Wednesday, November 21, 2018

KRISHNA SAMVAADHAM

   கிருஷ்ண சம்வாதம்.   J.K. SIVAN 

இந்த கிரிக்கெட்  ஆட்டத்தில் தான் எவ்வளவு தத்துவம் இருக்கிறது. நாம் உணர்வதில்லை.  இன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன்  விளையாடிய  20:20ல்  கடைசி ஓவரில் 6 பந்தில் தோற்று போய் விட்டது.  ஜெயித்திருக்கலாமே.  அவன் அடித்திருக்கலாம் இவன்  முடித்திருக்கலாம்  என்று போட்ட மனக்கணக்கு அத்தனையும் தப்பு. அவனால் முடிந்தது அவ்வளவு தான். தோற்பதும்  ஜெயிப்பதும்  நம் கையில் அல்ல  என்று வேறு வேதாந்தம் இதில். தோற்றதற்கு தான் எத்தனை காரணம் காட்ட வேண்டியிருக்கிறது!!.

வெளியே மழை. இருட்டாக இருக்கிறது. கார்த்திகை மாதமாதலால் வாசலில்  சில வீடுகளில் அகல் விளக்குகள்  காற்று அணைக்கும் வரை எரிகிறது.

எதிரே கிருஷ்ணன் படம்.   சுவற்றில் என்னைப் பார்த்து சிரிக்கிறான். உதட்டில் குழல் இல்லை.  நானும் அவனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டில் யாரும் இல்லை.  மேஜை அருகில் நாற்காலியில் நானும் சுவற்றில் எதிரே படத்தில் கிருஷ்ணனும் தான். எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்?  ஒரு குரல் கேட்கும் வரை

''என்ன பார்க்கிறாய்?''-   யார் பேசினது. வேறே யாருமே வீட்டில் இல்லையே. சுற்றுமுற்றும் எதிரே பக்கத்திலே எல்லாம் பார்த்தேன். 

''நான் தான் பேசினேன். உன் எதிரே இருக்கிறேனே...''
 'கிருஷ்ணா  நீயா? பேசினாயா?''
''ஆம்''
 'ஆஹா,  ஆச்சர்யமாக இருக்கிறதே. வெகுநாளாக உன்னை சில விஷயங்கள் கேட்க விருப்பம். கிருஷ்ணா பதில் சொல்கிறாயா?''
 'கேள்''
''என்னிடத்தில் நிறைய  தவறுகள்,  தப்புகள், கெட்டதுகள் இருக்கிறதே அதையெல்லாம் நீக்குவாயா?''
'' ஹா ஹா ''
''என்ன கிருஷ்ணா சிரிக்கிறாய்?
''அதெல்லாம் நீயே அல்லவோ விலக்கிக் கொள்ளவேண்டும். உனக்காக நான் சாப்பிடமுடியுமா?  ஏன் நீயே அக்கறையோடு முயற்சிக்கவில்லை?''
''சரி அப்பா, நான் இனிமேல் முயற்சிக்கிறேன். என்  உடம்பை முழுதுமாக பாதுகாப்பாயா?''
''முட்டாளே, அழியும் உடம்பை யார் பாதுகாக்க முடியும்?. ஆத்மாவை வேண்டுமானால் முழுதாக  என்னிடம் கொடு. நான் அதில் இருந்து உன்னை பாது காக்கிறேன்.''
''அதற்கெல்லாம் பொறுமை என்னிடம் இல்லையே? அதையாவது கொடேன்?''
''ஹுஹும். நீ  இன்னும் புரிந்து கொள்ளவில்லை.  பொறுமை என்பதே  நீ அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்து நீ வளர்த்துக்கொள்ளும் சக்தி.     பொறுமை என்பது  நான் கொடுப்பதல்ல.  நீயாக அனுபவித்து அறிந்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்'
' என்ன கிருஷ்ணா இது ?  இடக்கு மடக்காக பேசுகிறாய்.  சந்தோஷத்தையாவது எனக்கு நீ தரக்கூடாதா? இதற்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லாதே''
''இதோ பாரப்பா, நான் உனக்கு சந்தோஷமாக இரு  என்று ஆசி தான் வழங்கலாம். வழி தான் காட்டலாம். சந்தோஷத்தை நீ தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்''
 ''என்ன கிருஷ்ணா இது?  சரி  துன்பங்களாவது என்னை விட்டு விலகசெய்யேன்''
 ''உனக்கு நான் எப்படியப்பா விளக்குவேன்?.   அடடா  அர்ஜுனனே  தேவலை போல் இருக்கிறதே.  இதோ பார் நீ சந்திக்கும் கஷ்டங்கள் துன்பங்கள் தான் உன்னைஇந்த உலகத்திலிருந்து   தூர செல்ல  வைக்கிறது. என்னிடம் நெருங்க செய்கிறது.  நிறைய பேருக்கு புரிகிறதே . உனக்கு?'''
'' என் எண்ணம் மனோதிடம், உறுதி,  வளரவேண்டும். அதை வளரச்  செய்வாயா, அதுவும் மாட்டாயா?''
 '' உனக்கு மனம்  கொடுத்திருக்கிறேன். நீ தான் அதை சரியாக உபயோகித்து பழக்கப்படுத்தி  திடப்படுத்திக் கொள்ளவேண்டும்.  செடி வளர சில பூச்சி அடித்த இலைகளை, வாடிய, அழுகியவற்றை  கிள்ளவேண்டும். சில சிறு கிளைகளை அகற்ற வேண்டும். அது போல் உன் மனம் சரியான வழியில் வளர நான் எண்ணங்களை தருவேன். அவற்றை உபயோகப்படுத்திக் கொள். செடி நன்றாக வளர்ந்தால் பழம்,  பூ  எல்லாம் தானே கொடுக்கும். சரியா?''

''ஓஹோ.   அப்படியென்றால்  எனக்கு  வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க தேவையானவற்றை தருவாயா?''
' உனக்கு தான் உலகில் உனக்கு தேவையானவை எல்லாம் படைத்து அவற்றை  அனுபவிக்க உனக்கு  உன் உயிரையே தந்திருக்கிறேனே  நீ அனுபவித்து வாழ. இன்னும் என்ன"?.
''எனக்கு என்ன கேட்பது என்று புரியவில்லை. கடைசியாக ஒன்று மட்டுமாவது கேட்கிறேனே .  நீ என்னை எப்படி நேசிக்கிறாயோ, அது போல் நான் மற்றவர்களையும் நேசிக்க  செய்வாயா கிருஷ்ணா?''
' அப்பாடா  இப்போது தான் முதல்முறையாக  அதாவது கடைசியாக   உருப்படியாக ஒன்று கேட்டாய் . நேசிப்பது என்றால் என்ன என்று முதலில் சாவதானமாக ஒன்றை புரிந்து கொள் .  இந்த உலகத்துக்கு நீ ஒரு சாதாரணமான ஒருவன். ஆனால் நீ அன்பாக இருக்கும்,  உன்னிடம் நேசமாக இருக்கும் ஒரு ஜீவனுக்கு நீ தான் உலகமே.''  புரிகிறதா.  அந்த நேசம் அன்பு உன்னை நீ கேட்ட சகலத்தையும் தந்து இந்த உலக வாழ்வில் சந்தோஷத்தை தரும்.

குட்டி தூக்கத்தில் இருந்து விடுபட்டேன்.  வாசலில் யார் இப்படி விடாமல் மணி அடித்து என்னை எழுப்பியது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...