிக்க தயாரானார்

கிருஷ்ணன் குறுக்கிட்டான்

''பட்டாத்ரி​, நான் சொல்கிறேனே என்று வருத்த​ப்​படாதே எனக்கென்னமோ உன்​ ஸம்​ஸ்க்ரி​த​ இலக்கணம் தோய்ந்த​ ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே ​நான் என்ன செல்வேன் நீயே சொல்லு ​?​" என்றான் கிருஷ்ணன்.

அதற்கப்பறம் ​என்ன. ​ பட்டாத்ரி ஓடி​ச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார் என்பது சாதாரண விஷயம்.

பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் காலம் ஓட ஒருநாள் கிருஷ்ணன் பூ​ந்தானத்தை இனி தன்னுடன் வைத்துகொள்ள ஆசை மேலி​ட்டது. ​

''​ ​பூந்தானம் நீ ​என்னிடம் ​வாயேன் ​​'' ​ என்று அழைத்தான். பரம சந்தோஷம் அவருக்கு. ​'' நான் கிருஷ்ணனிடம் போகப்போகிறேனே, நீங்கள் ​யார் யார் எல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் வருகிறிர்கள்​? ''​ என்​று பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆனந்தமாக கேட்டார்.

​தீயை மிதித்தது போல் அவனவன் தலை தெறிக்க ஓடிவிட்​டான். இதென்ன அக்கிரமம். இந்த பைத்தியக்காரன் நம்மை உடனே மேல் லோகம் வரியா என்று கேட்கிறான். அவன் இருக்கும் திசையிலிருந்து வெகு தூரம் போனால் தான் உயிர் தப்பும் என்று கண்ணில் படவே இல்லை.

​பூந்தானம் வீட்டில் ​வேலை செய்யும் ஒரு தாயம்மா ​மட்டுமே ''​அய்யா என்னையும் ​ உங்களோடு கிருஷ்ணனிடம் அழைத்து​ப்போகிறீங்களா​?'' ​ என்று வேண்டினாள். குறித்த நேரத்தில் உடலோடு பூந்தானமும் அந்த பெண்மணியும் கிருஷ்ணனோடு ​ வைகுண்டம் சென்று ​ இரண்டறக் ​ கலந்தனர்

பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை. உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே​ ​
​​

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...