Saturday, November 17, 2018

THOUGHTS


மரத்தடி சிந்தனை -- J.K. SIVAN

தாமு அடிக்கடி யோசிப்பான். ஒன்றரை அணா வேர்க்கடலை மடிநிறைய வாங்கிக்கொண்டு வழக்கமான பிள்ளையார் கோவில் சந்து முனையில் ஆத்தங்கரை படுகை பக்கத்திலே இடிந்த மண்டப சரிவான மேடையில் நாவல் மரத்தடியில் உட்கார்வான். காட்டு ஜிலு ஜிலு என்று காசு கொடுக்காமலே ஏ.சி. நாவல் மரத்தில் ஒரு பழத்தை கூட வாண்டுகள் விட்டு வைப்பதில்லை. மரத்தடியில் சுப்பம்மா தகர ''ப'' வின் நடுவே களிமண் அடுப்பில் வாணலியில் வடை சூடாக தட்டி விற்பாள். அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். என்ன தான் கை பாகமோ. ஒரே அளவில், வட்டமான குண்டு மொறு மொறு பிரவுன் வடை புஸ என்று இருக்கும். நிறைய கடன் கொடுத்து வடை இழந்து இருக்கிறாள். ஆகவே காசில்லாவிட்டால் திட்டுவாள். ஒரு அணா ஒரு வடை. விடிகாலையில் ஐந்து மணிமுதல் ஏழுமணிவரை இட்டலி சுட சுட பாதாம் இலையில் தருவாள். ரெண்டு இட்டலி ஒரு அணா . மல்லிப்பூ மாதிரி வெள்ளை வெளேர் இட்லி சுடசுட தேங்காய் சட்னி அரைத்து ஒரு சம்படத்தில் கொண்டு வருவாள். ஒவ்வொருத்தர் எட்டு பத்து இட்டலி கூட சாப்பிடுவார்கள். சுப்பம்மாவுக்கு கணக்கு வீக். தாமுவை இலைகளை எண்ணச் சொல்வாள். ஒரு இலைக்கு ரெண்டு இட்லி. ஒரு அணா. எத்தனை இலை எத்தனை அணா என்று கூட்டி சொல்வான்.சுப்பம்மா ரூபாயை பார்க்காத அணாவில் வாழ்ந்த ஜென்மம். அவ்வப்போது தாமு இலை கணக்கில் சேராது. அது சர்விஸ் சார்ஜ். சரி சரி தாமுவை பற்றி பேச ஆரம்பித்தது எங்கோ இட்லி வடையில் கொண்டுவிட்டுவிட்டது.

தாமு யோசிப்பவன் அல்லவா?

''எங்கே எல்லாம் என் கவனம் போகிறது? அதோடு என் எண்ணமும் அங்கே எப்படி தானாகவே போய்விடுகிறது? இது ஒரு நிமிஷமா ஒரு நாளா. எப்போதும் தான் நிகழ்கிறது. ஆச்சர்யமாக இல்லை? என்னுள்ளே ஒரு சக்தி அது ஆக்கபூர்வமா, அழிவுக்கு காரணமா? எதனால் எண்ணம் செயல் படுகிறது?. என் எண்ணப்படி நடந்தால் எனக்கு திருப்தி கிடைக்கிறது. அப்படி நடக்காவிட்டால் படு ஆத்திரம்.

மனது குழம்பிவிட்டால் தான் பெரிய தொந்தரவு. எதையோ ஒன்றை பிடித்துக் கொண்டு குரங்குப் பிடியாக,தேவையில்லாமல் சிரமப்படுகிறது. குரங்குப் புண்ணாக அந்த எண்ணத்தையே சுற்றி சுற்றி வருகிறது. அதனால் உருவாகும் துன்பங்களைக் கண்டு திணறுகிறது. எப்படி சமாளிப்பது என்று திரும்ப திரும்ப அதிலேயே புத்தி போகும். ஒருவேளை எதிர்பார்த்தது நடக்காதோ? நடக்காவிட்டால் என்ன விளையும் என்று ஒரு பெருமூச்சு, பயம், அதன் விளைவினால் ஏற்படும் அதிருப்தி. உடம்பும் இதனால் களைத்துவிடும். பசி இருக்காது. தூக்கம் வராது. நமது முழு கவனமும் இந்த கவலையிலேயே ஆழ்ந்து விடுவதால் மற்ற எண்ணங்களை கவனிப்பதில்லை. மற்ற வேலைகள் நின்று போகிறது. அதனால் வரும் துன்பங்கள் வேறு சேர்ந்து விடுகிறது. கவலை. கவலை. கவலை. எங்கும் எதிலும் கவலை, ஏமாற்றம். உடல் சோர்ந்து விடுகிறது. எதிலும் அலுப்பு தட்டுகிறது. டாக்டர் பாலாஜியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்கணும்.

ஒரு சிறு கொசுவிஷயம் யானை உருவம் எடுத்து விடுகிறது.

எதுவுமே உடனே மாறிவிடாது. மனசை மாற்றிக்கொள்வதால் சடக் கென்று மாறுதல் வராது. உள்ளே ஒரு அஸ்திவாரம் போட்டு தான் கட்டிடம் எழுப்பவேண்டும். நிறைய திட சங்கல்பம் தான் இதற்கு சிமெண்ட். தீர்மானமான தீர்க்க எண்ணம் தான் செங்கல்.

எது? ஏன்? எதனால்? எப்படி? என்று ஒவ்வொரு எண்ணத்தையும் ஸ்கேன் பண்ணினால் சிலது உடனே காணாமல் போய்விடும். இதன் விளைவு என்ன? என்று சிலதை ஆராயும்போது தேவையில்லாத துன்பத்தை, தொந்தரவை தவிர்க்க வழி தெரியும். கட்டிடம் கெட்டிப்பட ஊற்றுகிற தண்ணீர் போல் அங்கே நமது ஆக்க பூர்வ சக்தி வெளிப்படும். தேவைப்படும். கொசு யானையாகாமல் அங்கேயே மடியும்.

மற்றவர்களை கவனிக்கும்போது அவர்கள் குறைபாடுகள், பலவீனங்கள் கண்ணில் புலப்படுகிறதே. அதை மனதில் வாங்கி வைத்துக் கொண்டு என்ன பயன்?. அவர்களுடைய குறைபாடுகள் பலவீனங்கள் அதால் விளையும் கேடுகள் நமக்கு பாடமாகவேண்டும். அந்த தவறு இந்த வீட்டில் நேரக்கூடாது. அவை என்னை நெருங்க கூடாது என்று மனம் திடப்பட வேண்டும். பலவீனத்தை பலமாக மாற்ற சக்தி அப்போது நம் உள்ளே பிறக்கும். ஒருவனிடம் உள்ள நல்ல குணங்கள், அவனது ஆக்க பூர்வ செயல்கள் நாமும் பின்பற்ற உபயோகமானால் நம்முள் அத்தகைய எண்ணங்கள் பரவி விட்டால் நமது சக்தி அதிகரிக்கிறது. தவறுகள் குறைகள் கண்ணில் படக்கூடாது.

நமது எண்ணங்கள் தான் நமது வெளித்தோற்றத்தை மேம்படுத்துகிறது. உள்ளே எரிமயிலையை விழுங்கியவன் முகத்தில் பவுடர் போட்டதால் சந்தோஷமாக தெரியுமா?

ஒன்றரை அணா வேர்க்கடலை எத்தனை நேரம் தாங்கும். தாமு எழுந்து போனான். அவன் தான் திரும்ப திரும்ப யோசிப்பவனாயிற்றே. மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...