ஸ்ரீ ராகவேந்திரர் J.K. SIVAN
வெள்ளையன் செய்த புண்யம்
மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி கொண்டு அருள்பாலிக்கிறார். இந்த பூவுலகில் நம்மோடு 76 வருஷங்கள் வாழ்ந்தாலும் 300 வருஷங்கள் மந்த்ராலய பிருந்தாவனத்தில் அவர் இயற்றிய நூல்களில் காணப்படுவார். 400 வருஷங்கள் அரூபமாக சூக்ஷ்ம சரீரத்தில் பிருந்தாவனத்தில் நமக்கு அருள்வார். இவ்வாறு 700 வருஷங்கள் நமது வாழ்வில் நமக்குதவ காத்திருக்கிறார் என்று அறிந்து தான் பக்தர்கள் மந்திராலயத்தில் அலைமோதுகிறார்கள். பக்தி வீண் போகவே போகாது. நம்பிக்கை தான் மனித வாழ்வின் அடிப்படை அஸ்திவாரம்.
ஒரு சம்பவம் சொல்கிறேன். அபூர்வமான விஷயம்.
வெள்ளையர்கள் நம்நாட்டில் அத்து மீறி நுழைந்ததுமில்லாமல் கிழக்கிந்திய கம்பனி என்று ஒன்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அடிமைப் படுத்தி ஆண்ட காலம். அப்போது தாமஸ் மன்ரோ என்பவன் கலெக்டர். வெள்ளையர் அரசாங்கத்திற்கு நிதி வசூல் பண்ணுபவன். பழைய தஸ்தாவேஜ்களை தேடி அலசி ஒவ்வொரு இடமாக வளைத்து போட்டுக்கொண்டிருந்தார்கள்.
மந்த்ராலயம் இருந்த இடம், ராகவேந்திரா மடத்துக்கு சொந்தம் என்பதற்கு போதிய ஆவணம் காட்டவில்லை எனவே மந்த்ராலயத்தை கம்பனி ஆட்சிக்குள் கொண்டுவர நிர்பந்தம். யாரோ சிலர் ஒரு துறவியின் பெயர் சொல்லி அதை அனுபவித்து வருகிறார்கள் என்று மண்ரோவிடம் செயதி போயிற்று. விசாரித்தான். நிறைய ஹிந்து பக்தர்கள் செல்கிறார்கள். ஆகவே அதை நமது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு முன் மந்த்ராலயத்தை அரசாங்க சொத்தாக இணைக்கும் ஆணை இடுவதற்கு முன் ஒரு முறை மந்த்ராலயத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு முடிவு எடுக்கலாம் என்று மன்ரோ வுக்கு தோன்றியது. மடத்தை அப்புறப்படுத்துவதற்கு முன் அதை பார்வையிட சென்றான். அவன் குதிரை பிருந்தாவனத்துக்குள் சென்றது. அவனை அறியாமல் அங்கே ஜீவ சமாதியாக இருக்கும் ராகவேந்திரர் என்பவருக்கு வணக்கம் செலுத்த மன்ரோ வுக்கு தோன்றியதால் பிருந்தாவனத்தில் நுழைந்தான் .
அந்தி நேரம். மங்கிய ஒளியில் மன்ரோ சுற்று முற்றும் பார்த்தான். எவருமே கண்ணில் படவில்லை. வனாந்திரம். குதிரை பிளிறியது. மேலே நடக்க அஞ்சியது. எதிரே நீண்ட மண் தரையில், சுற்றிலும் இடுப்பளவு மண் சுவர், மேலே தென்னை ஓலை வேய்ந்த கூரை, எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள். அந்த அமைதியான அந்த இடம் மன்ரோ மனத்தை கவர்ந்தது. குதிரை மீதிருந்து இறங்கி மெதுவாக நடந்தான். யார் இது?
எதிரே ஒரு அதிக உயரமற்ற சற்றே பருமனான தேகத்தில் யார் இந்த முதியவர் ? காவி உடை, கழுத்து நிறைய துளசி மாலை, உடலில் சந்தன கீற்றுக்கள், நெற்றியில் நாமம், ஆழ்ந்த, கூரிய, ஊடுருவும் அமைதியான கண்கள், வெண்ணிற தாடி, தலையை மூடிய மெல்லிய காவித்துணி. புன்சிரிப்பில் வெண்ணிற வரிசையான பற்கள் உறுதியான உதடுகளுக்கு இடையே தெரிந்தது
முகத்தில் அன்பு கொப்புளிக்க கண்களில் நட்போடு ''வாருங்கள்'' என்று பொருள் பட கையால் சைகை செய்து வரவேற்று தலை ஆட்டினார் முதியவர்.
மன்ரோ கை கூப்பி வணங்கினான் . அருகே யாருமில்லை. ஆங்கிலத்தில் மன்ரோ நிதானமாக முதியவரிடம் பேசினார்.
''நீங்கள் இந்த ஆலயத்தை சேர்ந்தவரா?
''ஆலயமல்ல, மடம் . நான் இங்கு தான் இருக்கிறேன்.'' தெளிவான ஆங்கிலத்தில் முதியவரும் பதிலத்தார்.
''ஓ மடம்.. மடம்.. இருக்கட்டும். இந்த மட விஷயமாக ஒரு முக்ய செய்தி தெரிவிக்கவேண்டும். ''.
''என்ன சொல்லுங்கள்''?
''இது எங்கள் அரசாங்க மனை. இதில் அத்து மீறி எந்த ஆதாரமும் இன்றி உங்கள் மடம் ஆக்ரமிப்பு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஆவணங்களை நான் பார்த்தேன். இங்கிருந்து உங்களை அப்புறப்படுத்த ஆணை இட எனக்கு அதிகாரம் இருப்பதால், அதை செய்யுமுன் தீர விசாரிக்க நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்கிறார் மன்ரோ.
''இங்கே எந்த அத்து மீறலுமில்லை. உங்கள் ஆட்சிக்கு முன் இந்த பிரதேசத்தை ஆண்ட அரசன் இந்த இடத்தை எங்கள்
மட த்துக்காக ஒதுக்கி அது அரசாங்க தஸ்தாவெஜில் பதிவாகி இருக்கிறது. எனவே அதை பரிசீலனை செய்து பிறகு நீங்கள் முடிவெடுக்கவேண்டும்.''
மன்ரோ துருவித்துருவி கேட்டார். எந்த அரசன், எப்போது, எதற்காக, எப்படி எந்த இடத்தை மடத்துக்கு மான்யமாக அளித்தான் என்று கேட்டதற்கெல்லாம் அந்த முதியவர் புன்சிரிப்பு மாறாமல் பொறுமையாக, பெயர்கள், காலம் நேர குறிப்புகள் கொடுத்ததை மன்ரோ குறித்துக் கொண்டார்.
''பெரியவரே. நன்றி. நீங்கள் சொல்லும் விவரங்களை எனக்கு யாரும் இதுவரை தரவில்லை. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இங்கு வந்தது நல்லதாக போயிற்று. எனது நல்லவேளை உங்களை நேரில் சந்தித்தது நல்லதாக போய் விட்டது'' என்கிறார் மன்ரோ .
அந்த பெரியவர் மன்ரோவிற்கு அந்த ஆஸ்ரமத்தை சுற்றிக் காட்டினார். ''இந்தாருங்கள்'', என தன் கையால் மன்ரோவுக்கு பிரசாதம் வழங்கினார்.
''இது என்ன? நான் என்ன செய்யவேண்டும்?''
''பொங்கல் என்று இதற்கு பெயர். இதை உண்ணவேண்டும்.'''
''ஒ நான் அப்படியே செய்கிறேன்''
அதை ஜாக்ரதையாக வாங்கிக்கொண்டு ''இதை இன்று என்னுடைய உணவோடு கலந்து உண்கிறேன் '' என்றார் மன்ரோ. இவளவு நல்லவராக இருக்கிறாரே, யார் என்று சொல்லவில்லையே என யோசித்து திரும்பி போகுமுன்பு அவரை வணங்கி
''இவ்வளவு நேரம் எனக்கு எல்லாவற்றையும் திருப்திகரமாக விளக்கினை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்றார் மன்றோ.
''என்னை ராகவேந்திரர்'' என்பார்கள்
''ஒ இந்த பெயர் கேட்டிருக்கிறேன். அது நீங்கள் தானா? ஆனால் நீங்கள் பல வருஷங்களுக்கு முன்பே ........''
''ஆமாம். எனது ஸ்தூல சரீரம் இதோ இந்த ஜீவ சமாதிக்குள் இருக்கிறது..''..
மன்ரோ அதிசயித்து சிலையானார். அன்று அங்கே சிலையாக நின்று தாமஸ் மன்ரோ வை சென்னையில் தீவுத் திடலில் அழகிய ஒரு குதிரை நிற்க கம்பீரமாக அதன் மீது ஆரோகணித்து அமர்ந்த சிலையாக இன்றும் காண்கிறோம். ராகவேந்திரரை நேரில் தரிசித்து அவர் கையாலேயே பிரசாதம் பெற்ற ஒரு யோக்கியமான வெள்ளைக்காரர் என்பதால் அவர் செய்த புண்யத்திற்காக சென்னை சென்றபோதெல்லாம் மன்ரோ சிலையை ஒரு முறை தரிசியுங்கள். இப்போதுள்ள நம்மவர்கள் மந்திரிகள் அதிகாரிகள் ஒன்றும் விசாரிக்காமலேயே தவறான சட்டங்கள், தீர்மானங்கள் அதிகாரங்கள் இடும் நிலையில் ஒரு வெள்ளைக்காரன், சர்வ அதிகாரமும் தனது கையில் இருந்தும் ஒரு எளிய மடத்தை அதது மீறி அபகரித்த இடம் என்று அப்புறப்படுத்தாமல் நேரில் சென்று விசாரிக்கவேண்டும் என்று தோன்றி நியாயமாக நடந்த ஒரு நேர்மையான மனிதன் என்பதற்காகவாவது மன்ரோ சிலையை நேரில் காண்போம். ராகவேந்திரர் நினைவு வந்து மானசீகமாக அவரை வணங்குவோம்.
ராகவேந்திரரை சந்தித்ததிலிருந்து மன்ரோவுக்கு உள்ளே ஏதோ ஒரு விவரிக்கமுடியாத சந்தோஷம் தோன்றியது. நாகபாசத்தில் கட்டுண்டவர் போல் ஆனார். எந்த நாளில் ,எந்த ஓலைச்சுவடியில், எந்த அரசாங்க முதிரையுடன், மந்த்ராலயம் மடத்துக்கு யாரால் எப்போது வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரங்களை மகான் தெரிவித்ததெல்லா வற்றையும் விவரங்கள் சேகரித்துக் கொண்டு சென்னபட்னம் வந்து அதிகாரிகளை அனுப்பி அவற்றையெல்லாம் சேகரித்து, மீண்டும் அவற்றை பரிசீலித்தார். தேடிய ஆவணங்கள் மஹான் சொன்ன இடங்களிலேயே இருந்தன. மந்திராலயம் இருந்த நிலமும் தானமாக அளிக்கப்பட்டது தெளிவாக தெரிந்தது.
''மந்த்ராலயம் மடத்திற்கே சொந்தம். எனவே அரசாங்கம் அதில் தலையிட உரிமையில்லை'' என மன்ரோ ஆணை பிறப்பித்தார்.இன்று மந்திராலய பிருந்தாவனம் நமக்கு மிஞ்சியது. உனது நேர்மைக்கு நியாயத்துக்கு நன்றி மன்ரோ.
பிறகு குருவருளால் மன்ரோ தென் மாநிலங்களுக்கு கவர்னர் ஆனார். ராகவேந்திரரும் மன்றோவும் பேசியது எவர் கண்ணிலும் படவில்லை எவர் காதிலும் விழவில்லை. ஆனால் இது நடந்தது உண்மை என மன்றோ வெளியிட்ட அரசாங்க அதிகார செய்தி வெளிவந்தது. கீழே அதன் நகல் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து மகிழவும்.
No comments:
Post a Comment