Wednesday, November 28, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்
என் கேள்விக்கென்ன பதில்?
இது கொஞ்சம் அதிகம் மண்டையைக் குழப்பும் சமாச்சாரம். எளிதில் விளங்காது. பரவாயில்லை சொல்லிவிடுகிறேன். அர்த்தமும் சொல்கிறேன்.

திருவண்ணாமலையில் ஏதோ விசேஷம். நிறைய கூட்டம். பலர் சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி அறிந்தவர்கள். அவரை தேடி அலைந்தனர். அவரோ எவர் கண்ணிலும் படாமல் சடைச்சி ஆஸ்ரமத்தின் வாசலில் ஒரு திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டு ஏதோ யோசனை. தனக்கு தானே ஏதோ கேள்வி பதில்.

குழுமணி நாராயணஸ்வாமி ஸ்வாமிகள் தினமும் ஸ்வாமிகளை எங்காவது கண்டுபிடித்து அவரோடு இருப்பவர்.

ஸ்வாமிகளை சாஸ்திரி சடைச்சி வீட்டு திண்ணையில் பார்த்து விட்டார்.
ஸ்வாமிகளை கண்டது சாஷ்டாங்கமாக தெருவிலேயே நமஸ்கரித்தார். ஸ்வாமிகள் முகத்தில் ஒரு புன் சிரிப்பு... ஏதோ பேசினார்.. என்ன பேசினார். எதைப் பற்றி என்று எப்போதுமே புரியாது. அதிகம் யோசித்தால் தான் விளங்கும். அதனால் தான் இந்த கட்டுரைகளுக்கு தலைப்பே ''ஒரு அற்புத ஞானி''.

சாஸ்திரிகளிடம் ஸ்வாமிகள் திடீரென்று '' ஏகே சாஸ்மத்குலே ஜாதா '' என்று இறந்துபோன பித்ருக்களைப் பற்றிய ஒரு ஸ்லோகத்தை உரக்கச் சொன்னார்.

கை கட்டிக்கொண்டு சாஸ்திரி அதை கேட்டார். எதற்கு இந்த ஸ்லோகம் சொல்கிறார் இப்போது?

''டேய், நீங்கள் எல்லாம் சந்தைக்கு போயிருக்கீளா'' - இதென்ன ஒரு சம்பந்தமில்லாத கேள்வி.

தலையைச் சொரிந்து கொண்டே அவரைப் பார்த்தார் சாஸ்திரி

''நூறு தம்பிகள் .நூறு சகோதரர்கள். இங்கே நூறு பேர். அந்த தேசத்திலே நூறு பேர். தெருவில் கையைக் காட்டி ''இதோ நூறு பேர்''

சாஸ்திரிகள் மௌனமாக நின்றார். கை கட்டியபடியே இருந்தது.

''இப்போ சொல்லு, எல்லாமா சேர்த்து எத்தனை பேர் ??''

இது தான் ஸ்வாமிகள் கேட்டது. இந்த கேள்விகளை புரிந்துகொள்வதே கஹடம். ''இங்கே நூறு, அங்கே நூறு, இதோ எதிரே நூறு.... மொத்தம் எத்தனை?'' தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை சாஸ்திரிக்கு ஸ்வாமிகள் எந்த பதிலுக்கும் காத்திராமல் போய்விட்டார்.

சாஸ்திரிக்கு அர்த்தம் விளங்கவேயில்லை. மண்டையைக் குடைந்து கொண்டார். அடிக்கடி ஸ்வாமிகள் கேட்டதை எழுதி வைத்துக் கொண்டு யோசிப்பார்.

விஷயம் புரிந்தது.

அன்றிலிருந்து நாலாவது மாதம் சாஸ்திரியின் தம்பி இறந்து விட்டான்.
சாஸ்திரியிடம் பித்ருக்களை பற்றிய ஸ்லோகம் சொன்னதால் ஏதோ ஒரு மரணம் சம்பவிக்கப்போகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நூறு தம்பிகள் என்றதால், பித்ருலோகம் செல்லப் போவது தனது தம்பி என்று உணர்த்தியிருக்கிறார்.

சந்தைக்கூட்டம் -- அண்ணன் தம்பி உற்றார் உறவு எல்லாமே சந்தையில் கூட்டம்...... ஆஹா இப்போது எல்லாம் கொஞ்சம் புகை மூட்டத்திலிருந்து விடுபட்டு தெளிவாக தென்படுகிறது.

''நிறைய தடவை' என்பதை நாம் என்ன சொல்கிறோம். ''ஒரு நூறு தடவை அவன் கிட்ட சொல்லியாச்சு'' என்கிறோமே. ஆகவே நூறு நூறு என்றதெல்லாம் நிறைய பேர், . உலக ஜீவ ராசிகள் அனைத்தையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டும் என்பதைத்தான் ''அண்ணன் தம்பி'' என்கிறாரோ?.

மொத்தம் எத்தனை பேர்.?.. இதற்கு அர்த்தம் பல பிறவிகளில் பல சகோதரர்கள் நமக்கு இருந்திருக்கிறார்கள். கணக்கு கிடையாது. இதில் எதற்கு துயரம்... என்று ஆறுதல் சொல்லவே''

சாஸ்திரிகள் ஸ்வாமிகள் கேள்வி பதிலோடு இன்று நிறுத்திக் கொள்கிறேன். அதிகம் யோசிக்க வேண்டாம். நிறைய காரியம் இருக்கிறது. அதை கவனிப்போம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...