Wednesday, November 14, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி      J.K. SIVAN 

சேஷாத்திரி ஸ்வாமிகள்

              
                  ''நான் பத்து ரூபாய் தருகிறேன்''

அது வெள்ளைக்காரன் காலம்.   வெள்ளைக்காரன் அரசாங்கத்தில் போலீஸ் உத்யோகஸ்தர்களுக்கு சம்பளம் மட்டு.  அதிகாரம் தூள் பறக்கும்.  எல்லோரும் போலீஸ் என்றாலே பயப்படுவார்கள்.   சிவப்பிரகாச முதலியார் ஒரு சப் இன்ஸ்பெக்டர். வெகுநாளாக அவருக்கு மேலதிகாரிகள் உத்யோக உயர்வோ, சம்பள உயர்வோ பரிந்துரைக்கவில்லை. மிகவும் வருத்தம் முதலியாருக்கு.

அவர் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்.  திருவண்ணாமலைக்காரர்.   எங்கு பார்த்தாலும் வணங்கி தூர நின்று சேவிப்பார். வேண்டிக் கொள்வார். எழுபது ரூபாய் சம்பளம் போதவில்லை. என்ன செய்வது? ஒருநாள் வழியில் ஸ்வாமிகளைப்  பார்த்தவுடன்,   சைக்கிளில் தனது உத்யோக போலீஸ் உடை அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு சென்றவர் வண்டியை நிறுத்தி நின்றார்.

''டேய் உனக்கு பத்து ரூபாய் தரட்டுமா?'' என்கிறார் ஸ்வாமிகள்.

''எங்கே சாமி. எவ்வளவோ மனு போட்டேன். பத்து ரூபாய் ப்ரோமோஷன் தரமாட்டேங்கறாங்களே. நான் எப்படி பத்து ரூபா வாங்கறது?''

''நான் தரேண்டா. வாங்கிக்கோ.'

ஆச்சர்யமாக ஒரு  காரியம் செய்தார்  ஸ்வாமிகள். '  சப் இன்ஸ்பெக்டர்  முதலியார் தலைப்பாகையை அவர் தலையிலிருந்து எடுத்து தான் அணிந்து, தனது அழுக்கு கிழிந்த மேல் துண்டை முதலியார் தோளில் போட்டு ''வா போகலாம்'' என்கிறார்.

இருவரும் மேல் அதிகாரி  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சென்றார்கள். சர்க்கிளின் மனைவி ஸ்வாமிகளைக்  கண்டு வணங்கினாள் . அவர் தலையில் போலீஸ் தலைப்பாகை கண்டு அவளுக்கு  சிரிப்பு வந்தது. அவர்  மீது பக்தி கொண்டவள்  அந்த அம்மாள்.

''முதலியார் இனிமே உங்களுக்கு நல்ல காலம் வந்தாச்சு. சம்பளம் உயரும்'' என்றாள் .

''ஆமாம்'' என்ற ஸ்வாமிகள் எழுந்து நின்று தனது தலையில் இருந்த தலைப்பாகையை முதலியார் தலையில் வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

 ''போலீஸ் சகவாசம் கூடாது. வேண்டாம்.திருட்டுப் பசங்கள் '' என்று போகும்போது சொல்லிக்கொண்டே சென்றார்.

அவர் இதைச்  சொன்ன நேரம் ஆபிசில் டி.எஸ்.பி. முதலியாருக்கு சம்பள உயர்வோ உத்யோக உயர்வோ கூடாது என்று சொல்லியும் A.S.P. அவருக்காக பரிந்துரைத்துக் கொண்டிருந்தார். ''அதெல்லாம்  இல்லை வெகு காலம் நன்றாக உழைத்தவர் இந்த  சப் இன்ஸ்பெக்டர்.  அவருக்கு உடனே பத்து ரூபாய் சம்பள உயர்வு கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டார் உயர் அதிகாரி.  அந்த ஆணை கடிதம் முதலியாருக்கு ஒரு ஆள் மூலமாக அன்று சாயந்திரம் கிடைத்தது.

அதனால் தான் '' நான் உனக்கு பத்து ரூபாய் தரேன் '' என்று அன்று பார்த்து ஸ்வாமிகள் சொன்னாரோ? என்று முதலியாரும் அவர் மனைவியும் அதிசயித்துக் கொண்டிருந்தார்கள்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...