யாத்ரா விபரம் J.K. SIVAN
திருச்செந்தூர்
பச்சை மயில் வாகனனும் பஞ்சலிங்கமும்
தெற்கே அவ்வளவாக வெளியாட்கள் தொந்தரவு இல்லாமல் இருந்தது நமது பாக்யம். ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1648 ல் ஒரு கப்பல் திருசெந்தூர் கடல் அருகே மிதந்து வந்ததில் சில வெளுப்பு முகங்கள். அவர்களை டச்சுக்காரர்கள் என்று சரித்திரம் சொல்கிறது.
வெறுங்கையோடு வந்தவர்கள் சும்மா போகாமல் திருச்செந்தூர் முருகனையும் சிவ நடராஜர் சிலைகளையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். இதற்குள் தங்கம் இருக்கும் என்று நம்பி தான் இதை செய்தார்கள். முருகனைப் பற்றி தெரியாத முட்டாள்கள். அவர்கள் கப்பல் கொஞ்ச தூரம் கூட கடலில் செல்லவில்லை. திடீரென்று கடல் கொந்தளித்தது. கப்பல் அபாயாகரமாக ஆடி முழுகும் நிலை. யாரோ எல்லாம் இந்த சாமி சிலையால் தான் என்று சொல்ல உயிர் தப்ப கடலில் முருகனையும் மற்ற சிலைகளையும் போட்டவுடன் கொந்தளிப்பும் நின்று கப்பல் முழுகாமல் திரும்பி சென்றது.
திருச்செந்தூர் திருநெல்வேலியை அப்போது ஆண்ட வடமலையப்ப பிள்ளையன் என்கிற தலைவனுக்கு மேற்படி விஷயம் சென்றது. வடமலை செந்தூரான் பக்தன். என்ன செய்வது என்று விழித்தவன் ஒரு புது பஞ்சலோக சிலையை வடிக்க செய்து அந்த டூப்ளிகேட் முருகன் செந்தூருக்கு சென்று ஸ்தாபனம் செய்வதற்கு முன் (1653ல் ) வடமலையின் கனவில் முருகன் வந்தான்.
எனக்கு டூப்ளிகேட் வேண்டாம், நானே உனக்கு கிடைப்பேன். கடலில் இன்ன திசையில் இவ்வளவு தூரம் போ, அங்கே கடல் மேல் பரப்பில் ஒரு மஞ்சள் எலுமிச்சம்பழம் மிதக்கும். அவ்வளவு பெரிய கடலில் ஒரு சின்ன எலுமிச்சை உன்னால் பார்க்க முடியாது. மேலே பார் கருடன் வட்டமிடும். அங்கே கடலின் மேல் பார் பழம் தெரியும். அங்கே மூழ்கினால் நான் கிடைப்பேன் '' என்று டச்சுக்காரர்கள் வீசின இடத்தை முருகன் அடையாளம் காட்ட வடமலை அவ்வாறே மூழ்குபவர்களை அழைத்துக் கொண்டு போய் முருகனை மீட்டான்.
1653ல் மீண்டும் செந்தூரான் கற்பகிரஹத்தில் நுழைந்தான்.
சந்தோஷம் கொண்ட வடமலை முருகன் ஆலயத்தில் கடல் பக்கம் ஒரு மண்டபம் கட்டினான். அந்த வடமலை மண்டபம் இன்றும் இருக்கிறது. வடமலை மண்டப கல்வெட்டு சொல்லும் விஷயம் இது. மாசி ஆவணி விழாக்காலத்தில் ஏழுநாளும் கட்டளை அபிஷேகம், பூஜைகளும் வடமலையால் நடந்த உபய மண்டகப்படி.
M. Rennel என்று பிரஞ்சு சரித்திரக்காரர், 1785ல் எழுதிய ஒரு புத்தகத்தில் திருச்செந்தூர் கோவில் படம் ஒரு டச்சு ராணுவ வீரனிடமிருந்து பெற்றேன். மேலே சொன்ன விஷயம் அவரும் சொல்கிறார். ''1648 திருச்செந்தூர் கடலை விட்டு புறப்பட்ட டச்சு காரர்கள் போகுமுன் கோவிலை தீயினால் நாசம் செய்ய முயன்று தோற்றார்கள். இடிக்க முடியவில்லை. முருகனை தான் தூக்கிச் செல்ல முடிந்தது. ( முருகன் தான் எப்படி அவர்களிடமிருந்து மீள்வது என்று திட்டமிட்டதை மேலே சொன்னேனே).
முருகனை உருக்கி தங்கம் எடுக்க முயன்றதிலும் தோல்வி. உயிர் தப்ப கடைசியில் முருகனை கடலில் தூக்கி எறிந்தார்கள். வடமலை செய்த மாற்று முருகன் சிலையை பாளையம்கோட்டையில் திருப்பிரண்டீஸ்வரர் கோவில் (?) (வெங்கு பாச்சா கோவில்?) ஸ்தாபித்ததாக தப்பு தப்பாக பெயரிட்டு ஒரு வெள்ளைக்காரன் எழுதி இருக்கிறான். தேடி கண்டுபிடிக்க நேரம் இல்லை. பாளையங்கோட்டை காரர்கள் இது விஷயமாக விவரம் சொல்லட்டும்.
ஸ்கந்த புராணம் சிவ ரஹஸ்ய காண்டத்தில் முருகன் சூர பத்மனை சம்ஹாரம் செய்வதற்கு முன்னும் பின்னும் இங்கு தங்கியதாக, அதற்காக இந்த கோவிலை தேவ சிற்பி மயன் கட்டியதாகவும் சொல்கிறது. தேவ சேனாபதி முருகன் தனது யுத்தத்தில் வெற்றி பெற சிவனை வழிபட்டதாக ஐதீகம். இன்றும் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் பின்னால் பஞ்ச லிங்கங்கள் உள்ளன. இணைத்திருக்கும் படத்தில் பார்க்கலாம். இங்கு இருக்கும் கடலின் மேல் ஐம்பதடி உயர செந்நிற பாறைகள் கந்தமாதன பர்வத மாக ஆறுமுகனின் திருச்செந்தூர் ஆலயம் என இன்றுவரை நாம் தரிசிக்க கிடைத்திருக்கிறது. அந்த மலைக்குகை பிரகாரங்கள் நாம் காண்பது. பின்னர் சேர சோழ பாண்டியர்கள் இந்த ஆலயத்தை தக்கவாறு பராமரித்து நமக்கு தந்திருக்கிறார்கள்.
முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. சுப்ரமணிய ஸ்வாமியின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்கு கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு கொடுக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment