Wednesday, November 7, 2018

LIFE'S LESSON



                                             வாழ்க்கையில் வெற்றிக்கு ஒரு ரகசியம்  

ராமசாமியை  நான் கவனித்தவரையில்  அடிக்கடி  கதை கேட்பான். நீதிக்கதை.  தத்துவ ங்கள் கேட்கிறான் என்று சொன்னால்  தலையை புரிந்தமாதிரி ஆட்டுவான்.  அடுத்தமுறை அன்று சொன்னீர்களே அதை திரும்ப சொல்லுங்கள் சரியாக புரியவில்லை என்பான்.  நமக்கே தத்துவங்கள்  சொல்ல மறந்து போய்விடும்.  அதிகம்  ராமசாமி போன்றவர்களுக்கு  கொஞ்சம்  கஷ்டமான, யோசிக்க வேண்டிய விஷயங்களை சொல்லாமல் இருப்பது நல்லது என்பது நீதி.  அவர்களை சின்ன சின்ன விஷயமாக சொல்லி யோசிக்க தயார் பண்ண வேண்டும். 

இன்று ஒரு கதை  கேட்க வந்த ராமசாமிக்கு  எங்கோ ஆங்கிலத்தில் வந்த ஒரு குறுஞ்செய் தி
சொன்னதாய் நீங்களும் தான் கேளுங்களேன்.

ஒரு  விடுதியில்  நிறைய  பேர்  சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். வேறென்ன பண்ணுவார்கள்?
திடீரென்று ஒரு பெண்  அலறினாள்.  குதித்தாள் . எங்கிருந்தோ ஒரு கரப்பாம் பூச்சி  அவள் மூக்கின் மேல் வந்து ஏதோ பார்க்கில்  செடிக்கிளைமேல்  போல,  உட்கார்ந்து விட்டது.  பயத்தில் உளறினாள்.  அதை  உதற முயற்சித்தாள்.  அது பயந்து போய் கெட்டியாக காலை ஊன்றி மூக்கில் மேல் உட்கார்த்து.  ''ஆ ஊ '' என்று  கத்தி ரகளை பண்ணினாள்.   அருகில் இருந்தோர்  கூட இதனால் பதற்றப்பட்டார்கள்.  எப்படியோ கரப்பாம்பூச்சி அவளை விட்டு பயத்தில் பறந்தது . பக்கத்து மேஜையில்  சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் உட்கார்ந்தது. அங்கும் கிட்டத்தட்ட இதே காட்சி.   

அந்த டேபிளுக்கு  மசால் தோசை வடை கொண்டுவந்த வெய்ட்டர்  இதை பார்த்தான்.  அதை நெருங்கும்போது  அந்த பொல்லாத கரப்பு அவன் சட்டை மேல் தாவியது. அதை பார்த்த வெய்ட்டர் மெதுவாக அதை பிடித்து  அமைதியாக,  வெளியே கொண்டு போய் போட்டான். ''அப்பாடா   நிம்மதி'' என்று பறந்து போனது.

இத்தனை நடந்ததுக்கும் யார் காரணம்? கரப்பா , பெண்களா, வெய்ட்டரா? ஏன் வெய்ட்டர் பதட்டப்படவில்லை. ஏன்  கத்தவில்லை?.  கையில் தட்டில்  நிறைய இருந்த  கண்ணாடி தண்ணீர் டம்பளர்களை கீழே போடவில்லை?.

சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு தக்கவாறு செயல்பட அந்த  பெண்கள் கற்கவில்லை. கரப்பாம்பூச்சியும்  பள்ளிக்கூடம் போகவில்லை.

வீட்டில் மனைவி கத்தும்போதோ, ஆபிசில் மேலிடம் விரட்டும்போதோ, ஏற்படும் ஆத்திரம், தொந்தரவு என்னுள் புகுந்து நானும் அதன்  வசம் ஆகிவிடுவதால் இம்மாதிரி நிகழலாம். வெய்ட்டர் புரிந்து கொண்டு செயல்பட்டான். அமைதியாக இருக்கமுடிந்தது. வீட்டில் அப்பாவோ, அம்மாவோ, மனைவியோ, ஆபீசில் அதிகாரியோ  கத்தும்போது, அது நம்மை அமைதி குலைய வைக்கக்கூடியது தான்.  இடைஞ்சல்கள் வரும். வரத்தான் செய்யும். அதை நிலை குலையாமல் எதிர்கொள்ள மனோ  திடம், அமைதி  வேண்டும். 

தெருவில் பச்சை விளக்கு வரும் முன்னே  பேயாக பறந்து செல்வது எதற்கு? சிகப்பு எரிந்தும் வேகமாக  எதற்கு கடக்க வேண்டும்.  பின்னால்  ஒருவன்  காது  பிளக்க ஹார்ன் அடிக்கும்போது ஏன் கோபம்?  முன்னால் இருப்பவன் நகராமல் எங்கோ  கனவில் இருந்தாலும் கோபம்.  பக்கத்தில் உரசிக்கொண்டு குறுக்கிடுபவனும்  எதிரி...ஏன்?  

பதட்டம் என்னை ஆட்கொண்டுவிட்டது. நான் அதிலிருந்து மீளவேண்டும்.  வாழ்க்கையில் எதிர்ப்புகளையும், இடைஞ்சல்களை விட  அவற்றை சமாளிப்பதில் அமைதியோ, பொறுமையோ இல்லாமை தான் அதிக நஷ்டத்தை உண்டு பண்ணும் என்பது ஏன்  புரியவில்லை?. 

ராமசாமி  அருமை  அருமை  என்று  சொல்லி விட்டு தான்  போனான். அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என்ன சொல்லிக்கொண்டு வருகிறான் என்று.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...