திரு நின்ற ஊரில் ஒரு நிகழ்வு J.K. SIVAN
சேவாலயா -- இப்படி ஒரு நிறுவனம் நிறைய சேவைகளை செய்துக்கொண்டு ஒரு இடத்தில் நிலைத்திருக்கிறது என்றால் நிச்சயம் அது ''திரு'' நின்ற ஊரில் தான் நிலைத்திருக்கவேண்டும் என்று கண்டுபிடித்து சென்றபோது வழி தெரியாமல் தடு மாறவில்லை.
சென்னையிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் கசுவா கிராமத்தில் 2000 குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனமாக செயல்படுகிறது. இலவச நூலகம், மருத்துவ வசதி, இலவச கல்வி, ஒரு சில பசுக்களை வைத்து ஒரு கோசாலை , முதியோர் இல்லம். அனைத்தும் நன்கொடை பெற்று நன்றாக நடத்திவரும் ஒரு நல்ல ஸ்தாபனம்.
ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் அழைக்கப்பட்டு நானும் சில நண்பர்களும் குழந்தைகளை சந்தித்தோம். அவர்களுடன் ஒரு கலந்துரையாடல். சிறிய எளிய வினாடி வினா மஹா பாரத சம்பந்தப்பட்ட ஊர்கள், பெயர்கள் பற்றி கேட்டபோது எனக்கு ஏற்பட்ட ஒரு பேரதிர்ச்சி நிறைய குழந்தைகளுக்கு பாரதம் கதை முழுசாக தெரியவில்லை. பத்தாம் வகுப்பு மாணவி ஒரு பெண் பகவத் கீதை என்றால் என்ன என்று கேட்கும்போது தரை என் காலடியிலிருந்து நழுவியது. எப்படியோ பக்கத்தில் ஸ்ரீனிவாசனை பிடித்துக் கொண்டு நின்றேன்.
ஆசிரியர்கள் ஆசிரியைகள் மதப் பிரச்சாரம் செய்ய தேவையில்லை. இந்தியாவில் வசிக்கும் நமக்கு இந்திய முக்கிய இதிகாசங்களை பற்றி சிறிதாகவாவது குழந்தைகளுக்கு போதிக்க வேண்டாமா. பாடத்தின் இடையே ஒரு சில நிமிஷங்கள் இதற்கு செலவழிக்கலாமே என்று தோன்றியது. நூற்றுக்கு இருநூறு மார்க் வாங்கி எந்த குழந்தையும் வாழ்க்கையில் முன்னேறப்போவது இல்லை. உத்யோகத்துக்கும் கல்விக்கும் உறவில்லாத நிலை மாறினால் தான் அது அவசியம். ஏதோ படித்தேன் நிறைய மார்க் வாங்கினேன் என்று எதையோ படித்ததால் பெற்ற மார்க் போட்ட காகிதத்தை காட்டி என்னவோ வேலையில் சம்பளம் எதில் கூட கிடைக்கும் என்று தேடி அலையும் நிலையில் வாழ்க்கைக்கு என்றும் வழிகாட்டியான நமது இலக்கியங்கள், இதிகாசங்கள் மறக்கடிக்கப்படுவதில் நியாயமில்லை.
இருநூறு குழந்தைகள் பங்கேற்றனர். அனைவருக்கும் விடைகளை கதையாக சொன்னேன். அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளித்தேன். இந்த கலந்துரையாடலில் எல்லா குழந்தைகளுக்கும் நமது இதிகாச நிகழ்வுகளை தெரிந்துகொள்ளும் விருப்பம் முகத்தில் ஜொலித்தது. அவர்களிடத்தில் இதை என்னால் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. பள்ளி நிறுவனம் அனுமதித்தால் வாரம் ஒருமுறை மாதம் இருமுறையோ இலவசமாக கதைகளாக ஒரு மணிநேரமாவது, நாங்கள் அவர்களுக்கு இதை போதிக்க தயார். அதுவும் சேவாலயலத்தில் ஒரு சேவையாக இருக்கட்டுமே!
கோசாலையில் ஒரு பசுவுக்கும் அதன் கன்றுக்கும் பூஜை செய்து நங்கநல்லூர் திரும்பியபோது மனம் நமது கல்விமுறை இனியாவது கொஞ்சம் முன்னேறட்டும் என்று கிருஷ்ணனை வேண்டவைத்தது.
No comments:
Post a Comment