Monday, November 12, 2018

KALAMEGAM





சிலேடையில் சிவகாமி - J.K. SIVAN .

காளமேகப்புலவர் நள்ளிரவில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு ஒரு திண்ணை காலியாக இருந்தது. அதில் தனது மூட்டையை இறக்கி இரவு அங்கு தங்க முடிவு செய்தார். அந்த வீட்டுக்காரர் தர்ம சிந்தனை உடையவர். யாராவது இரவில் வந்து திண்ணையில் தங்க நேர்ந்தால் உபயோகப்படட்டும் என்று குளுமையான ஒரு மண் ஜாடியில் குடி நீர் நிரப்பி அருகில் ஒரு தட்டில் இரவு சுடச்சுட செய்த மாவுப் பணியாரங்கள் மூன்று நான்கு மூடி வைத்திருந்தது.

தான் வந்தது தெரியவேண்டும் என்று காளமேகம் ''சிவோஹம்'' என்று குரல் கொடுத்தார். எங்கும் இருண்டு இருந்தது. சற்றைக்கெல்லாம் வீட்டுக் கதவு திறந்தது. ஒரு முதியவர் கையில் விளக்குடன் ''யார் ஐயா?'' என்று குரல் கொடுத்தவாறு விளக்கை முகம் வந்தவர் தெரிய தூக்கிப் பிடித்தார்.

''நான் வெளியூர் இன்று இரவு இங்கே திண்ணையில் தங்கட்டுமா? என்கிறார் காளமேகம்.
''தாராளமாக தங்குங்கள் ஐயா. குடிக்க நீரும் சில தின்பண்டங்களும் வைத்திருக்கிறேன். சௌகரியமாக ஓய்வெடுங்கள்''.
''நன்றி ஐயா" என்கிறார் காளமேகம்.
''ஐயாவுக்கு எந்த ஊர்? என்ன பேர்?'' என வினவுகிறார் வீட்டுக்காரர்.
''நான் எல்லா ஊரிலும் சுற்றுபவன். என் பெயர் காளமேகம்''
''காளமேகம் என்று ஒரு பெரிய புலவர் பெயர் எனக்கு தெரியும் '' என்கிறார் வீட்டுக்காரர்.
''அடியேன் தான் காளமேக புலவர்'' தாங்கள் என்ன பெயர் கொண்டவர்கள்?''
''நான் சிவகாமி நேசன்'' ஆடு மாடு பண்ணை வைத்திருப்பவன். தங்களை நேரில் சந்த்தித்தது பாக்யம். நான் ஒரு விவசாயி. இந்த சிதம்பரம் தான் என் உயிர்''.
''ஆஹா நான் சிவகாமி தரிசனத்துக்காக வந்தவன். விடிந்தால் அம்பாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல்'' என்கிறார் புலவர்.
''ஆஹா எங்களால் ஆன சிறு உதவி உங்களுக்கு செய்ய நாங்கள் புண்யம் செய்தவர்கள். என்ன பாக்யம் எங்களுக்கு உங்களை உபசரிக்க. நன்றாக ஓய்வெடுங்கள். ஏதாவது தேவையென்றால் கூப்பிடுங்கள்.நடராஜன் சிவகாமியை தரிசனம் செய்து நாவினிக்க அவர்களைப் பாடுங்கள் ' என்று சொல்லி வீட்டுக்காரர் வணங்கி உள்ளே சென்று கதவை தாழிட்டு கொள்கிறார்.
இரவு கழிந்தது. உணவும் நீரும் உறைவிடமும் கிடைத்து நன்றாக உறங்கி நடைபயண களைப்பு தீர்ந்தது. பசியும் தீர்ந்தது. பொழுது விடிந்தது.
காளமேகப்புலவர் இளம் காலையில் குளத்திற்கு சென்று ஸ்நானாதிகள் முடித்து திருநீறு பூசி நடராஜன் சிவகாமி தரிசனத்துக்கு செல்கிறார்.
சிவகாமி சந்நிதியில் நிற்கும்போது அவருக்கு கற்பனை வெள்ளம் கவிதை யாக வெளிவருகிறது.
தில்லை சிவகாமி அம்மையை விடியற்காலை தீப ஒளியில் கண்டு அவள் புன்னகை தவழ் வதனம் அவருக்கு ஒரு அற்புத பாடலை இயற்ற அருள்கிறது.

காளமேகம் சிலேடை யில் ஒப்பற்றவர். சிலேடை என்பது ஒரு சொல்லில் இரு அர்த்தங்கள் தரும்இவை இயற்றும் தனித்திறன் . கவிஞர்கள் இதை இரட்டுற மொழிதல் (சிலைடை) அணிப் பாடல் என்பார்கள்.

வெறும் சிலேடை மட்டும் அல்ல. அதிலே சுவை கூட்ட வஞ்சப் புகழ்ச்சி அணி வேறு கலந்த பாடல். ஒருவரை திட்டுவது போல் பாராட்டுவது. இகழ்வது போல் புகழ்வது. மிகவும் சிரமம் இப்படி எழுதுவது. இந்தக் கலையில் வல்லுநர்கள் அக்காலத்தில் காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்றவர்கள்.

இப்போது அன்று காலை காளமேகம் சிதம்பர நாயகி சிவகாமியின் மேல் இயற்றிய வஞ்சப்புகழ்ச்சி அணி பாடலை ரசிப்போம்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!

முதலில் படிப்போர்களுக்கு அர்த்தம் அவ்வளவாக புரிய வாய்ப்பில்லை. விளக்குகிறேன். கோன் என்பது ஆடு மாடு மேய்க்கும் கோனார்கள்.

மேலெழுந்த வாரியாக பார்த்தால். மதுரையில் மாடுகளை மேக்கும் கோனான் ஒருவனின் தங்கை ஒருத்தி நேராக சிதம்பரம் சென்றாள் . அங்கே ஆடு மேய்ப்பவனுக்கு மனைவி ஆனாள். அதோடு விட்டாளா? அதற்கப்புறம் நடந்த விஷயமும் சொல்கிறேன். கேள். . அதை இடைச்சி, இடையர் பெண், ஆடு மேய்க்க கோட்டான் ஆந்தையை போல் ஒரு பிள்ளையை பெற்றாள். இது சிவகாமி அன்னையை தூஷித்து சிறிய ஒரு இடைச்சி, மாடுமேய்ப்பவன் தங்கை, ஆடு மேய்ப்பவன் பெண்டாட்டி , ஆந்தை கோட்டான் பிள்ளை பெற்றவள் .....என்று பொருள் தரும் அல்லவா? இது இகழ்ச்சி. .

இதற்கு இன்னொரு அர்த்தம், புகழ்ச்சி, சிலேடையில் என்ன வென்றால் அங்கு தான் இருக்கிறது காளமேகத்தின் கவிதாஜாலம்.

கோன் என்றால் ராஜா என்று ஒரு அர்த்தம். அல்லது ஆண்டவன் என்று பொருள். மாட்டுக்கோன் தங்கை என்பது கோகுல பிருந்தாவனத்தில் பசுக்களை ரக்ஷித்த கிருஷ்ணன் சகோதரியை சொல்கிறது. தமிழில் ஆடுதல் நடனத்தை குறிக்கும். ஆகவே ஆட்டுக்கோன் ஆடலரசன், நடராஜன், நடேசன்,, சிவன் என்று ஒரு அர்த்தம். மதுரையில் தனது சகோதரி மீனாட்சியோடு சுந்தரேஸ்வரரின் கல்யாணம் நடத்தியவர் விஷ்ணு. (கிருஷ்ணன்) அல்லவா?. சிற்றிடைச்சி என்பது பெண்களுக்கு அழகு சேர்க்கும் கொடியிடை கொண்ட சிவகாமியை குறிக்கிறது.

குட்டி மறிக்க என்று வார்த்தையை போடுகிறார் காளமேகம். அதாவது தலையில் (சுக்லாம்பரதரம்) என்று குட்டிக் கொள்கிறோம். இரு கைகளையும் மார்பின் குறுக்கே மூடிக்கொண்டு வலது கரத்தால் இடக்காது , இடக்கரத்தால் வலது காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறோம். கையை இப்படி குறுக்கே வைத்துக்கொள்வது' '' மறித்துக் கொள்வது (x ) . யாரை கும்பிடுகிறோம்? கோட்டானை? ஆந்தை கோட்டானை அல்ல, கோடு என்றால் தந்தம், ஆனை விநாயகனை குறிக்கும். நாம் வணங்கும் ஒற்றைக்கொம்பன் விநாயகனை பெற்றவள் சிவகாமி என்று பொருள்.



பாடலில் வரும் ''கட்டிமணி சிற்றிடைச்சி'' நவரத்ன மணிகளால் வேயப்பட்ட மணிமேகலையை இடையில் அணிந்த சிறிய இடையைக் கொண்ட சிவகாமியை குறிக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...