எப்படி மாறி விட்டோம்? J.K. SIVAN
ஆரம்பத்தில் எல்லாமே ஆச்சரியமாக , அற்புதமாக தான் இருந்தது. நினைத்தாலே ''இப்படியா?'' என்று வியக்க வைத்தது. ஆமாம். கொஞ்சம் சொல்கிறேன் கேளுங்கள்:
பிரபஞ்சத்தில் முதல் முதலாக ஒரு யுகம் துவங்கியது. அதற்கு யாரோ கிருத யுகம் என்று பெயர் வைத்தார்கள். அங்கு இப்போது போல் மத சண்டைக்கு வழி இல்லை. ஒரே மதம் சம்மதம் தான். யாருமே மற்றொருவரை கும்பிட்டு ஸ்வாமிகளே என்று பெருமைப் படுத்தவில்லை. எல்லோருமே ஸ்வாமிகள் தான். நித்ய வழிபாடு, பூஜை வேண்டுதல் எதுவுமே இல்லை. எல்லோருமே ஸ்வாமிகள் என்று தான் சொன்னேனே. யார் யாரை வழிபடவேண்டும். எதை தேடவேண்டும். எல்லாமே இருந்தது. எதையும் வாங்கவோ விற்கவோ தேவையில்லை. எல்லாமே எல்லா இடத்திலும் எல்லாருக்கும் சொந்தம் என்கிறபோது தனியாக எதை தனக்கு என்று வாங்கி வைத்துக்கொள்ள அவசியம்? யாரும் யாருக்கும் வேலையாள் இல்லை. எஜமானனும் இல்லை. மனதில் நினைத்தது நடந்தது. ஏழை பணக்கார வித்யாசம் என்றால் என்ன என்று கேட்பவர்கள். டாக்டர்கள் கிடையாது. யாருக்குமே எந்த நோய் நொடி, வியாதி இல்லையே. வயதாவது, ஆயுட்காலம் குறைந்து கொண்டே போவது என்ற சமாச்சாரமே இல்லை. இதனால் ஒருவரை மற்றவர் வெறுப்பது, வாழ்த்துவது, பெருமை, கர்வம், துக்கம், பயம் எதுவுமே தலை காட்டவில்லை. கடவுள்களே வாழ்ந்த காலம் இருள் சொல்லலாமா? எல்லோர் மனமும் ஒன்றாக இருந்தது. ஒரே ஆத்மா எல்லாருக்கும். எல்லாமே வெள்ளை நிறம். எல்லாமே பரமாத்மா, அதுவே ஜீவாத்மா! இது ஒன்று தான் நினைத்துக்கூட பார்க்க முடியாத பரிசுத்த யுகம்.
அது நாள் பட நாள்பட கொஞ்சம் மாறியது. எந்த புண்யவான் கைங்கர்யமோ? அது த்ரேதாயுகமாகியது. பரமாத்மா வேலையிலிருந்து சிகப்பு நிறம் பெற்றது. பண்பாடு கொஞ்சம், ஒரு கால் பாகம் குறைந்தது. வாழ்ந்தவர்கள் சத்யம் தம்மிடம் இல்லை என்று உணர்ந்தார்கள். தேடினார்கள். அதை அடைய யாக யஞங்கள் உண்டாக்கினார்கள். பரமாத்மா வேறு தாம் வேறு என்று அறிந்தார்கள். கொடுக்கல் வாங்கல் தம்முள் தேவையாயிற்று.
இன்னும் பல காலம் சென்றது. அதற்கு அப்போது துவாபர யுகம் என்று பெயர். தம்மிடமில்லாத ஒரு ஆத்மா எங்கோ மஞ்சளாக இருப்பதை உணர்ந்தார்கள். மதம் பிளவு பட்டது. பாதியாகி விட்டது. வேதங்கள் என்று முன்பு எல்லோரிடமுமிருந்தது இப்போது நாலு பாகம். சிலர் நாலையும் அறிந்து கொண்டார்கள். தெரிந்து கொண்டார்கள். மற்றவர்கள் மூன்று மட்டும். மனிதர்களாகி விட்டார்கள். மனம் குறுகிவிட்டது இப்போது. சத்யம் சிறிதாக எங்கோ இருந்தது. எண்ணங்கள் ஆசைகள் வியாதிகள், துன்பங்கள், பயம் எல்லாமே கால்லூன்றி விட்டது. எல்லோரையும் ஆக்கிரமித்தது. இதிலிருந்து விடுபட பரமாத்மாவை நோக்கி ஜபம் தபம் என்று வழி தேடினார்கள். கறைபட்ட யுகமாயிற்று. பாபங்கள் நிறைய சேர்ந்து புண்ணியத்தை எங்கோதூரத்தில் கைக்கு எட்டாமல் தள்ளிவிட்டது.
இப்படியும் காலம் ஓடியதன் பின் நாம் வந்து விட்டோம். நமது யுகத்தின் பெயர் கலியுகம். ''சுகமாக'' வாழ்கிறோம் இல்லையா? பக்தி யோகம் ஞான மார்க்கம் தேடுகிறோம், தேடிக்கொண்டே இருக்கிறோம். நிறைய பேர் நமக்கு பக்தியினால் முக்தி எனும் பரமாத்மாவை அடைய வழி சொல்லிக்கொடுக்கிறார்கள். மனதில் தங்குவது கஷ்டமாக ஆகிவிட்டதே. மறுபடியும் முதல் பாராவில் சொன்னதை படியுங்கள். அப்போதைக்கு இருந்ததெல்லாம் இப்போது இல்லை. அதற்கு இதெல்லாம் நேர் மாறாக இருக்கிறதோ அது தான் இப்போது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். நாம் பரமாத்மாவோடு இணைய, அப்போது போல் மீண்டும் ஒன்றாக வெள்ளையாக இருக்க முயற்சி செயகிறோம். எல்லோரும் அல்ல. சில பேராவது. நடக்கட்டும். எல்லாம் நல்லதற்கே.
No comments:
Post a Comment