ஸ்வாமி தேசிகர் 750.. J.K. SIVAN
மனித உருவில் ஒரு தெய்வம்
இந்து சனாதன தர்மத்தின் இரு கண்களாக சைவமும் வைணவமும் பல ஆயிர வருஷங்களாக இருந்து வருகிறதல்லவா. இந்த இரு பெரும் பிரிவுகளிலும் சில மஹா புருஷர்கள் தோன்றி அவ்வப்போது சமய பிரச்சாரம், அதன் மஹத்வம் எல்லாம் நினைவு படுத்தி வந்திருக்கிறார்கள், அது தொடர்கிறது. தொடரும். ஒன்று மற்றொன்றை இழிவு படுத்தினால் தான் அங்கு சமய தற்கொலை நடக்கும். ஒன்று மற்றொன்றை மதித்து கௌரவித்தால் இரண்டுமே பலத்துடன் பெருகும். எந்த கண் ஒஸ்தி?
சமீபத்தில் ஆதி சங்கரர் முதலில் விஜய யாத்திரை துவங்கியதை நாடு நினைவு கூர்ந்து மகிழ்ந்தது. அதற்கு முன் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.
இன்னொரு மஹான் ஸ்ரீ வேதாந்த தேசிகன். சுவாமி தேசிகன் என்று போற்றப்படுபவர். தூப்புல் நிகமாந்த தேசிகன் - 1268ம் ஆண்டு அவதரித்தவர். 101 வருடங்கள் இருந்தவர் 1369ல் வைகுண்டம் ஏகிய அபூர்வ மனிதர். மனிதரா அவர்? தெய்வம் மனித உருவில். கவிஞர், தத்துவ மேதை, வேதாந்தி, ஆசார்யன். தேசிகன் என்றாலே திசை காட்டுபவர் என்று தான் பொருள். நல்வாழ்வு வாழ ஒரு வழிகாட்டி.
கிடாம்பி அப்புள்ளார் என்கிற ஆத்ரேய ராமானுஜாச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரின் வைணவ குருபரம்பரையில் வந்தவர். அவரிடம் சிஷ்யராக இருந்தவர் தேசிகன். திருப்பதி வெங்கடேசனின் அவதாரமாக வடகலை ஸ்ரீ வைணவர்கள் போற்றி வழிபடுகிறார்கள்.
ஒரு ஆச்சர்யனை மற்றொரு ஆசார்யன் அவரது சிஷ்யனாக மரியாதையோடு போற்றிபடுவது தனியன் என்ற வகை பாடல்.
"ராமானுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யாம் வந்தே வேதாந்த தேசிகம்: ''||
ஸ்ரீமன் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி
வேதாந்தாசார்ய வரியோமே சந்நிததாம் ஸதாஹ்ருதி:
வேதாந்த தேசிகன் எனும் வேங்கடநாத ஆச்சர்யனை, கவிஞர்களுக்கு தர்க்கவாதிகளுக்கு சிம்மமாக இருப்பவரை, ஸ்ரீ ஆத்ரேய ராமானுஜரின் தயை, கருணைக்கு பாத்திரமாக உள்ள
அதே நாமம் கொண்டவரை தண்டனிட்டு வணங்குகிறோம்.''
இது ஒரு தனியன். தேசிகன் மீது. இதை இயற்றியவர் ஸ்ரீ ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர பரகால மட ஜீயர் அதுவும் ஒரு ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்ரம் போது (காஞ்சி வரதராஜ பெருமாளின் நக்ஷத்ரம் அல்லவா). இதைச்சொல்லாமல் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தம் சொல்லும் வழக்கம் முக்கியமாக வட கலையாரிடம் இல்லை.
இன்றைக்கு 750 வருஷங்கள் ஆகிவிட்டது ஸ்ரீ தேசிகன் காஞ்சிக்கு அருகே தூப்புல் கிராமத்தில் ஸ்ரீ அனந்த சூரி தோதாம்பா தம்பதியருக்கு புத்திரனாக பிறந்து.
தேசிகன் தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் பாண்டித்யம் கொண்டவர், பிராகிருதம், மணிப்ரவாளத்திலும் எண்ணற்ற ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறார். அவை ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு ஈடானவை.
தேசிக பிரபந்தம் என்று புகழ் பெற்றவை. சமஸ்க்ரிதத்தில் 2000 ஸ்லோகங்கள் எழுதியவர்.
ஸ்ரீ ரங்கம் , திருப்பதி, கஞ்சி க்ஷேத்ர பெருமாள்களின் மீது பக்தியைப் பிழிந்து ரசமாக தரப்பட்டவை.
நாம் தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலித்தொகை,அந்தாதி போன்ற பல வித அசைகளை ஓசைகளை கொண்ட இசைப் பாக்களைப் போல, வடமொழியில், ஸ்தோத்ரம், கத்யம், தண்டகம் போன்ற பிரிவுகள் உள்ளன. அனைத்திலும் தேசிகர் இயற்றியிருக்கிறார்.
ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் தேசிகர் வசித்தபோது ஒரு போட்டிக் கவிஞன் அவர் மஹிமையை உணராதவன் ஒரு நல்ல காரியம் செய்தான். அவர் இருந்த இடத்திற்கு இரவு வெகுநேரம் கழித்து வந்தவன் கதவைத் தட்டினான்.
''யார்... வாருங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்யட்டும் '' - தேசிகர் கையில் விளக்கொளியில் கேட்டார்..
''ஓஹோ நீர் தான் அந்த வேதாந்த தேசிகனோ?''
''தாசன் அடியேன்''
''நீர் கவித்துவம் கொண்டவர் என்று புகழ்கிறார்களே . சரி நான் சொல்வதன் மேல் ஒரு ஸ்லோகம் உம்மால் இயற்ற முடியுமா?''
''தாசன் அடியேன் தங்கள் சித்தம்''
'' ஹ்ம்ம். ஒரு ஜோடி செருப்பின் மேல் ஒரு ஸ்லோகம் எழுதும். நாளை காலை வருகிறேன்''
அந்த ஆசாமி மறுநாள் காலை சூரியோதயம் ஆனவுடன் வந்துவிட்டான். தேசிகரை திணற அடித்து விட்டோம் என்று பெருமிதம். அந்த ஆசாமி யாரோ. ஆனால் அவரை தான் நாம் எல்லோரும் முதலில் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும். அவரால் தான் நமக்கு ஸ்ரீ தேசிகனின் ''பாதுகா ஸஹஸ்ரம் '' - ஆயிரம் ஸ்லோகங்கள் ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகைமேல் வெள்ளமாக பாடிய ஸ்தோத்திரங்கள் பரிசாக கிடைத்துள்ளது. ஒரே இரவில் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்ட காவியம் அது.
இன்னும் நிறைய பேசுவோம்.
No comments:
Post a Comment