மஹாராஜ ராஜ .ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ..... கவிராயருக்கு அநேக கோடி நமஸ்காரம்...!
J.K. SIVAN
என் தாய் வழி பாட்டனார்கள், முப்பாட்டனார்களின் ஜீவனம் சங்கீதம், ஹரி கதா பிரவசனங்கள் மூலம் தான் நடந்தது. பல தலைமுறைகள், சௌகர்யமாக இவ்வாறு காலம் தள்ள ஒரு முக்கிய மனிதரின் படைப்பு தான் காரணம். எனவே நான் இன்று அந்த விந்தை மனிதரைப் பற்றி நன்றியோடு நினைக்க தோன்றுகிறது. எத்தனையோ தமிழர்களை மகிழ்வித்த பரம பாகவதர் அவர். அவர் வேறு யாருமில்லை. ராமநாடக கீர்த்தனைகளை உருவாக்கி நமக்களித்த ஸ்ரீ அருணாச்சல கவிராயர்.
தஞ்சாவூரில் தில்லையாடி பிறந்த ஊர் . நல்ல தம்பி பிள்ளைக்கு நாலாவது நல்ல பிள்ளை. தாயார் வள்ளியம்மாள். ( தில்லை யாடி வள்ளியம்மை வேறு பெண்மணி. ஆள் மாறாட்டம் வேண்டாம்). தர்மபுரஆதீன மடம் அவர் வளர்ச்சிக்கு உதவியது. மடாதிபதி பதவி அவருக்கு வந்தது. அவர் அதை ஏற்கவில்லை. காசுக்கடை வைத்து பிழைத்தார். திவ்ய பிரபந்தம் ரொம்ப ஈர்த்தது. திருமுறை வேதாகமங்களும் கற்றார். கம்பர் ரொம்பவே அவரைக் கவர்ந்தார். ராமன் நெஞ்சில், நினைவில் குடியேறினான்.
காசுக்கடை வியாபாரத்துக்கு பாண்டிச்சேரி சென்று தங்கம் வாங்க போன இடத்தில் தங்கமான ரெண்டு பேர் பரிச்சயமானார்கள். சாத்தானி புரம் வெங்கட்ராம அய்யர், கோதண்டராம அய்யர் ரெண்டு பேருமே சங்கீத வித்துவான்கள்.
பாண்டிச்சேரி போகும் வழியில் சிதம்பரத்தில் தர்மபுர ஆதீன மடத்தில் தாங்கினார். பழைய நண்பர் சிதம்பரம் பிள்ளை அப்போது ''கட்டளை மாலை'' எழுதிக்கொண்டிருந்தார்.
''டேய் அருணாச்சலம், நீ எனக்கு சீர்காழி பத்திய தல வரலாறு வெண்பாக்கள் எழுதி தருகிறாயா. எனக்கு நேரமே இல்லையடா'' என்ற சிதம்பரம் பிள்ளைக்காக ராவோடு ராவாக சீர்காழி தல வரலாறு பாடல்களை எழுத அவற்றின் சிறப்பில் மயங்கினார் சிதம்பரம் பிள்ளை. நண்பனை தில்லையாடியிலிருந்து குடும்பத்தோடு இடம் பெயர்த்து சீர்காழியில் வசதியாக வாழ வசதி செய்து கொடுத்தார். அதிலிருந்து தான் ''சீர்காழி புலவர் அருணாச்சல கவிராயர்'' என்ற பெயர்.'
கம்பராமாயணத்தில் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க பாண்டிச்சேரியில் மேலே சொன்ன ரெண்டு பாகவதர்களும் அருணாச்சலம் பிள்ளையை சந்தித்தார்கள். அவர்களுடைய பிரசங்கங்களை தொடர்ந்து நடத்த கம்பராமாயணத்திலிருந்து சில காட்சிகளை நாடக வசனமாக பாட்டோடு எழுதிக் கொடுக்க வேண்டினார்கள்.
''கவிராயரே , ராகங்கள், மெட்டு, தாளம் நாங்கள் அமைத்துக் கொள்கிறோம். பாடல்கள் மட்டும் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்'' என்றார்கள் . ராம சரிதம் பற்றி பால பாரதி எழுதிய சந்த விருத்தம், கம்ப ராயமாயணம் ரெண்டும் கவிராயருக்கு எல்லோருக்கும், புரிகிற மாதிரி எளிய தமிழில் ராம நாடக பாடல்கள் எழுத கை கொடுத்தது.
கம்பரைப் போலவே தானும் தனது நாடக கீர்த்தனைகளை ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதன் ஆலயத்தில் அரங்கேற்ற அருணாச்சலம் பிள்ளைக்கு விருப்பம்.
முதல் பாடல் எழுத மனதில் தோன்றியது தான் ''ஏன் பள்ளிக் கொண்டீரய்யா'' மோஹன ராக அற்புத பாடல். இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் என்னையும் சேர்த்து, அன்றாடம் தனக்குள் பாடி மகிழ்வது. இதற்கு நாட்டியம் ஆடியவர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள். இன்றும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று பால் குடிக்கும் எத்தனையோ சிசுக்கள் இனிமேலும் எதிர்காலத்தில் இந்த பாடலுக்கு ஆடுவார்கள்.
தஞ்சாவூர் துளஜா மஹாராஜா முதலில் உதவுவதற்கு செவி சாய்க்கவில்லை. பாண்டிச் சேரி ஆனந்தரங்கம் பிள்ளை லெட்டர் கொடுத்தார். மணலி முத்து கிருஷ்ண முதலியார் சந்தோஷமாக ஆதரித்தார். நாடக கீர்த்தனைகள் பிரபலமாயின. பிறகு துளஜா ராஜா தஞ்சாவூரிலும், ஆனந்த ரங்கம் பிள்ளை பாண்டிச்சேரியிலும் உதவினார்கள். நிறைய பரிசுகள் பெற்று வாழ்க்கை சந்தோஷமாக ஓடியது. அவரது பாடல்களை பாடி என் முன்னோர்களும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
''யாரோ இவர் யாரோ, ராமனுக்கு மன்னன் முடி, ராமசாமியின் தூதன் நானடா ராவணா, ஏன் பள்ளிக்கு கொண்டீர் அய்யா,........ இன்னும் எத்தனை எத்தனையோ முத்துக்கள்.... அவசியம் படியுங்கள், கேளுங்கள். என்னைப் போல் மகிழுங்கள்... இத்துடன் மஹாராஜ புரம் சந்தனம் பாடிய 'மோஹன ராக ''ஏன் பள்ளிக் கொண்டீரய்யா...'' எனக்கு ரொம்ப பிடித்ததால் இணைக்கிறேன். கேளுங்கள் https://youtu.be/cyjkPjzGGuU
No comments:
Post a Comment