ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் நமது ரெண்டு கண்களில் ஒன்று. அழியாத சிரஞ்சீவி காவியம். நமது பாரத தேசத்துக்கு பெருமை தரும் இரண்டு இதிகாசங்களில் முதலாவது.
ஒரு எண்ணம் தோன்றியது. ராமாயணம் பாரதம் இரண்டுமே எல்லோரும் பரம்பரையாக அறிந்தது தான் என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத விசித்திர கதைகள் என்பதால் அவற்றில் வரும் பாத்திரங்களை பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்வதன் மூலம் மீண்டும் பலர் மனதில் மறுபடியும் ஒரு முறை ராமாயணம் மஹா பாரதம் எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பி விட்டால் என்ன?
சரி முதலில் ராமாயணத்தை தொடுவோம். அதில் வரும் எல்லா பாத்திரங்களையும் விவரிக்க நேரமில்லை. ராமாயணத்தில் வரும் பாத்திரங்களின் பெயர்களை சொல்லி அவர்களை பற்றிய ஒன்றிரண்டு குறிப்புகளை கொடுக்கலாம் என்றால் அதற்கே எனது வாழ்நாள் போறாது என்று தோன்றுகிறது. ஆகவே ஒரு சில பெயர்கள், அவை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்தவை பற்றி மட்டும் சொல்ல உத்தேசம். வரிசையாக ராமாயண நிகழ்ச்சியாக சொல்லப்போவதில்லை. இது ஞாபகப்படுத்த மட்டுமே என்பதால் அங்கொன்று இங்கொன்று சொல்லி ஆர்வத்தை கிளப்பி விட உத்தேசம். இதில் காணும் பெயர்களில் பலரை பற்றி திண்டு திண்டாக புத்தகங்களே எழுதலாம். ஆகவே கொடுத்த விபரங்கள் அவர்களைப்பற்றிய மொத்த விவரங்கள் அவ்வளவு தான் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.
1. குசன் - ராமனின் பிள்ளை. தர்ப்பையின் பெயர் கொண்ட புனிதமானவன். நகரங்கள், சிறிய நகர்கள் இவன் பெயரில் எங்கும் இன்றும் இருக்கிறது.,
2 அக்ஷயன் - அழிவற்றவன் என்ற பெயர் கொண்டவன். ராவணனின் பிள்ளை.
3 ராமன் - தெய்வமே மனிதனாக உருவெடுத்த விஷ்ணுவின் ஒரு அவதாரம். இது சொன்னால் மட்டுமே போதும்.
4. சிவன் - முப்பெரும் தெய்வங்களில் ஆதி முதல்வன். ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற அழித்தல் எனும் முப்பெரும் தொழில்களில் சிவன் அழித்தல் பொறுப்பேற்றவர். ராமாயணத்தில் இவருடைய வில்லை ஒடித்து தான் ராமன் சீதையை மணக்கிறான். இவன் பெயரை நான் சுமக்க பெருமைப்படுகிறேன்.
5.சீதா - ஜனகன் மகள். ஜானகி. ராமன் மனைவி. மஹா லட்சுமி அவதாரம். போதுமா?
6. ஜடாயு. கழுகரசன். - ராவணன் சீதையை அபகரித்து செல்லும்போது தடுத்து அவனால் வெட்டுப்பட்டு தனது உயிரை இழந்தவன். ராவணன் சீதையை கடத்தி சென்றதை பார்த்தவன் சொன்னவன்.
7. கௌதமர் - சப்த ரிஷிகளில் ஒருவர். இருளைப்போக்கும் ஞானம் தருபவர் என்று இந்த பெயருக்கு அர்த்தம். இவர் பெயரை தான் புத்தருக்கும் வைத்து கௌதமர் என்று அழைக்கிறோம். அகலிகையின் கணவர்.
8. பரதன் - சிறந்த குணாதிசயங்கள் கொண்ட ராமனின் இளையவன். சத்யம் நேர்மை பிறழாதவன்.
9, மஹா விஷ்ணு - ஆதி அந்தமில்லாத பரமன். காக்கும் கடவுள் என்பதனால் தீயவர்களை அழிக்க தீமையை ஒழிக்க பல அவதாரங்களை எடுத்தவர். ராமனாக திரேதாயுகத்தில் அவதரித்தவர். ராமாயணத்தின் மூல புருஷர். பகவானை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாமே. அப்புறம் மற்றவர்களை பற்றி எப்படி சொல்ல நேரம் இருக்கும்?
10. சுமித்திரை. - தசரதனின் மூன்று .மனைவியரில் ஒருவள். லக்ஷ்மணன் சத்ருக்னன் இருவரின் தாய்.
11. ஊர்மிளா - மிகவும் சாதுவான பெண். ராமாயணத்தில் அதிகம் பேச்சப்படாத அமைதியான முக்யத்வம் கொண்ட லெக்ஷ்மணின் மனைவி. ஜனகரின் இன்னொரு மகள். சீதையின் சகோதரி.
12. சபரி - வனத்தில் வாழ்ந்த தூய்மையான ராம பக்தை. ராமனுக்கு உபசரிக்க நல்ல பழங்களாக தரவேண்டும் என்ற அக்கரையில் பழங்களை தேடி கண்டுபிடித்து அவரை கடித்து சுவை அறிந்தபின் அர்ப்பணித்த அற்புதமான முதியவள்.சபரி மலையில் வாழ்ந்தவள் என்பதால் அந்த மலைக்கே அவள் பெயர் அமைந்தது.
13. சுமந்திரன் - அயோத்தி அரசன் தசரதனின் நம்பிக்கையான மந்திரி, தேரோட்டி . ராம லக்ஷ்மணர்களை காட்டுக்கு அழைத்து சென்றவன்.
14. மாண்டவி - பரதனின் மனைவி. ஜனகரின் மூன்று பெண்களில் ஒருவள். ஊர்மிளை போலவே இவளும் ராமாயணத்தில் அதிகம் விவரிக்கப்படாதவள். குஜராத்தில் ஒரு நதி இந்த பெயரில் இருக்கிறது. பார்த்திருக்கிறேன்.
15. சுஷென் - விரும்பத்தக்க படையை உடையவன் என்ற அர்த்தம் கொண்ட பெயர். ராவணனின் அரண்மனையில் ஒரு மருத்துவன். விபீஷணன் நண்பன். கைலாச மலையிலிருந்து சஞ்சீவினி மூலிகைகளை கொண்டுவந்தால் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று விஷயம் முதலில் சொன்னவன்.
இன்னும் தொடரும்.
No comments:
Post a Comment