Saturday, November 3, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மகா பாரதம்
கங்கம்மா வந்தாள்

இதெல்லாம் நடந்தது கங்கை பூமிக்கு வருவதற்கு முன்பு. அதனால் தான் அவளுக்கு அப்போது ஆகாய கங்கை என்று பெயர்.

பகீரதனின் கடும் தவத்தில் கங்கை மகிழ்ந்தாள் "மகனே உனக்கு என்னடா வேண்டும் என்று கேட்டாள்? ''

''கங்கா மாதா, என் முன்னோர்கள் கபிலரின் சாபத்தால் மாண்டு பித்ரு லோகம் செல்லாமல் நரகத்தில் வாடுகிறார்கள். அவர்களைக் கடைத்தேற உன் அருள் வேண்டும். கங்கையின் ஜலம் பட்டால் தான் அவர்கள் நற்கதி அடையமுடியும். சாம்பல் மலையாக உள்ளார்கள்''

கங்கை யோசித்து பதில் சொன்னாள்;

''பகீரதா, உன் தவத்தை மெச்சினேன் கண்ணே, நான் பூமிக்கு இறங்கி வந்தேனானால் எனது வேகத்தை, சக்தியை, பூமியாலும் அங்கே எவராலும், தாங்க முடியாதே என்ன செய்வது. சிவ பெருமான் ஒருவரே எனது சக்தியை தாங்கக் கூடியவர். நீ முதலில் அவரை வேண்டி அவர் உனக்கு உதவினால், நான் பூமிக்கு இறங்கிவரமுடியும்.. முதலில் அவரை அணுகு'' என்றாள் கங்கா மாதா.

பகீரதன் சிவனை வேண்டுகிறான். அவரும் மகிழ்ந்து, ''பகீரதா, உன் நல்லெண்ணம் புரிகிறது. நீ கங்கையை பூமிக்கு இறங்கி வரச்சொல், நான் அவளை வரவேற்கிறேன்'' என்கிறார் பரமேஸ்வரன்.

கங்கை பெரும் பிரவாஹமாக ஆகாச, பனிமலைகள் மேலிருந்து கீழிறங்கினாள். தயாராக நின்றுகொண்டிருந்த பரம சிவன் அவளை தனது விரித்த செஞ்சடையில் வாங்கிக்கொண்டு அவள் வேகத்தை சற்றே குறைத்து கீழே ஓட விட்டார். கங்கை ''ஹரனை நுழைவு துவாரமாக, வாயிலாக, '' (HAR DWAR) கொண்ட இடம் தான் நாம் இப்போது புனிதப் பயணம் போகும் ஹரித்வார். ஹரத்வார் ஹரித்வார் எல்லாமே நமக்கு ஒன்று தானே.

மனத்தில் ஒரு அழகிய கற்பனை தோன்றி, அதை விரல்கள் வண்ணத்தில் தூரிகையைத் தோய்த்து மனது நினைத்த எண்ணம் வடிவம் பெற்றால் நமக்கு ஒரு அற்புத சித்திரம் கிடைக்கிறது. சிவன் இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி, கால்களை அகட்டி நின்று பளுவை தாங்க தயார் செய்து கொண்டு, மேலே பார்த்தவண்ணம் விரித்த செஞ்சடையோடு நிற்கிறார். ஓவென்று பலத்த ஒலியுடன் வலிமை மிக்க கங்கை கீழே வேகமாக பாய்கிறாள். எதிரே பகீரதன் நிற்கிறான்.

எப்படி ஓவிய சக்ரவர்த்தி ராஜா ரவி வர்மாவால் இதை சித்திரமாக்கி உலகை வியக்க வைக்க முடிந்தது.? இதையும் ஒரு தீபாவளி பரிசாக நீங்கள் எல்லோரும் கங்கா ஸ்னானம் செய்ய உங்கள் வீட்டுக்குள் வந்த கங்கையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...