DEEPAVALI STORY: J.K. SIVAN
"அசுர சம்ஹாரம்"
ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு சுவாரஸ்யமான கதை. பௌமாசுரன் விசித்ரமானவன். கிட்டத்தட்ட பதினாராயிரம் அரச குமாரிகளை கஷ்டப்பட்டு அல்ல, அவர்களை கஷ்டப்படுத்தி, கடத்தி கொண்டு வந்திருக்கிறான். எவ்வளவு கஷ்டமான வேலை? அவர்களைப் பிடிக்க எவ்வளவு தூரம் எவ்வளவு ஊர்களுக்கு சென்றிருப்பான்? . எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அவர்களை பிடித்து தனியாக ஒரு இடத்தில் சிறை வைத்து மூணு வேளையும் சாப்பாடு போடுவது கடினமான காரியம் அல்லவா? ஒரு பெண்ணை சமாளிப்பதே கஷ்டம் என்று பலர் நினைக்கும்போது இந்த அசுரன் ஏன் தானாக இந்த இக்கட்டில் மாட்டிக்கொள்ளவேண்டும்?!!.
நாம் தான் வருணன் வந்தால் குடையைத் தேட வேண்டும்!! வருணனுக்கே குடை எதற்கு? ஏனோ அர்த்தமில்லாமல் எதற்கோ வைத்திருந்தான். அதையும் விடவில்லை இந்த அசுரன். போகட்டும் என்றில்லாமல் வருணனிடமிருந்து அவன் குடையை இந்த அசுரன் பிடுங்கிக் கொண்டான்.
தேவர்களின் தாய் அதிதியிடமிருந்து இப்போது நாம் அனுபவிக்கும் ''செயின் ஸ்னாச்சிங்'' CHAIN SNATCHING மாதிரி காது குண்டலங்களை பறித்துக் கொண்டான்.
மேருமலையின் ஒரு பகுதியான மணி பர்வதத்தை வேறு அபேஸ் பண்ணிவிட்டான்.
அவன் சில்மிஷங்கள் சகிக்க முடியாமல் இந்திரன் துவாரகைக்கு வந்து கிருஷ்ணனிடம் முறையிட்டு இந்த அசுரனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிக்கொண்டான்.
பௌமாசுரன் இருந்த ஊர் பிரக்ஜோதிஷபுரம், சுற்றிலும் கம்பிவலை, முள்வேலி, விஷ வாயு நிறைந்த எல்லை பகுதி. அகழி, மின்சாரம் போன்ற தடுப்பு, எதிர்ப்பு சக்தி கொண்ட கோட்டை. இதெல்லாம் அவனுக்கு செய்து கொடுத்தது முரன் என்னும் அசுர நண்பன். இந்த கோட்டையைக் காக்க எண்ணற்ற ஆயுதம் தாங்கிகள் இரவும் பகலும். யாரால் எப்படி பௌமாசுரனை நெருங்க முடியும்?
சத்யபாமாவுடன் கிருஷ்ணன் கருடன் மேல் புறப்பட்டான். முரனின் இந்த முஸ்தீபுகள் அனைத்தும் கிருஷ்ணனால் துகள் துகளாக பொடியாகியது. அந்த கோட்டை கிருஷ்ணனால் தகர்க்கப்பட்டது. நடந்தவை எல்லாம் முரனுக்கு அதிர்ச்சியை அளிக்க தன் ஐந்து தலையோடு, கொடிய விஷ நாகத்தைப் போல கோபாக்னி யுடன் முரன் ஓடி வந்தான். எப்போதும் நீரில் மூழ்கியிருப்பவன் அவன். அவனது உடல் எப்போதும் நெருப்பென ஜ்வலிக்கும். சூரியனைப் பார்ப்பது போல் கண் கூசும். கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் எங்கும் எதிரொலித்தது மட்டுமல்லாது முரனைத் திணறடித்தது. தன்னுடைய சக்தி வாய்ந்த சூலாயுதத்தை கையில் எடுத்தான். முரனின் ஐந்து வாய்களிலிருந்தும் பயங்கர கர்ஜனை வெளிப்பட்டு அகிலத்தையே அதிர வைத்தது. முதலில் கிருஷ்ணன் சத்யபாமா அமர்ந்திருந்த கருடனைத் தாக்கினான். கிருஷ்ணன் தனது சரங்களால் முரனின் சூலாயுதத்தை ஓடித்தான். முரனின் வாய் கிழிந்தது. அவன் கர்ஜனை ஒடுங்கியது . ஒரு கதாயுதத்தை எடுத்து கிருஷ்ணன் மேல் வீசினான்.
கிருஷ்ணன் தன்னுடைய கதாயுதத்தால் அதைப் பிளந்தான். முரன் ஆயுதங்கள் இழந்த நிலையில் தனது பலத்தை எல்லாம் கைகளில் செலுத்தி கிருஷ்ணனை நெருங்கி நசுக்க முயன்றான். இதற்காகவே காத்திருந்தது போல் கிருஷ்ணனின் சுதர்சன சக்ரம் முரனின் ஐந்து தலைகளையும் துண்டித்தது. முரன் கடலில் வீழ்ந்தான். அவனது ஏழு பிள்ளைகளும் மற்றொரு அரக்கனான பிதன் என்பவனின் தலைமையில் படைகளோடு வந்து கிருஷ்ணனைச் சூழ்ந்தனர். அவர்களது அனைத்து ஆயுதங்களும் சரமாரியாக கிருஷ்ணன் மீது பொழிந்தது. வெகு விரைவில் அனைத்து அசுரர்களும் அழிக்கப் பட்டனர். துரும்பென அவர்களை நிர்மூலம் செய்தான் கிருஷ்ணன். பௌமாசுரனுக்கு மரணம் அவ்வளவு எளிதில் கிட்டுமா. முரனின் மரணம் அவன் கோபத்தை அதிகரித்தது. பெரும்படையுடன் யுத்தத்துக்கு வந்து விட்டான். அவனிடம் சதாக்னி (நூறு அக்னி) என்ற அதிக சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் இருந்ததே. அதால் ஒரே வீச்சில் ஆயிரக் கணக்கானோரை எமனுலகுக்கு அனுப்பமுடியுமே.
கருடனின் சிறகிலிருந்து ஒவ்வொரு இறகும் ஒரு ஆயுதமென கிருஷ்ணன் அருளால் எண்ணற்ற ஆயுதங்கள் வெளிப்பட்டு பௌமாசுரனின் ஆயுதம், படைகள் எல்லாம் கூண்டோடு கைலாசம் போய்விட்டது. பௌமாசுரன் மிக்க சக்தி வரம் பெற்றவன் அல்லவா?. அவனுக்கு ஆபத்பாந்தவனாக ஒரு சூலாயுதம் கை கொடுத்தது. அதை எடுத்து விட்டான். இனி கிருஷ்ணன் தொலைந்தான் என அவனுக்கு மகிழ்ச்சி. அவன் எண்ணம் புரிந்து கொண்ட கிருஷ்ணன் யோசிக்கவே இடம் கொடுக்காமல் சுதர்சன சக்ரத்தை ஏவினான். அது பௌமாசுரன் அந்த சூலாயுதத்தை அவன் தொடுமுன்னமே அவன் சிரத்தை துண்டித்தது.
பௌமாசுரன் வீழ்ந்த கணமே பூமாதேவி வெளிப்பட்டாள். கிருஷ்ணன் யார் என்று அவளுக்கு தெரியுமே. வணங்கினாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர் அசுர கணங்கள் நடுங்கின. வைஜயந்தி என்கிற விலை மதிப்பில்லா ஆபரணத்தை மாலையாக கிருஷ்ணனுக்கு பூமா தேவி சூட்டினாள். பௌமாசுரன் அபகரித்த அதிதியின் குண்டலங்கள் மீட்கப்பட்டன. வருணன் இழந்த குடை "இந்தாங்கோ சார் உங்க குடை" என்று திரும்ப வருணனிடம் கொடுக்கப்பட்டது. பூமாதேவி நீண்ட ஸ்தோத்ரம் செய்து கிருஷ்ணனை வேண்டினாள். காக்கும் கடவுள் மிக்க சந்தோஷம் அடைந்தார். பூமாதேவியோடு ஒரு சிறு பையன் நின்றான் "இவன் பகதத்தன். பௌமாசுரன் மகன். தகப்பன் செய்த தவறுகளை உணர்ந்தவன். இவனை தங்களிடம் சரணடைய சொன்னேன். இவனை தண்டிக்கவேண்டாம் .இவன் நிரபராதி. என்றாள் பூமாதேவி.
கிருஷ்ணன் பௌமாசுரன் அந்தப்புரத்தில் சிறையிலிருந்த பதினாராயிரம் அரச குமாரிகளை விடுவித்தான். அவர்கள் அனைவரும் ஏகமனதாக கிருஷ்ணன் காலில் வீழ்ந்து எங்களை காத்தருளிய நீங்களே எங்கள் அனைவருக்கும் கணவர் ஆவீர்” என்று வரம் வேண்ட கிருஷ்ணன் அவர்களை தனித்தனியே பல்லக்கில் துவாரகை அனுப்பினான் தன்னை பதினாராயிரம் உருவாக மாற்றி அவர்களை மகிழ்வித்தான். கிருஷ்ணன் பௌமாசுரனின் செல்வங்கள், ஆபரணங்கள் அனைத்தும் மீட்டு தந்தான்.
அதிதி இழந்த கர்ண குண்டலங்களை இந்திரனின் தலைநகர் அமராவதி சென்று இந்திரனிடமே அவன் கேட்டு கொண்டபடி மீட்டு கொடுத்ததில் இந்திரன் நன்றியோடு வணங்கினான்.
''கொஞ்சம் இருங்கோ. இன்னொரு விஷயம் சொல்லப்போறேன். கேட்டுக்கணும்''
No comments:
Post a Comment