ஐந்தாம் வேதம். J.K. SIVAN
மகா பாரதம்.
அஷ்டா வக்ரன் ( எட்டு கோணல் ஆசாமி)
'உசினவன் ஒரு பெரிய யாகம் செய்தான். அவனை பரிசோதிக்க இந்திரனும் அக்னியும் முறையே ஒரு பெரிய கழுகாகவும் (இந்திரன்) புறாவுமாக (அக்னி) வருகிறார்கள். கழுகு புறாவை துரத்துகிறது. புறா உயிர் தப்ப உசினவனுடைய யாகசாலைக்குள் நுழைந்து அவன் மடியில் தொப் என்று விழுகிறது. கழுகும் பின்னாலேயே வந்தது.
''அது என் ஆகாரம். என்னிடம் கொடு'' என்றது கழுகு. புறா நடுங்கியது. பரிதாபமாக உசினவனைப் பார்த்தது.
''கழுகே, உனக்கு வேண்டிய ஆகாரத்தை நான் அளிக்கிறேன் இந்த புறா வேண்டாம்'' என்றான் உசினன்.
''நான் தேடி அடையும் ஆகாரமே எனக்கு போதும் நீ எதுவும் தரவேண்டாம். கொடு என் புறாவை'' என்றது கழுகு.
''என்னிடம் அடைக்கலம் வந்த புறாவை நான் உன்னிடம் தரமாட்டேன். என் உடலிலிருந்து மாமிசம் வேண்டுமானால் தருகிறேன் எடைக்கு எடை. சரியா'' என்றான் உசினவன்.
''நீ சொல்வதால் சரி என்று ஒப்புக்கொள்கிறேன் '' என்றது கழுகு
ஒரு தராசில் புறாவை வைத்து அதற்கு எடையாக தனது உடலில் இருந்து சதையை வெட்டி வைத்தான். எவ்வளவு வைத்தாலும் எடை குறைவாகவே காட்டவே தானே முழுவதுமாக அமர்ந்தான். சரியாக இருந்தது.
''கழுகே, என்னை நீ உண்ணலாம். என் உயிர் எனக்கு முக்யமில்லை'' என்றான் உசினவன்.
அவன் தர்ம சிந்தனை, பரிவு கருணை ஆகியவற்றை மெச்சி கழுகும் புறாவும் மறைந்து அங்கே இந்திரனும் அக்னியும் தோன்றி உசினவனுக்கு காட்சி தந்து ஆசி வழங்கினார்கள் என்று கதை முடிகிறது. இது கிட்டத்தட்ட சிபி சக்ரவர்த்தி புறா கதையை காப்பி அடித்த மாதிரி வருகிறது அல்லவா?. எப்படி இருந்தால் என்ன. இது மகாபாரதத்தில் வரும் நிகழ்ச்சி. சிபி கதை பின்னால் உசினவன் கதையை ஒட்டி வந்திருக்கலாம். உசினவனுக்கே சிபி என்ற பெயரும் உண்டோ என்னவோ?
''முனிவரே ஒவ்வொரு நாளும் நீங்கள் சொல்லும் விஷயங்கள் மேலும் மேலும் எனக்கு ஆர்வத்தை வளர்க்கிறது . தொடர்ந்து நீங்கள் எனக்கு அப்புறம் தீர்த்த யாத்திரையில் என் கொள்ளு தாத்தாக்களுக்கு லோமசர் என்னென்ன சொன்னார் என்று சொல்லுங்கள்'' என்றான் ஜனமேஜயன்.
''ஜனமேஜயா அப்புறம் என்ன நடந்தது தெரியுமா, யுதிஷ்டிரனும் சகோதரர்கள், பாஞ்சாலி , லோமசர் ஆகியோரும் மேலே நடந்தார்கள். ஒரு இடத்தில் ''யுதிஷ்டிரா இது என்ன இடம் சொல்லட்டுமா?
''சொல்லுங்கள் சுவாமி'' என்றான் யுதிஷ்டிரன்.
''இது தான் ஸ்வேதகேதுவின் ஆஸ்ரமம் இருந்த இடம். அவர் உத்தாலகரின் புத்திரன். வேதங்கள் கற்றவர்கள் ஸ்வேதகேதுவை மறக்கமுடியுமா?''
யுதிஷ்டிரன் அந்த தென்னை மரங்கள் அடர்ந்த குளுமையான அமைதிப் பிரதேசத்தை சுற்றும் முற்றும் பார்த்தான். மனோ ரம்மியமாக இருந்தது . குயில்களும் இதர பக்ஷிஜாலங்களின் மனங்கவர் இசையில் தென்றல் அவனை அரவணைத்தது. அப்படியே சிலையாக ஒரு கணம் நின்றுவிட்டான்.
''தர்மா, இந்த ஸ்வேதகேது சரஸ்வதி தேவியை நேரில் பார்த்தவன். பேசியவன். அவனுடைய மற்ற உறவினன் பெயர் அஷ்டாவக்ரன். இருவருக்கும் மாமன் மருகன் உறவு . இந்த ரெண்டு பிராமணர்களும் அசாத்திய வேத ஞானிகள். மந்திர சக்தி கொண்டவர்கள். ஜனகன் அரண்மனையில் யாகம் செய்தவர்கள். வந்தின் என்ற பெரும் பண்டிதனைத் தோற்கடித்தவர்கள்''
'' மகரிஷி இது என்ன விசித்திரமான பெயர் அந்த ரிஷிக்கு . இப்படி ஒரு பெயரா? ''அஷ்டா வக்ரன்! (எட்டு கோணல் ஆசாமி). என்ன ஆயிற்று அவருக்கு.... ஒரு நீண்ட கதைக்கு அடி போட்டுவிட்டான் யுதிஷ்டிரன். தொண்டையைக் கனைத்துக்கொண்டு நடந்துகொண்டே லோமசர் சொன்ன நீண்ட கதையின் சாராம்சத்தை மட்டுமே நான் இங்கு கொடுக்கமுடியும். நீளமாக எழுதிக்கொண்டே போனால் நான் என்று பாரதத்தை எழுதி முடிப்பது. ...! இதே அஷ்டா வக்ரன் பற்றி வேறொரு கதை உலவுகிறது அது முற்றியும் மாறு பட்டதாக இருக்கிறது. அதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
"உத்தாலக ரிஷிக்கு ஒரு சிஷ்யன். கஹோதன். குருவிற்கு சிஸ்ருஷை செய்வதில் அவனை மிஞ்சுபவர் யாருமில்லை. அவனது குருபக்தியை மெச்சி தனது பெண் சுஜாதாவை அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறார். அவள் வயிற்றில் வளரும் சிசு தந்தை கஹோதன் வேதங்கள் சொல்வதை சிசுவாக வளரும்போதே கற்கிறான் இப்படியே நிறைய வேத சாஷ்டிரங்களை கேட்டு கற்று ஆராய்ந்து வளர்கிறான்.
ஒருநாள் தந்தை கஹோதனிடம், தாயின் வயிற்றுக் குள்ளிருந்தே சிசுவாக வளரும் மகன் பேசுகிறான்:
''அப்பா நான் வளரும் சிசுவாக இருக்கும்போதே உங்களிடமிருந்து சாஸ்திரங்கள் வேதங்களையெல்லாம் கற்றுவிட்டேன். சில இடங்களில் நீங்கள் சொல்வது சரியில்லை'' என்று தந்தையை திருத்துகிறான். மற்ற சிஷ்யர்கள் முன்பு இவ்வாறு அந்த சிசு சொல்வது ரிஷிக்கு கோபமூட்டியது. மகனென்றும் பாராமல் '' நீ அதிகப் பிரசங்கி. உன் உடல் எட்டு கோணலோடு நீ பிறப்பாய்'' என சபிக்கிறார். அஷ்டாவக்ரன் (எட்டு கோணல் ஆசாமி) என்றே பெயர் பெறுகிறான். அவனுக்கு மாமன் தான் ஸ்வேதகேது. அதே வயதுக்காரன். அஷ்டாவக்ரன் பிறக்குமுன் கஹோதன் ஜனகன் அரண்மனை செல்கிறான். அங்கே வந்தின் என்பவனிடம் வாதத்தில் தோற்கிறான். அங்கே ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு இறக்கிறான். சிஷ்யனும் மருமகனுமான கஹோதனின் மரணத்தில் உத்தாலகர் வருந்துகிறார். மகள் சுஜாதாவிடம் அஷ்டாவக்ரனுக்கு இது தெரியக்கூடாது என்கிறார்.
ஒருநாள் அஷ்டாவக்ரன் உத்தாலகர் மடியில் உட்காரும்போது ஸ்வேதகேது ''இது உன் தந்தை இல்லை என்தந்தை'' என்று அவனை இழுத்து தள்ளுகிறான். அஷ்டாவக்ரன் சுஜாதாவிடம் 'என் தந்தை எங்கே?" என்று கேட்கிறான். அவள் நிகழ்ந்ததை எல்லாம் சொல்கிறாள். அஷ்டாவக்ரன் ஸ்வேதகேதுவுடன் ஜனகன் அரண்மனைக்கு செல்கிறான். அங்கே என்ன நடந்தது?
No comments:
Post a Comment