Wednesday, November 7, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்.

பரசுராமன் கதை

''மகரிஷி, என் கொள்ளு தாத்தாக்கள் தீர்த்த யாத்திரை சென்ற விவரங்கள் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. அதுவும் லோமசர் மகரிஷி எவ்வளவு அழகாக அந்தந்த இடங்களின் மஹிமையை விளக்குகிறார். இப்படிப்பட்ட ஒருவரோடு அல்லவோ தீர்த்தயாத்ரை செல்லவேண்டும். இன்னும் சொல்லுங்கள்'' என்றான் ஜனமேஜயன். வைசம்பாயனரும் தொடர்ந்து சொல்கிறார்.
பாண்டவர்கள் ரிஷி லோமசரோடு அங்கிருந்து கங்கை கடலில் கலக்கும் இடம் அடைகிறார்கள். கலிங்க தேசம் செல்கிறார்கள். வைதர்ணியில் ஸ்நானம் முடிந்து மகேந்திர மலையை நோக்கி நடந்து அங்கே இரவு தங்குகிறார்கள்.

''யுதிஷ்டிரா இது பரசுராமனோடு சம்பந்தப்பட்ட இடம் என உனக்கு தெரியுமா?'' என்று கேட்கிறார் லோமசர்.

''இல்லையே ஸ்வாமி , நீங்கள் சொல்லுங்கள் கேட்கிறேன்'' என்றான் யுதிஷ்டிரன் விடுவானா? ''லோமச மகர்ஷி, எனக்கு பரசுராமன் பற்றி சொல்லுங்களேன்'' என்றான்.

நடந்து கொண்டே பேசினார்கள்.

''தர்மா, ஜமதக்னி என்கிற ரிஷியின் புத்திரன் பரசுராமன். பிருகு வம்சம். அர்ஜுனன் என்கிற பெயரில் (உன் தம்பி அர்ஜுனன் அல்ல) ஹைஹய குல அரசன் கார்த்தவீரியன் மகன், தனது பலத்தால் ரிஷிகளையும், மற்றவரையும் துன்புறுத்தினான். துன்பம் தாங்க முடியாமல் போனால் தானே எப்போதும் நாராயணனிடம் விஷயம் போகும்.

அப்போது கன்யாகுப்ஜத்தில் ஒரு ராஜா. கதி என்று பெயர் கொண்ட அவன் வதரி வனத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் பிறந்து அவளை பிருகு ரிஷி குமாரன் மணந்து கொள்ள விரும்பினான்.

''பிராம்மணா,எங்கள் குல வழக்கப்படி, நீ 1000 பிரவுன் கலர் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்து இவளை மணந்துகொள்'' என்றான் கதி. பிராமணன் வருணனை நோக்கி தவம் செய்து குதிரைகளைப் பெற்றான். கன்னியைப் பெற அவன் தவமிருந்து குதிரைகளைப் பெற்ற இடம் தான் ''கன்யா குப்ஜம்''.

சத்யவதி என்கிற அந்த அரசனின் பெண் பிருகுகுமாரனின் மனைவியாகிறாள். ஒரு நாள் பிருகு வருகிறார். மருமகளை வாழ்த்தி வரம் கேள் தருகிறேன் என்கிறார்.

''மகரிஷி, எனக்கும் என் அம்மாவுக்கும் (?) பிள்ளைக் குழந்தைகள் பிறக்க அருள் புரிய வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்''

''இந்தா இந்த இரண்டு தனித் தனி பாத்திரத்தில் இருக்கும் பால் அன்னத்தை நீங்கள் இருவரும் அருந்துங்கள். அதற்கு முன் நீங்கள் இருவரும் குளித்து, உபவாசமிருந்து நீ ஒரு அத்திமரத்தையும், உன் தாய் ஒரு அரசமரத்தியும் சுற்றி வணங்கி அதை ஆலிங்கனம் செய்து பிள்ளை வரம் வேண்டி பிறகு தனித்தனியாக நான் கொடுத்த இந்த உணவை புசிக்கவேண்டும்.''என்கிறார் பிருகு.

தாயும் மகளும் தவறான மரத்தை சுற்றி அதை ஆலிங்கனம் செய்து பாத்திரத்தை மாற்றி உணவை உண்டார்கள். பிருகு வருகிறார். தனது மருமகளும் அவள் தாயும் ஒருவருக்கு கொடுத்ததை மற்றவர் மாற்றி உண்டு மரங்களை மாற்றி ஆலிங்கனம் செய்தது தெரிகிறது.

'' சத்யவதி, உனக்கு பிறக்கும் மகன் ரிஷி குமரானாக வேதம் கற்றும், க்ஷத்ரிய வீரம் கொண்டவானாகவே இருப்பான். உன் தாய்க்கு க்ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும் சாத்வீகனாக வேதத்தில் சிறந்தவனாக இருப்பான்.''

''சுவாமி, எனக்கு மகன் அவ்வாறு பிறக்க வேண்டாம். என் பெயரன் வேண்டுமானால் அவ்வாறு இருக்கட்டும்'' என்று வேண்டுகிறாள்.

அவளுக்கு ஜமதக்னி பிறந்து, பின்னால் அவர் மகன் பரசுராமன் பிருகுவின் வாக்கின் படி மாறுகிறான்.

ஜமதக்னி சிறந்த ரிஷி. அவர் ப்ரசேனஜித் மகள் ரேணுகாவை மணந்து ஐந்து மக்களை பெற்று, ஐந்தாவதாக பரசுராமன் பிறக்கிறான். ரேணுகா ஒருநாள் ஆற்றில் குளிக்கையில் சித்ரரதன் என்கிற அரசனின் பார்வையில் படுகிறாள். ஒரு கணம் அவன் கம்பீரத்தை ரசிக்கிறாள். அவள் புனிதம் இதால் கெட்டது என்று ஜமதக்னி அறிந்து அருகிலிருந்த முதல் நான்கு புத்ரர்களை அழைத்து '' உங்கள் தாய் தவறு இழைத்து விட்டாள் . அவளைக் கொல்லுங்கள்'' என்று கட்டளை இடுகிறார். அவர்கள் தயங்கி அவரிடம் சாபம் பெறுகிறார்கள். அப்போது ஐந்தாவது மகன் பரசுராமன் உள்ளே நுழைகிறான்.

''பரசுராமா, நான் உனக்கு கட்டளையிடுகிறேன். உன் தாயை உடனே கொல் ''

தந்தை ஆணையிட்ட அடுத்த கணமே தனது கோடாலியால் தாய் ரேணுகாவைச் சிரச்சேதம் செய்கிறான் பரசுராமன்.

''மகனே தந்தை சொல் படி நடந்த தனயா, உனக்கு வேண்டும் வரம் கேள்'' - ஜமதக்னி.

''எனது பிதாவும் குருவுமான மகரிஷி, எனது தாய்க்கு உயிர்பிச்சை அருளவேண்டும். நான் செய்த இந்த காரியம் என் நினைவை விட்டு அகல வேண்டும், என் சகோதரர்களும் முன்பு போல் எனக்கு வேண்டும். நான் சிறந்த யாராலும் வெல்ல முடியாத வீரனாக வேண்டும். நீண்ட காலம் வாழவேண்டும் '' என்கிறான் பரசுராமன்.

ஜமதக்னியின் தவ பலத்தால் அவன் வேண்டிய வரம் கிடைக்கிறது.

கார்த்தவீரியன் என்கிற அரசன் ஜமதக்னி ஆஸ்ரமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து விட்டு அவரது பிரதான யாகப் பசுவை கடத்திச் செல்கிறான். இதை அறிந்த பரசுராமன் கார்த்தவீரியன் மகன் அர்ஜுனனை கொல்கிறான். அதற்குள் அவனது வீரர்கள் ஜமதக்னியை கொல்கிறார்கள் . தந்தைக்கு ஈமச்சடங்குகள் முடித்து பரசுராமன் ஒரு சபதம் எடுக்கிறான். அனைத்து க்ஷத்ரியர்களையும் கொல்வேன் என்று. அநேக க்ஷத்ரிய வம்சங்களை அழித்த பரசுராமனால் ஐந்து ரத்த ஆறுகள் நிரம்பின. அவையே சமந்த பஞ்சகம் எனப்படும். குருக்ஷேத்ரம் அருகே இருக்கிறது '' என முடிக்கிறார் லோமசர்.

எல்லோரும் மகேந்திர மலை நோக்கி நடந்தனர். அங்கிருந்து கோதாவரி ஸ்நானம். பிறகு திராவிட தேசம், பிரபாச க்ஷேத்ரம் அடைகிறார்கள். பிரபாச க்ஷேத்ரம் த்வாரகைக்கு அருகில் என்பதால் கிருஷ்ணனும் பலராமனும் யுதிஷ்டிரன் வருகை அறிந்து அவனையும் இதர பாண்டவர்களையும் சந்திக்கிறார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...