ஸ்ரீ ராகவேந்திரர் -- J.K. SIVAN
மனைவியின் முடிவு
வாழ்க்கையை தெரிந்த வகையில் ஒரே சீராக வாழ்ந்த நமது முன்னோர்கள் வறுமை என்றால் என்ன என்று தனியாக யோசிக்க வில்லை. ஒருவரிடம் இல்லாத பொருளை மற்றவரிடம் வாங்கி, கேட்டு பெற்று திரும்ப கொடுத்து வாழ்ந்தார்கள். எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே ராகத்தில் வாழ்ந்தபோது யார் ஏழை யார் பணக்காரன் என்று தெரியவில்லை. எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தது. இருந்ததைக் கொண்டு திருப்தி அடைந்து, இல்லாததை நினைக்கவே நேரமில்லாதவர்கள்.
சரஸ்வதி ராகவேந்திரரை மணந்தபோது அவள் வாழ்வும் இப்படித்தான் சீரான வறுமையில் இருந்தது. கணவன் பண ஆசையில்லாதவன். வறுமையை வளமையாக கருதுபவன் என்று தெரிந்தது. உலகப்பற்று இல்லாதவன் என்றும் தெரிந்தது. ஆனால் திடீரென்று ஒரு நாள் தனது கணவன் சந்நியாசி ஆகிவிட்டான் என்று கேள்விப்பட்டதும் சரஸ்வதி அவர் முகத்தை கடைசி முறையாக பார்க்க ஆசைப் பட்டாள். மடத்துக்கு ஓடினாள். ஆனால் திருப்பி அனுப்பப் பட்டாள். துக்கத்தில் வரும் வழியில் இருந்த ஒரு பாழும் கிணற்றில் விழுந்து மாண்டாள் . அகால மரணம் அவளை ஒரு பைஸாஸமாக மாற்றியது. பூமியிலும் இன்றி மேலுலகமும் இன்றி பேயாக சுற்றினாள். மடத்தை சுற்றி வந்தாள். அவளது நிலையை மந்த்ர சக்தியால் உணர்ந்த ராகவேந்த்ரர் கமண்டலத்தில் சிறிது ஜலம் எடுத்து அவள் மீது தெளித்து அவள் நிம்மதி பெற்று மோக்ஷ பதவி பெற வைத்தார். அவள் மகிழ்ந்து வணங்கினாள். ராகவேந்த்ரரின் பூர்வாஸ்ரமத்தில் உதவிய அவளுக்கு இனி பிறவிகளே கிடையாது என்ற பரிசு கிடைத்தது.
ஸ்ரீ ராகவேந்திரர் பீடாதிபதியான சில நாளில் சுதீந்திர தீர்த்தர் பரமபதம் அடைந்ததால், அவருக்கு ஹம்பி அருகே அனெகுண்டி என்ற க்ஷேத்ரத்தில் பிரிந்தாவனம் அமைத்தார் ராகவேந்த்ரர். நவ பிருந்தாவனத்தில் இது ஒன்பதாவது. மாத்வர்கள் தவறாமல் தரிசிக்கும் புண்ய ஸ்தலம் இது. நம் போன்ற மற்றவரும் தரிசிக்க வேண்டிய புண்ய ஸ்தலம்.
ஸ்ரீ ராகவேந்த்ரர் பீடாதிபதியாவதற்கு முன்பே சுதீந்த்ரரால் சன்யாச தீக்ஷை பெற்றவர் யாதவேந்திர தீர்த்தர். எனவே அவர் தீர்த்த யாத்ரைகள் முடிந்து தஞ்சாவூர் திரும்பியதும் அவரிடமே மடத்தை ஒப்படைக்க ராகவேந்த்ரர் வேண்டினாலும்,
''ராகவேந்திரா, உன் தலைமையில் இந்த மடம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நீயே பகவானால் நியமிக்கப் பட்டவன்'' என்று மூல ராம விக்ரஹத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டு மீண்டும் தீர்த்த யாத்ரை சென்றுவிட்டார் யாதவேந்த்ரர். கும்பகோணத்திலிருந்து த்வைத வேதாந்தம் சிறப்பாக பரவியது. பல சிஷ்யர்கள் சேர்ந்தனர்.
எதிர்பாராதவிதமாக பன்னிரண்டு வருஷம் தஞ்சாவூர் சீமை பஞ்சத்தில் துடித்தது. தஞ்சாவூர் ராஜ செவ்வப்ப நாயக்கனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மந்திரி பிரதானிகள் சிலர் ''மஹாராஜா ராகவேந்திரர் என்ற ஒரு துறவி மிக தப ஜப சக்தி வாய்ந்த மூல ராம பக்த மாத்வர் . அவரை நீங்கள் சென்று பார்த்து அவரால் இந்த பஞ்சம் நீங்க வேண்டும் '' என்கிறார்கள்.
ராஜா ராகவேந்திரர் எங்கு இருக்கிறார் என்று தேடி அவரை சந்தித்தான். வணங்கினான்
''சுவாமி நீங்கள் தான் ஏதாவது செய்து இந்த தஞ்சாவூர் பிரதேசத்தைக் காப்பாற்றவேண்டும்'' என கேட்டுக்கொண்டான். சில யாகங்கள் செய்ய சொன்னார் ராகவேந்த்ரர். ஆச்சர்யமாக யாகங்கள் செய்தவுடன் கன மழை பொழிந்தது. காவேரி மற்றும் உப நதிகள் எங்கும் நுங்கும் நுரையுமாக வெள்ளம் நிரம்பி வழிந்தது. ராஜா மகிழ்ந்து மாணிக்க மாலை ஒன்றை பரிசளித்தான். யாகம் செய்து கொண்டிருந்த ராகவேந்த்ரர் அவன் எதிரிலேயே அந்த மாணிக்க மாலையை ஹோமத்தீயில் இட்டு அது சாம்பலாயிற்று. ராஜாவுக்கு வருத்தம். '' அன்பாக மரியாதையோடு நன்றியோடு அளித்ததை நெருப்பிலிட்டு விட்டாரே''.
ஞானி க்கு தெரியாதா ராஜாவின் மன ஓட்டம். அடுத்த கணமே தனது கையை எரியும் தீயில் இட்டு அதிலிருந்து அந்த மாணிக்க மாலையை வெளியே கொண்டு வந்தார். கையோ, மாலையோ தீயால் எந்த மாறுதலும் அடையவில்லை. ராஜா அதிர்ச்சியுற்றான். அந்த கணமே அவர் பக்தரானான்
ஸ்ரீ ராகவேந்த்ரர் தென்னிந்தியா பூரா திக் விஜயம் செய்தார். த்வைத சித்தாந்தம் பரவியது. ஸ்ரீ ரங்கம் ராமேஸ்வரம் மற்றும் பல புண்ய ஸ்தலங்கள் சென்றார். ராமேஸ்வரத்தில் அந்த சிவலிங்கம் ராமரால் ராவண சம்ஹாரத்திற்கு முன்பாக, லங்கா விஜயம் செய்வதற்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று எடுத்துரைத்தார். ராமருக்கு ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி தோஷம் வந்தது என்று சொல்வது தவறு. ராவணன் ஒரு ராக்ஷசன். அவன் தாய் ராக்ஷசி, என்பதால் அவன் பிராமணன் அல்ல ராமருக்கு எந்த தோஷமும் கிடையாது என்றார். கன்யாகுமரி, மதுரை திருவனந்தபுரம் எல்லாம் சென்று பிறகு விஷ்ணு மங்களா, குக்கே சுப்ரமண்யா, உடுப்பி தேசங்களுக்கு சென்றார். சென்றவிடமெல்லாம் சிறப்பெய்தினார். நிறைய வேதாந்த மார்க்க நூல்களை எழுதினார்.
பல இடங்களுக்கு கால் நடையாக நடந்து விஜயம் செய்தனர். போகும் வழியில் எல்லாம் நடந்த சில விஷயங்கள் ருசிகரமான இருக்குமே.
No comments:
Post a Comment