ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மஹா பாரதம்.
'
த்வைத வன வாழ்க்கை '
பாண்டவர்கள் வனவாசம் நமக்கு ஒரு பொக்கிஷம். நிறைய சத் விஷயங்கள், உபதேசங்கள் நமக்கு கிடைக்கப்போகிறதே.
ஜனமேஜயன் நிலைகொள்ளாமல் அவசரத்தில் இருந்தான். அவனுக்கு தனது முன்னோர்கள் நாடிழந்து ஏமாற்றப்பட்டு வனவாசம் சென்றது வருத்தமாக இருந்தது. நல்ல வேளை கிருஷ்ணன் வந்துவிட்டார் அவர்களை பார்க்க. இனி வாழ்க்கை நல்ல படியாக அமையும் என்று சந்தோஷமும் சேர்ந்தது. வைசம்பாயன ரிஷியை துளைத்து எடுத்துவிட்டான்.
''அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லுங்கள் மகரிஷி. கிருஷ்ணன் விஷயங்கள் எல்லாம் தெரிந்துகொண்டானா. என்ன செய்தான் என்று சொல்லுங்கள்?''
'ஜனமேஜயா, கிருஷ்ணன் தான் சால்யனைத்தேடி சென்றதை கிருஷ்ணன் சொல்லி சற்று நிறுத்தியதும் யுதிஷ்டிரன் அவனை நோக்கி
' கிருஷ்ணா, சால்வன் உன்னைக்கண்டதும் பயந்தானா? என வினவினான்..
'' யுதிஷ்டிரா, சால்வன் வரம் பெற்ற சக்திமான். அவனை வெல்வது எவருக்கும் எளிதல்ல என்பது அவனுக்கே தெரியும். அந்த தைரியத்தில் தான் என்னையும் கொல்ல முடியும் என்ற எண்ணம் அவனுக்கு.. சிசுபாலன், ஜராசந்தன் மரணத்துக்கு என்னை பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தான். அவன் முடியும் நேரம் வந்துவிட்டதால் நானே அவனைத் தேடி சென்றேன்.
என்னைக்கண்டதும் சகல ஆயுதங்களோடும் என்னை வென்று கொல்ல நம்பிக்கையோடு வந்தான். அவனது ஆயுதங்களும் சேனையும் அழிந்தது. என்னோடு யுத்தம் தொடர்ந்தது. கடைசியில் அவன் மீது சக்ரத்தை பிரயோகித்து ''சால்வா, இதோடு முடிந்து போ '' என்று சொல்லி அவனை அழித்தேன்.. சக்ரம் அவனை இரு கூறாக பிளந்தது. அப்போதும் அவன் ஒரு கதாயுதத்தை என் மீது வீசி விட்டு தான் சென்றான்.
அவன் வீழ்ந்த பிறகு அவன் படைகள் சிதறி ஓடின. தேரோடு அவனது சௌப தேசத்திற்குள் பிரவேசித்தேன். என்னுடைய பாஞ்சஜன்ய சங்க நாதம் எங்கும் எதிரொலித்தது. அவனது எதிரிகள் மகிழ்ந்தனர். தானவர்கள் அஞ்சி ஓடினர். சால்வனின் நகரம் தீப்பற்றி எரிந்தது. நான் துவாரகைக்கு வெற்றியோடு வந்ததில் அனர்த்தர்களுக்கும் வ்ரிஷ்ணிகளுக்கும் பெரு மகிழ்ச்சி.
மறுபடியும் சொல்கிறேன் யுதிஷ்டிரா. இந்த காரணத்தால் தான் நான் துவாரகையில் இல்லை. ஹஸ்தினாபுரம் செல்லும் சந்தர்ப்பமும் கிட்ட வில்லை. ஒருவேளை நான் ஹஸ்தினாபுரம் வந்திருந்தால் துரியோதனன் உயிரோடு இருந்திருக்கமாட்டானோ என்னவோ? சூதாட்டமும் நடந்திருக்காதோ என்னவோ? இப்போது நான் என்ன செய்ய முடியும் யுதிஷ்டிரா ? சொல்.. அணை உடைந்தபின் வெள்ளத்தை நிறுத்துவது பற்றி என்ன பேச்சு?''
''கேள் ஜனமேஜயா, கிருஷ்ணன் இதெல்லாம் பேசிவிட்டு விடைபெற்று கிளம்பினான். யுதிஷ்டிரன், பீமன் இருவருமே கிருஷ்ணனை ஆரத்தழுவினர். உச்சி முகர்ந்தனர். அர்ஜுனன் ஆசை தீர கண்ணனை அணைத்துக் கொண்டான். நகுல சகாதேவர்கள் கிருஷ்ணனை வணங்கினர். தௌம்யர் கிருஷ்ணனை போற்றிப் பாடினார். திரௌபதி கண்களில் நீரோடு கிருஷ்ணனை விட்டு பிரிய மனமில்லாமல் வணங்கினாள் . அபிமன்யு, சுபத்ரை தேரில் கிருஷ்ணனோடு ஏறினார்கள். கிருஷ்ணன் த்வாரகை திரும்பினான்.
பாண்டவர்களுக்கு பிரயாணிக்க ஒரு ரதம் தயாரானவுடன், தௌம்யர், த்ரௌபதியோடு காட்டினுள் சென்றனர். கிராமவாசிகள் சிலர் பாண்டவர்களோடு சென்றனர். குருஜங்களா என்கிற கிராமத்தில் மக்கள் பாண்டவர்களை வணங்கி மரியாதை செலுத்தினார்கள். ரதம் நின்றது. யுதிஷ்டிரன் அவர்களை வாழ்த்தினான்.
காட்டினுள்ளே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து யுதிஷ்டிரன் சகோதரர்களிடம் - நாம் இந்த காட்டில் தான் பன்னிரண்டு வருடகாலம் வசிக்க வேண்டும். எங்கு மரங்கள், புஷ்பங்கள், கனி, பட்சிகள்,மான் நிறைந்து இருக்கிறதோ அங்கு தங்குவோம். இந்த இடம் பிடிக்கிறதா?'' என்றான் யுதிஷ்டிரன்.
''அண்ணா நீ எங்கு தங்க நினைக்கிறாயோ அங்கு நாங்கள் யாவரும் உன்னோடு தங்குவோம்.
''இதோ இது தான் த்வைதவனம் இங்கு தெளிந்த நீரோடை, புஷ்பங்கள், கனிவகைகள், பட்சிகள், மான் குடும்பங்கள் எல்லாமே நிறைந்திருக்கிறதே' என்றான் அர்ஜுனன். அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் அபரிமிதமான புஷ்பங்கள், கனி வகைகள் இருந்தன. அந்த பிரதேச மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அன்போடு வரவேற்றார்கள் . அந்த வனத்தில் ஒருநாள் ரிஷி மார்க்கண்டேயரும் விஜயம் செய்து பாண்டவர்களோடு தங்கினார். அந்த கானகத்தில் இருந்த சில முனிவர்களும் யோகிகளும் மார்க்கண்டேய ரிஷியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
'முனி ஸ்ரேஷ்டரே, இந்த கானகத்தில் இருக்கும் சில முனிவர்கள், தவசிகள், ரிஷிகள், துறவிகள் எல்லோரும் நாங்கள் நாடிழந்து எல்லாம் துறந்து பன்னிரண்டு வருஷம் இந்த கானகத்தில் வந்து தங்க நேரிட்டதில் துக்கம், வருத்தம் தெரிவித்தார்கள். தாங்கள் மட்டும் மகிழ்ச்சி அடைகிறீர்களே. என்ன காரணம். அதை விளக்கவேண்டும்' என்றான் யுதிஷ்டிரன்.
'காரணம் இருக்கிறது யுதிஷ்டிரா. எனக்கு உன்னையும், உன் சகோதரர்களையும், திரௌபதியையும் பார்க்கும்போது, சாக்ஷாத் ராமன், லக்ஷ்மணன், சீதையோடு காட்டில் ரிஷிகளுக்கு காட்சியளித்தது போன்ற மகிழ்ச்சி தோன்றியது அப்பனே. உன் கஷ்டங்கள் விரைவில் விலகும். நீ மீண்டும் அந்தக் கொடியவர்களை அழித்து உலகப்புகழ் பெற்ற அரசனாகப்போகிறாய்' என்றார் மார்க்கண்டேய ரிஷி.
பாண்டவர்கள் த்வைத வனத்தில் இருப்பதறிந்து எண்ணற்ற பிராமணர்கள் அண்டை ஊர்களிலிருந்து எல்லாம் வந்து அவர்களை
சூழ்ந்து கொண்டார்கள். அங்கிருந்த நதிக்கரையில் ஹோமம்,யாகம் எல்லாம் நடந்தது. வேத சப்தங்கள் ஒலித்தது. தல்விய குல ரிஷி வகர் அந்த வனத்தில் விஜயம் செய்து யுதிஷ்டிரனை வாழ்த்தினார். பிராமணர்களும் அவரை தரிசித்து வணங்கினர்.
ஒருநாள் மாலைப்பொழுதில் யுதிஷ்டிரன் அருகே திரௌபதி அமர்ந்திருந்தபோது அவளுக்கு பழைய நினைவுகள் வந்தது. ''அரசே, இந்த துக்கம் உங்களுக்கும் சகோதரர்களுக்கும் ஏன் வந்தது? பாபியான, துர்புத்தி கொண்ட துரியோதனன் உங்களுக்கு இத்தனை தீமைகள் புரிந்தும் ஏன் தான் செய்தது தவறு என்று உணரவில்லை எப்படி அவன் சுகமாக இருககமுடிகிறது? தர்மிஷ்டர், நியாயவான், பராக்கிரமம் உள்ள நீங்களும் நானும் வனத்தில் சகலமும் துறந்து வாழ வேண்டியது ஏன்? உங்களையும் என்னையும் எத்தனை தகாத வார்த்தைகள் அவர்கள் பேசினார்கள். பாண்டவர்கள் வனவாசம் போகவேண்டும் என்று செய்தி வந்ததும் துரியோதனன், துச்சாதனன், சகுனி, கர்ணன் என்ற இந்த நாலு பேரைத் தவிர, அத்தனைபேரும் கண்ணீர் விட்டு கலங்கினார்களே. . எப்படி அவ்வளவு கல்மனது த்வேஷம் அவர்களுக்கு வந்தது?'' என்று கேட்டாள் திரௌபதி.
''எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. மகாபலியும் அவன் தாத்தா ப்ரஹலாதனும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தனர்."
''எது சிறந்தது மன்னிப்பதா, அல்லது இரக்கமின்றி வீரம், சக்தியை ஒருவன் காட்டுவதா? ''
பிரஹலாதன் சொன்னான்: ''நல்ல கேள்வி கேட்டாய் குழந்தாய். மன்னிப்பது சிறந்த குணம் தான் சந்தேகமே இல்லை. ஆனால் எதையும் மன்னிக்கும் குணம் ஒருவனிடத்தில் இருந்தால் அவனை எளிதில் யாரும் மதிக்கமாட்டார்கள். அவன் சொல் கேளார்கள். இதனால் அவனுக்கு துன்பம் தான் பெருகும். யாரும் அவனுக்கு பணியமாட்டார்கள். தவறுகள் பெருகும். அவன் தான் மன்னித்துவிடுவானே என்று கட்டுப்பாடு இன்றி போய்விடும். எனவே ஒரு கட்டுப்பாடு வேண்டும் மன்னிப்பதற்கும். மன்னிக்காமல் இருந்தாலும் கொடுங்கோலன் என்கிற பெயர் கிடைக்கும். அவனைக்கண்டு அஞ்சுவார்கள். நெருங்கமாட்டார்கள். வெறுப்பார்கள். தனித்திருக்க வேண்டும். அவனது உயிர்க்கு ஆபத்து அதிகம். எனவே அதிக மன்னிக்கும் தன்மையும், அதிகமாக சக்தியை காட்டுதலுமே இரண்டுமே குறைபாடுள்ளது தான். சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு நடப்பதே உசிதம். சந்தர்ப்ப சூழ்நிலையால், அறியாமையினால் தவறு செய்தவனை மன்னிக்கவேண்டும். தெரிந்தே தவறு செய்தவனை தண்டிக்கவேண்டும்''.
" நாதா, கௌரவர்களை, மன்னிப்பது என்பது தவறு. அவர்களை தண்டிக்கவேண்டும். ''
''தேவி, கோபம் மனிதனை அழித்துவிடும். கோபத்தை அடக்குபவன் மேன்மை பெறுகிறான் .கோபம் பல பாபச்செயலுக்கு வித்து. இதனால் தான் கோபத்தை வென்றவன் போற்றப்படுகிறான். அவனே சக்திமான். சக்தியுள்ளவனுக்கு தான் மன்னிப்பது பெருமை தரும். மகா சக்திமானான பீஷ்ம தாத்தா கூட பொறுமை, அமைதியை தான் விரும்புபவர். மகா புத்திசாலியான, வீரனான கிருஷ்ணனும் அமைதியை தான் முதலில் தேர்ந்தெடுப்பான். பீஷ்மன், துரோணர், கிருபர், விதுரன் ஆகியோர் சொல்படி திருதராஷ்டிரனும் அமைதியை நாடி நமது தேசத்தை திரும்ப அளிக்கலாம். அமைதி வழி இல்லையெனில் நாம் அவர்களை அழிப்போம் என்பதில் சந்தேகமில்லை. துரியோதனனைப் பொறுத்தவரை அமைதி விரும்பாதவன். எனவே அவன் அழிவு நிச்சயம்'' என்றான் தர்மன்.
No comments:
Post a Comment