Thursday, November 29, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 
 மஹா பாரதம் 

      
                இரு சகோதரர்களின் சந்திப்பு 

எத்தனையோ கஷ்டங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டு பொறுமையாக வனவாசத்தில் காலந்தள்ளும் திரௌபதி, வாய் திறந்து ஒரு பொருளை வேண்டும் என்று சொல்லாதவள் முதன் முதலாக  ''ஆஹா  இந்த புஷ்பம் சுகந்த மணம்  வீசுகிறதா, ''எனக்கு கொண்டு தருவாயா பீமா '' என்று கேட்டாளே . அது வல்லவோ என் பாக்யம். மூவுலகில் எங்கிருந்தாலும் அந்த புஷ்பங்களை அவளுக்கு கொண்டுவருவேன்'' என்று பீமன்                       நடந்தான். 

ஒரு அங்குலம் விடாமல்  எல்லா இடத்திலும் தேடிக்கொண்டே சென்றான். மலைச் சிகரங்களில் எல்லாம்  தேடியும்  கிடைக்கவில்லை.   ஒரு மலைச் சரிவு  தென்பட்டது.  அதில் நிறைய  மரங்கள்.  பல பூத்துக் குலுங்கின.  அருகே சென்றான். ஒரு  நீண்ட  அழகிய  ஏரி  கண்ணில் பட்டது. அதன் கரையோரமாக  ஒரு  வழி  இருந்தது.  அதில் சென்றால்  தேவலோகத்தில் நந்தவனங்களை அடையலாம்.  ஒருவேளை  அங்கிருந்து தான் அந்த சுகந்த வாசம் வந்திருக்குமோ?  புஷ்பம் காற்றில் பறந்து வந்திருக்குமோ?

 வேகமாக  பீமன் நடந்தான்.  அங்கே  அவனை  வாயு புத்திரன்  ஹனுமான்  பார்த்துவிட்டான். பீமன்  அவன் சகோதரன் அல்லவா? எதற்காக  என் தம்பி பீமன்  இங்கு வந்திருக்கிறான்.  அவனுக்கு உதவவேண்டும்  என்ற  எண்ணம்  ஹனுமனுக்கு மனதில் தோன்றியது.   இருந்தாலும் அவன்  பலத்தை சோதிக்க திட்டமிட்டான் ஹனுமான்.

''வைசம்பாயனரே,    ஒன்று  பாரதம்  ருசியுள்ள  சம்பவங்கள்  நிறைந்ததா,  அல்லது  நீங்கள்  சொல்லும் விதத்தில்  அது  ருசிக்கிறதா? என்று  பிரித்துப் பார்க்கமுடியவில்லையே.  எப்படியிருப்பினும்,  என்   மனது  ரொம்ப சந்தோஷம் அடைகிறதே.  மேலே  சொல்லுங்கள்  பீமன்  என்ன செய்தான்?''

 ''ஜனமேஜயா,  இதில் என் பங்கு என்ன தெரியுமா  நடந்ததை  நடந்தபடியே  சொல்வது மட்டுமே. பாரத நிகழ்ச்சிகள்  இணையற்ற ருசி கொண்டவை என்பதில் எந்த சந்தேகமும்   எவருக்குமே வேண்டாம்''  என்றார்  வைசம்பாயனர்.

 பீமன் விரைவில்  அந்த  பூக்களை கண்டுபிடித்து  எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டும்  என்ற அவசரத்தில்  இருந்தான்.  தருமனையும்,  சகோதரர்களையும், திரௌபதியையும்  தானும் அர்ஜுனனும் இல்லாத போது  தனியே  விட்டு  வருவது ஆபத்து நிறைந்தது என்று  மனதில்  கிலேசம்  இருந்தது அவனுக்கு.  அர்ஜுனன் இருந்தால் ஒரு பயமும் இல்லை.  அவனும்  இன்னும் திரும்பவில்லையே.

 குறுகிய அந்த  தேவலோகம் போகும்  பாதையில்அப்போது தான்  பீமன்  வழியே  தடையாக இருந்த  ஹனுமானைப்  பார்த்தான். இருபக்கமும் வாழை தோப்பு, குறுக்கே  ஒரு  பெரிய வானரம் படுத்திருக்கிறது.  அதன் நீண்ட வாலின்  நுணி  ஆடிக்கொண்டு  டப் டப்பென்று   தரையை அடித்த போதெல்லாம்  மலைகளே ஆடின. பெரும் சப்தம்  இடியைப்போல்  வேறு  கேட்டது.  பீமன்  சுற்றுமுற்றும் பார்த்தபோது  எங்குமே  அதைத் தவிர்த்து  சுற்றிப்   போக வழியில்லை.

தாமிர வர்ணத்தில்  பளபளத்த உடம்பு. சிறிய  கழுத்தை  பருத்த  தோள்களில் சாய்த்து  படுத்திருந்தது  அந்த வானரம். அதன் புஜ பலம் மலைகளைப் போல்   திரண்டிருந்தது. இடை  சிறுத்து இருந்தது. வால் நுனி கொடிபோல்  உயர்ந்திருந்தது.  குறுகிய சிறு  உதடுகள். சிவந்த காதுகள், அலைபாயும்  கூர்மையான சிவந்த விழிகள், பூர்ண சந்திரனை ஒத்த முகம். வெண்ணிற பற்கள். உடலெங்கும்  வெண்ணிறம கலந்த சாம்பல் நிற மெல்லிய அசோக மலர்  இதழ்களின் மென்மையில்  முடி இழைகள்.

 பீமன்  அதிசயித்தான்.  அவசரமாக  போகும்போது  இதென்ன  ஒரு இமய மலையே குறுக்கே  படுத்தமாதிரி ஒரு  பெருத்த  வானரம்?   பீமனுக்கு அது ஹனுமான் என்று தெரியாது.

இடி இடித்தமாதிரி ஒரு  பெரும் சத்தம் போட்டு  அதை  கிளப்ப முயற்சித்தான்  பீமன். மலைகளே  அந்த எதிரொலியில்  நடுங்கின.

ஹனுமான்  சிறிதும்  லட்சியம் செய்யவில்லை அதை. அரைக்கண்ணை திறந்து அவனை நோக்கினான். சிரித்தவாறு

 ''யார்  நீ மானுடா,   என்  தூக்கத்தை  கெடுப்பவன்?   மனிதனாக இருக்கும் உனக்கு  விலங்குகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்று கூடவா தெரியவில்லை?  முரட்டுத்தனமாக  நடந்துகொள்வது சிறுபிள்ளைத்தனம்.  மனிதர்களே  வரமுடியாத  இந்த இடத்திற்கு எதற்கு வந்தாய்? எங்கே போகிறாய்? சொல். இது தேவலோகம், இங்கு மனிதர்கள்  நுழைய முடியாது. இந்த எல்லையைத்  தாண்டி   என்னைத் தாண்டி  நீ  செல்ல முடியாது.''என்றான் ஹனுமான்

''நீ  யார் என்று முதலில் சொல்? எதற்கு  ஒரு குரங்கு வடிவில் இருக்கிறாய்? நான்  யாரென்று கேட்டாயே,  நான் ஒரு க்ஷத்ரியன், குரு  வம்சம்.    குந்தி புத்திரன்.  பாண்டவர்களில் ஒருவன். என் பேர்  பீமசேனன்.

 ''அடேயப்பா  நீ  அவ்வளவு பெரிய ஆளா?  நான் ஒரு  சாதாரண  குரங்கு. ஆனால்  உனக்கு வழி விடமாட்டேன். திரும்பிப் போ. இல்லையென்றால் அழிந்து போவாய்.''

''வானரமே,  அழிவைப் பற்றி பேசும் நீ  என் கைகளால்  அழியும் முன்பு  வழியை விட்டு விலகிப்  படு'' 

''அடடே ,  உனக்கு எதற்கு  இவ்வளவு  கோபம்.  இதோ பார்  என் உடல் நிலை சரியில்லை,  என்னால்  எழுந்திருக்க முடியாதே என்ன செய்வேன்?  என்னைத் தாண்டி வேண்டுமானால் போ.''
''முடியாது,  எந்த  ஜீவனிலும்  பரமாத்மா இருக்கிறான் என்றறிந்த  நான்  உன்னை  தாண்டி போகமாட்டேன். அதை அறியாமலிருந்தால்,  ஹனுமான் கடலைத் தாண்டியதுபோல் உன்னைத்  தாண்டியே  போயிருப்
பேனே'' என்றான் பீமன்.
''ஹனுமானா,   அது யார்  உனக்கு  எப்படி தெரியும் அவனை.''  என்றான்  ஹனுமான்.

''ஹே  வானரமே,  ஹனுமான்  உன்னைப் போல்  அல்ல.    வானர யூத முக்யன் . ராம தூதன். என் சகோதரன். அவன் பலம்  எனக்கும் உண்டு.  எனவே  முதலில் எழுந்து வழியை விடு. வீணாக யமனிடம் போகாதே.  உன்னோடு பேசி நேரத்தை வீணடிக்க எனக்கு பொறுமையில்லை  ' என்றான் பீமன்.

''தம்பி,  இதோ பார்,  நான்  வயோதிகன்.  என்னைத்   துன்புறுத்தாதே.  உனக்கு போகவேண்டுமானால்  என் வாலை  கொஞ்சம்  நகர்த்தி மடக்கி விட்டு வழி பெற்றுக்கொள்.  என்னால் வாலைக்  கூட  அசைக்க முடியவில்லை. சக்தி அற்ற முதிய வானரம் நான் ''  என்றான் ஹனுமான்.

அந்த  வானரத்தின் மேல் பரிதாபத்தோடு அலட்சியமாக இடது கையால்  வாலை இழுத்து  ஓரமாகப் போட முயன்றான். அசைக்கவே முடியவில்லை.

''அட, ஆச்சர்யமான குரங்காக  இருக்கிறதே,  என்று  தனது இருகரத்தாலும்  அதன் வாலை  இழுத்தான்.  இம்மியும்  வால்  நகரவில்லை. அவனால்  அசைக்கக் கூட  முடியவில்லை. சகல பலத்தையும்  வைத்து  வாலை அசைக்க முயன்று தோல்வியுற்றான். உடல்  குப்பென்று வியர்த்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்கியது. சர்வ சக்தியும் ஒடுங்கியது.  ஆனால் வாலைத்   துளியும்  அசைக்க முடியவில்லை.

பீமன்  அந்த வானரத்தின் வாலை  விட்டு விட்டு  அதன்  முகம் அருகே  வந்து நின்றான்.  இரு கரம் கூப்பினான். வாயிலிருந்து வார்த்தைகள் தானாகவே  வந்தன.
''நான்  கடின வார்த்தைகளைப்  பேசியிருந்தால்  மன்னிக்கவேண்டும்.  நீங்கள்  யாரோ  ஒரு  சக்தி வாய்ந்த சித்த புருஷர், தெய்வம், கந்தர்வர்.  வானர ரூபத்தில்  வந்திருக்கிறீர்கள் என்று  மட்டும் தெரிகிறது.  என்  பலத்தில்  எனக்கு கர்வம் உண்டு.   அது இப்போது அழிந்தது.  என்னை  உங்கள் சீடனாக  ஏற்றுக் கொள்ளவேண்டும்''   பீமனுக்கு  குரல் தழுதழுத்தது.  கண்களில் நீர்  ஆறாகப் பெருகியது.  பதினாயிரம் யானை பலம் கொண்ட பீமன்  ஒரு  புழுவாக அங்கே  தன்னை  அங்கீகரித்தான். .

''தம்பி,   என்னை  நீ  யாரென்று கேட்டதால்  சொல்கிறேன் கேள்    ''நானும்  வாயு புத்திரன்.  நான் வானரன். அஞ்சனை மைந்தன். ஹனுமான்  என்று என்னை அழைப்பார்கள்.  சூரிய புத்திரன்  சுக்ரீவனின் அமைச்சன். காற்றும் நெருப்பும் போல்  நாங்கள்  இணை பிரியா நண்பர்கள். சுக்ரீவனுக்கும் அவன் சகோதரன் வாலிக்கும் இடையே  விரோதம் ஏற்பட்டு  சுக்ரீவன்  ரிஷ்யமுக பர்வதத்தில் குடியேற,  அங்கே  ஸ்ரீ ராமன் லக்ஷ்மணனோடு வந்தார். அவரது மனைவி  சீதையை  தண்டகாரண்யத்தில்  ராவணன் என்னும் ராக்ஷசன்  கடத்திச்  சென்றுவிட்டான். அவளைத் தேடி தான்  அங்கே  வந்தபோது  எனக்கு ஸ்ரீ ராமர்  அறிமுகமானார்.  பின்னர்  வாலியை வதம்  செய்து சுக்ரீவனின் நட்பு  பெருகி வானர சைன்யன்களோடு நானும் சுக்ரீவனும் சீதையைத் தேடி, வழியே  ஜடாயு சகோதரன் சம்பாதி வழி சொல்ல, நூறு யோசனை நீளம் கொண்ட கடலைத்  தாண்டினேன். ராவணன் மாளிகையில் சீதையை கண்டேன். ராமனுக்கறிவித்து,  கடலுக்கு பாலம்  அமைத்து  ராவணனைக் கொன்று  அவன் தம்பி நல்லவனான  விபீஷணனுக்கு முடி சூட்டி, அயோத்தி திரும்பி  பல்லாயிரம் ஆண்டுகள்  ராம ராஜாவாக ஆண்டார்.

ஒரு வரம் அப்போது கேட்டேன். '' ஸ்ரீ ராமா,  உன் புகழ்  இந்த பூலோகத்தில் உள்ளவரை அதை  நான்  காதால் கேட்கவேண்டும். அது வரை வாழவேண்டும்'' என்றேன். வரம் தந்தார்.

இந்த வழியில்  தேவர்கள் மட்டுமே  செல்லலாம். இதில் நீ சென்றால் உனக்கு  ஆபத்து வரலாம் என்று  தான்  உன்னை தடுத்து  உதவ  நான் இங்கு  உனக்காக காத்திருந்தேன். நீ  தேடிவந்த மலர்  அதோ அந்த  ஏரிக் கரையில் உள்ள மரத்தில்  தான்  இருக்கிறது.''

பீமன் அதிசயித்து,  அசந்து போய் , அப்படியே சாஷ்டாங்கமாக ஹனுமானின் கால்களில் விழுந்து வணங்கினான்.  அவனை வாத்சல்யத்தோடு தூக்கி நிறுத்தி,  ''என்  அருமைத் தம்பி, பீமா, உன்னைக்  கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி''  என்று சொல்ல,
'அண்ணா, நான்  பாக்யசாலி  உங்களை தரிசித்து  ஆசிபெற  கொடுத்து வைத்தவன்.  ஆனால்  எனக்கு ஒரு ஆசை. நீங்கள் நிறைவேற்ற வேண்டும் '' என்றான்  பீமன்.

''என்ன  சொல்,  பீமா''

பீமன் சொன்னதை கேட்க தயாராகுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...