Monday, November 26, 2018

SUFFERING

தமிழ் புலவர்கள்        J.K. SIVAN 
ராமச்சந்திர கவிராயர் 


           
 பட முடியாது இனி துயரம்.....

சென்னையில்  அண்ணா சாலையில் இருந்து வலது பக்கம் திரும்பி திருவல்லிக்கேணி  சாலையில்  போக்குவரத்து நெரிசலில் சிக்காமல்  வலது பக்கம்   ஒரு சிறு தெரு உங்களை அழைத்தால் அதன் பெயர் எல்லிஸ் ரோடு என்று சொல்லும்.   எப்போதும் எல்லோருமே நடுத்தெருவில் தான் நடக்கவேண்டும். இங்கே ஒருவர் வெகு காலத்திற்கு முன்பு எந்த நெரிசலும் இல்லாமல் சுற்றிலும் மரங்கள் செடி கொடிகள் நிரம்பி இருக்க கை  வீசிக்கொண்டு நடந்தார். அவர் பெயர் ராமச்சந்திர கவிராயர். 200 வருஷத்துக்கு முந்தியவர்.  எல்லிஸ் தெருவோ சந்தோ, அந்த பெயருக்கு உரிமையான எல்லிஸ் துரை  என்ற வெள்ளைக்காரருக்கு நண்பர். கவிராயருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எல்லிஸுக்கு தமிழ் நன்றாக தெரியும்.  கவிராயரின் எளிய அற்புத தமிழ் பாடல்கள் பிடிக்கும்.  காசு கொடுப்பான்.

 இவரது பாடல்கள்  என்னை கவர்ந்தவை.  ஒரு  பாடலை என்னோடு ரசியுங்கள்.

 எளிய சொற்களில் நகைச்சுவை ததும்பி வழியும்.  சிறந்த நாடக ஆசிரியர்.
++
ஒரு மனிதன்  துன்பத்தில் தத்தளிக்கிறான்.எத்தனை விதமான கஷ்டங்கள் ஒவ்வொன்றும் அவனை ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் தலையை நீட்டி பிடுங்குகிறது.

வீட்டில் லட்சுமி என்ற பசு வெகு நாட்களுக்கு பிறகு  சூல்  கொண்டு திடீரென்று கன்று ஈன்று விட்டது.  மாட்டுக்கொட்டிலில் நின்று, அதற்கு உதவி, சுத்தம் செய்ய வேண்டும்...  கன்றை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும்.
ஏற்கனவே வீடு பழைய காலத்தியது. எப்போது வேண்டுமானாலும் சுவர்கள் சாய்ந்து விடும்  என்று எதிர் பார்த்திருந்தாலும் இன்று இப்போது வடக்கு பக்க  சுவர் விழுந்து விட்டது.

கூரை பறந்து போக  ரொம்ப நேரம் வந்து விட்டது போல் இருக்கிறதே.  பேய் மழை நிற்கவேயில்லையே.  பசு குளிரில்  உடல் சிலிர்க்கிறது.  கன்றின் கதி என்னவாகும்?  ஈரமில்லாத இடத்தில் கோணியில் அதை விடவேண்டும்.

எப்போதும் மாங்கு  மாங்கு என்று வேலை செய்யும்   காமாட்சி காய்ச்சலில்   இழுத்து போர்த்திக்கொண்டு  உக்ராண அறையில்  படுத்து விட்டாள் .    உடல் நடுங்குகிறாள். ஜூரம் இறங்கவில்லை. கஞ்சி போட்டுக் கொடுத்தார். இதோ எதற்கோ கூப்பிடுகிறாள்???

சாமுண்டிசன் எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்  நல்ல வேலைக்காரன். அவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். இன்று மூன்றாவது நாள். 


ரெண்டு மா   நிலத்தில் பயிர்  ஈரம் இருக்கும்போது  விதை  விதைக்க   ஆரம்பித்ததுமே  மழை பிடித்துக் கொண்டுவிட்டதே. மீதியையும் விதைக்க வேண்டுமே.  கிளம்பும் போதா இதெல்லாம்.... அட கடவுளே.

விதைகளோடு வயலுக்கு ஓடும்போது தான்  வழி மறித்தார்கள் கடன் கொடுத்த லேவா தேவிக்காரர்கள். 
''என்னய்யா  கடன் வாங்கிட்டு  திருப்பி தராமல் ஓடறே. நில்லு. பனைத்தை கீழே வை... '' 
''ஐயா  பயிறு விளைஞ்சுடும் வித்து காசாக்கி  வட்டியோடு தருகிறேன்'' --   கெஞ்சுகிறான்.

இந்த நேரம் பார்த்து  சின்ன வயதில் பார்த்த  அத்தை  பள்ளத்தூரிலிருந்து  குடும்ப சகிதம் விருந்தாளியாக வாசலுக்குள் நுழைகிறாள். இந்த நேரம், இந்த வீடு  விருந்தை தாங்குமா? இன்னும் என்ன தொந்தரவு பாக்கி. 

''வா அத்தை , கோபு, பசங்களா''  எவ்வளவு நாள் ஆச்சு பார்த்து.   கோபு நீ அப்படியே இருக்கே....'' வாய் மட்டும் மெஷின் மாதிரி பேசுகிறது.

''அப்பா''  என்று  ஒரு உரக்க சத்தம் வீட்டுக்கு பின் பக்கத்திலிருந்து வருகிறது.  பத்து வயது முதல் மகன் ராஜூவை  ஏதோ ஒரு பாம்பு  மழையில்   காலை உணவிற்கு தவளையைத் தேடி  வெளியே கோபமாக வந்து  அதன் பாதையில் குறுக்கே நின்றவனை காலின் பின்புறம் கடித்து விட்டு ஓடிவிட்டது. அவனை வைத்தியரிடம் அழைத்து செல்ல வேண்டும். விஷ பாம்புகள் அதிகம் இந்த பக்கம் இல்லை... இருந்தாலும் ?

ராஜாவின்  ஆள்  தமுக்கடித்துக் கொண்டு வந்து விட்டான். வாசலில் இப்போது தானா  அவன் வரி வசூல் பண்ண வரவேண்டும்? வாங்காமல் போக மாட்டான். கொடுக்க வில்லை என்றால் சிறைக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவான். 

இது தான் கடைசி மயிலிறகு  பொதி சுமந்த ஒட்டகத்தின் முதுகை பிளக்க..  ''சாம்பசிவ தீக்ஷிதர் தான் மயிலிறகு. ... தக்ஷிணை கொடுக்க வேண்டும். கல்யாணத்தில் பாக்கி வைத்தது. அவ்வப்போது இன்ஸ்டால்மென்டில் வசூல் செய் கிறார். ..எவ்வளவு கொடுத்தால்  போவார் ? திண்ணையில் கால் நீட்டி அமர்ந்தாகி விட்டது.

ஹே  கிருஷ்ணா என்கிற  நாராயணா, நீ  செல்வத்துக்கு அதிபதியை    லட்சுமி யை அதனால் தான்  முன் ஜாக்ரதையாக உன் மார்பில் வைத்துக்கொண்டிருக்கிறாயா. என்னிடம்  மார்பில் சில்லறை இல்லாத பர்ஸ் தான் இருக்கிறது. கொஞ்சம் அதை நிரப்பேன். இத்தனை கஷ்டத்திலிருந்து மீள கொஞ்சம் உதவுகிறாயா..?  என்ற தோரணையில் அமைந்திருக்கிறது  ராமச்சந்திர கவிராயர் பாடல்.  நன்றாக இருக்கிறது ரசியுங்கள்.

''ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
     அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
     தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
     குருக்களோ தட்சணைகள் கொடுவென்றாரே''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...