Saturday, November 24, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

'' ஜாவ் ''

எனக்கு சொந்தமாக எதுவும் சொல்லவோ எழுதவோ தெரியாது. எங்கோ படித்ததை, கேட்டதை தான் உங்களிடம் சொல்கிறேன். இன்னொரு விஷயம். நான் எதை சொல்கிறேனோ, எழுதுகிறேனோ அது உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானது தானே. மீண்டும் சொல்கிறேன். இந்த புண்யபூமி பாரதத்தில், எத்தனையோ மஹான்கள் புண்ய புருஷர்கள் தோன்றி இருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள், இனிமேலும் இருப்பார்கள். அவர்கள் எல்லோரையும் நான் அறிய முடியாது. ஏன் என்றால் அவர்கள் நம்மைப்போல் இல்லையே. தங்களை அதிகம் வெளியே காட்டிக்கொள்ளாதவர்கள். அப்படி ஒருவரை பற்றி இன்று கொஞ்சம் சொல்கிறேன்.


அப்போதெல்லாம்ல் நாற் சந்து முனையில், இரவில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திலே கையில் புனல் போன்ற ஒரு ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சில கிறிஸ்தவ பாதிரிகள் பிரச்சாரம் பண்ணும் போது எல்லோரையும் ''பாவிகளே'' என்று அறைகூவு வார்கள். கும்பலில் நின்று சின்ன வயதில் ஒரு ''பாவி'' யாக கும்பலில் நின்று அவரிடமிருந்து இலவச பைபிள் புத்தகம் வாங்கியிருக்கிறேன். கலர் கலராக நோட்டீஸ் கொடுப்பதை வாங்கி வீட்டில் அறை வாங்கியது நினைவுக்கு வருகிறது.

நாம் ஹிந்து சனாதன தர்ம சாது பேர்வழிகள். அப்படி யாரையும் பாவி துஷ்டன் என்று சொல்லாமல் மக்களை நாலு ரகமாக பிரிப்பது வழக்கம். பாவம் செய்தவர்கள், கர்மத்தை அனுஷ்டிப்பவர்கள், தெய்வ உபாசகர்கள், மற்றும் ஞானிகள்.

பாவத்தை செய்பவர்களுக்கு தண்டனை அதிகம். ஆசாமி கண்ணை மூடியதும் அவனது சூக்ஷ்ம சரீரம் எம தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு அப்பளம் போல் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் பொரிக்கப்படும், விறகுபோல் எரியும் தீயில் பொசுங்குவான். படுக்கையில் பாய் தலையணைக்கு பதில் தேள் பாம்புடன், ஈட்டி, அம்பு, கத்தி,அவனை எப்போதும் உடலைக்கிழித்து துன்புறுத்த இன்னும் என்னென்னவோ துன்பங்களை அனுபவிப்பான் என்று பயமுறுத்துவார்கள். இவ்வளவு செய்தும் கூட அவன் மீண்டும் பிறந்து அதே பாப காரியங்களையே, இன்னும் கூடவே செய்கிறான். யாக யஞ உபவாச கர்மங்கள் செய்தவன் புண்ய லோகம் சென்று சுகமாக இருந்து கணக்கு தீர்ந்ததும் மீண்டும் பிறக்கிறான்.

தெய்வ உபாசனை செய்தவர்கள் ப்ரம்ம லோகம் சென்று அங்கிருந்து திரும்புவதில்லை.

ஞானிகள் இங்கே இருக்கும்போதே அவர்கள் உடலுடன் அவர்களது சம்பந்தம் அறுந்து போய்விடுவதால் ஜீவன் முக்தர்கள். எங்கேயும் போகவேண்டாம். இங்கேயே அவர்கள் விதேக கைவல்யம் அடைந்து பரமானந்தத்தில் திளைத்து இருப்பார்கள். இதெல்லாம் பற்றி கூடை கூடையாக அநேக சாஸ்திரங்கள், புராணங்கள் கதை கதையாக ரொம்ப சொல்கின்றன.

சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலை ஒட்டிய ஒரு கிராமத்தில் வாழ்ந்தவர் விடோபா ஸ்வாமிகள். ஒரு ஜீவன் முக்தர். ஒருநாள் விடோபா இந்த மனித உடலை விட்டு விண் சென்றதை பார்க்கிறார் சேஷாத்திரி ஸ்வாமிகள்.

''அதோ போகிறானே, விடோபா, ஆஹா ஜோராக போகிறானே'' என்று சேஷாத்திரி ஸ்வாமிகள் சொன்னாரென்றால், விடோபா ஒரு சிறந்த தெய்வ உபாஸகரென்று வேறொருவர் சொல்லவா வேண்டும். ஜீவன் முக்தருக்கு மேலே போக வேண்டிய அவசியமே இல்லையே. ரமணர், மஹா பெரியவா, ராகவேந்திரர், வள்ளலார் ஆகிய இன்னும் எத்தனையோ மஹான்கள் இன்றும் நம்மிடையே அரூபமாக நம் வீட்டிலேயே வாழ்கிறார்கள். நாம் அவர்களை பார்க்காவிட்டாலும் நன்றாக அவர்கள் நம்மோடு இருப்பதை உணரமுடியும்.

சென்னையில் பட்டுநூல் காரர்கள் என்றும் சௌராஷ்ட்ரர் என்றும் ஒரு சாரார் மராத்தி, கொங்கிணி மாதிரி ஒரு பாஷை பேசிக்கொண்டு குடும்பமாக வசித்தார்கள், அவர்களில் ஒருவர் விடோபா. 'லங்கார்'' ஜாதி என்பார்கள். அநேகமாக துணி தைக்கும் குடும்பத்தவர்கள். இன்னும் கூட நிறைய ராவ் டைலர்கள் இருக்கிறார்களே. அவருடைய அப்பா கொண்டல்ராவ் .அம்மா புஸீபாய். நாலு வயதில் அம்மாவை இழந்து அப்பா மறு கல்யாணம் பண்ணிக்கொண்டு ரெண்டு பிள்ளை ரெண்டு பெண் வேறு. கொண்டல் ராவ் பக்திமான். பஜனையில் ஈடுபாடு. அவர் பிள்ளை விடோபா ரொம்ப பேசமாட்டான். பத்து வயதில் தான் பள்ளிக்கூடம் சென்றான் . வாய் ஏதோ முணுமுணுக்கும். கை விரல்கள் தாளம் போடும். படிப்பு ஏறவில்லை. வெளியே தள்ளப்பட்டு பதினாலு வயதில் பசி தாகம் என்று லக்ஷியம் பண்ணாமல் கண்ட கண்ட இடத்தில் சுற்றினான். கொண்டல் ராவினால் பையனை திருத்த முடியவில்லை.

ஒரு நாள் அவன் சிற்றன்னை அவனுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டினாள். தலையை ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக்கொண்டு தலையை ஆட்டினதில் அவளுக்கு கோபம் வந்து கன்னத்தில் ஒரு ''பளார்'' . ''ஓடு நாயே'' என்றாள் . அப்படியே ஓடிவிட்டான் விடோபா. வெளியே சென்றிருந்த அப்பா வீடு திரும்பி விடோபா எங்கே என்று கேட்டார். அம்மா விஷயம் சொன்னாள் . சென்னை முழுதும் மூன்று நான்குநாள் தேடியும் விடோபா எங்கே?

அவன் தான் வாலாஜா ரோடு வழியாக வெளியே சென்றவன் வேலூரைநோக்கி நடந்து கொண்டிருந்தானே. ஆங்காங்கே சிறிது இளைப்பாறியவன் போளூரை அடுத்த திருச்சூர் என்ற ஒரு குக்கிராமத்தை அடைந்தான். சில போக்கிரிகள் அவனை அடித்தும் வழக்கம்போல் மௌனமாகவே இருந்தான் . ஒரு இரும்பு கிடுக்கியால் இரு பக்க கன்னத்திலும் வாயையும் அழுத்தினார்கள். ''அரே விடோபா'' என்று ஒரு வார்த்தை வெளியே வந்தது. அதோடு கன்னங்களில் இருந்து ரத்தமும் பீறிட்டது. போக்கிரிகள் ஓடிவிட்டார்கள்.

ரெண்டே வாரத்தில் அந்த ஊரில் காலரா நோய் பரவியது. 20, 21பேர் மரணம் அடைந்தார்கள். அதில் முக்கியமானவர்கள் விடோபாவை இம்சித்த அந்த போக்கிரிகள். அந்த கிராமத்திலிருந்து விடோபா போளூர் வந்து சேர்ந்தார். தெருவில் நிர்வாணமாக அலைந்து கொண்டிருந்த விடோபாவை அந்த ஊர் சிரஸ்தாரராக இருந்த ஒரு முதலியார் மனைவி பார்த்து ''யாரோ ஒரு மஹான் போல் இருக்கிறதே '' என்று அழைத்து ஆகாரம் கொடுத்தாள். வாய் பேசமுடியாத விடோபா அதற்கப்புறம் அடிக்கடி அவள் வீட்டு வாசலில் நின்று கையை தட்டுவார். அவள் ஏதாவது ஆகாரம் தருவாள். இப்படியே சில காலம் ஓடியது. இதெல்லாம் சிரஸ்தார் முதலியாருக்கு தெரியாதே.

ஒருநாள் வழக்கம்போல நிர்வாண விடோபா வீட்டு வாசலில் நின்று கைதட்ட, ஆகாரத்துக்கு பதில் முதலியார் கை பிரம்பு ''போடா பைத்தியக்காரா'' என்று அடிக்க ஓங்கி விரட்டியது. விடோபா ஆகாரமின்றி போய் விட்டார்.

''என்ன இன்றைக்கு வழக்கமாக வரும் அந்த மௌன மஹான் வரவில்லையே'' என்று முதலியார் மனைவி ஆகாரத்தை வைத்துக்

கொண்டு யோசித்தாள் . அவளுக்கு முதலியார் விடோபாவை அடிக்காத குறையாக திட்டி விரட்டியது தெரியாதல்லவா?.

சிராசுதார் வழக்கம்போல் தலைப்பாகை அணிந்து ஆபிஸ் போனவர் மேசையில் அமர்ந்து எழுத பேனாவை எடுத்தார். வலது கை ரண வலி எடுத்து வலித்தது. அசைக்க முடியவில்லை. (விடோபாவை பிரம்பு எடுத்து அடிக்க ஓங்கிய கை !!). வலி பொறுக்கமுடியாமல் கத்தினார். ரெண்டு பேர் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டனர். மனைவி என்ன வென்று கேட்டாள் .
''என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீரென்று வலதுகை ஸ்வாதீனம் இல்லை. வலிக்கிறது''

மெதுவாக அவர் வாயை பிடுங்கியபோது காலையில் விடோபாவை விரட்டியதை சொன்னதும் அவள் புரிந்து கொண்டாள் .

''என்ன அபச்சாரம் செயதீர்கள். வாருங்கள் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டால் சரியாகும்'' என்று அவரை அழைத்துக்கொண்டு விடோபா வழக்கமாக தங்கி இருக்கும் இடம் சென்றார்கள். மனைவி அவருக்காக கெஞ்சி மன்னிப்பு கேட்டாள் . விடோபா அவர் கையைப் பார்த்து ''ஜா'வ் ' என்று சொன்ன அடுத்த கணமே கை பழையபடி ஆகிவிட்டது. வலியைக் காணோம். முதலியார் சரணடைந்து கதறித் தீர்த்தார். விடோபா ஸ்வாமிகள் பெருமையும் புகழும் வேகமாக பரவியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...