''புத்தரின் போதனை..''. J.K. SIVAN
காருண்ய மூர்த்தி புத்தர் ராஜ வம்சம். சித்தார்த்தன் கௌதமன் என்ற இளவரசன். நேபாளத்தில் லும்பினி கிராமத்தில் பிறந்தான். கபிலவாஸ்துவில் வளர்ந்தான். கி.மு.563ஐ சேர்ந்தவன். பின்னர் மாபெரும் உலகம் போற்றும் துறவி புத்தரானவன்.
அசிதர் என்ற ரிஷி அவன் அப்பா ராஜா சுத்தோதனரிடம் ''மஹாராஜா, உங்கள் மகன் கௌதமன், மிகப்பிரபல சக்ரவர்த்தியாக வருவான். அல்லது சகலமும் துறந்த மிகப் பெரிய துறவியாகவும் ஆகலாம்'' என்றார். ராஜாவுக்கு தனது செல்ல மகன் துறவியாவதில் விருப்பம் இருக்குமா? எனவே அந்த இளவரசன் மிக நேர்த்தியாக அரச போகங்களோடு எந்த குறையும் இன்றி வெளியுலகமே தெரியாதவாறு வளர்க்கப்பட்டவன்.
அப்புறம் நடந்தது தான் நிறைய படித்திருக்கிறோமே.
புத்தரின் பிறந்த நாள் புத்த பூர்ணிமா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மஹாயான புத்த மதத்தினரின் 'தேரவாட த்ரிபிதக' நூல் பிரகாரம் அவர் பிறந்தநாள் புத்த பௌர்ணிமா ஆகும்.
ஒருநாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் பிக்ஷைக்கு சென்றபோது ஒரு வீட்டின் வாசலின் நின்றார்கள்.
''ஏன்யா தடி மாடுகளா, உங்களுக்கு உழைச்சு திங்க வழியா இல்லை. சோம்பேறிகளா பிச்சை எடுக்க வந்து நிக்கிறீங்களே. போங்கடா. '' கதவை படார் என்று சாத்தினாள் அந்த வீட்டு அம்மணி.
ஆனந்தாவுக்கு படு கோபம். ''குருவே எனக்கு உத்தரவு கொடுங்கள் அந்த பெண்ணுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்''
''பேசாமல் வா''. அமைதியாக புத்தர் அவனை அழைத்துக் கொண்டு நடந்தார். சற்று தூரம் நடந்தார்கள்.
''ஆனந்தா, இந்த தண்ணீர் கமண்டலத்தை வைத்துக் கொள்'' இருவரும் சற்று ஓய்வெடுத்துவிட்டு மேலே நடந்தார்கள்.
சிறிது நேரம் கழிந்தது.
''ஆனந்தா உன் கையில் வைத்திருக்கிறாயே தண்ணீர் பாத்திரம் அது யாருடையது?''
''உங்களுடையது தான் குருதேவா''
அதை வாங்கிப் பார்த்த புத்தர் ''ஆனந்தா, இல்லை அப்பனே. இது உனக்கே தான் . நான் தான் இதை நீயே வைத்துக்கொள் என்று உனக்கு பரிசாக கொடுத்துவிட்டேனே ''
ராத்திரி மீண்டும் புத்தர் '' ஆனந்தா இது என்ன, யாருடையது?'' என்று அதே கமண்டலத்தை பார்த்து கேட்டபோது ஆனந்தன் ''குருவே, இது என்னுடையது. எனக்கு உங்களிடமிருந்து பரிசாக வந்தது''
புத்தர் சிரித்தார்.
''குருவே எனக்கு புரியவில்லை. எதற்கு இந்த சிரிப்பு, விளக்குங்களேன்''
''ஆனந்தா, நான் காலையில் கேட்ட போது இந்த கமண்டலம் என்னுடையது என்றாய். இப்போது உன்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி நம் இருவருக்கும் சொந்தமானதாகும்?''
ஆனந்தனுக்கு குழப்பமாயிற்று. புரியவில்லை. புத்தரை கேட்டான்:
''குருவே, நீங்கள் தானே இந்த கமண்டலத்தை எனக்கு பரிசாக கொடுத்தேன் என்கிறீர்கள். நான் பெற்றுக் கொண்டேன். அதனால் என்னுடையது தானே என்று சொன்னேன். முதலில் நீங்கள் என்னிடம் கொடுத்தபோது ''வைத்துக் கொள் '' எனறு மட்டுமே சொன்னதால் அது என்னுடையதாக இல்லை. உங்களுடையதாக மட்டுமே இருந்தது. .அப்புறம் எனக்கு தானமாக வந்தபோது என்னுடையது என்றேன்''
''அப்பனே ஆனந்தாஇதிலிருந்து என்ன புரிகிறது?.
அந்த வீட்டில் அந்த பெண் கோபித்துக் கொண்டபோது ''அந்த வார்த்தைகள் என்னைச் சேர்ந்ததல்ல அவளுடையவை'' என்று நான் கருதியதால் அவளது சொற்களை நான் லக்ஷியம் செய்ய வில்லை
. ஏற்கவில்லை. என்னை நோக்கி வீசப்பட்டாலும் அந்த சுடு சொற்கள் அவளுடையது தானே . அதனால் தான் நீ அவளுக்கு பாடம் கற்பிக்க எந்த அவசியமும் இல்லை . பேசாமல் நடந்து வா'' என்றேன்.
இதில் ஒரு பேருண்மை புதைந்திருக்கிறது. யாரோ உன்னை கடுமையாக திட்டியபோதும் அது உன்னை நோக்கி அல்ல என்று நீ கருதினால் உன்னை அது ஒரு போதும் பாதிக்காது. உன்னைப் பொறுத்தவரை நீ சோம்பேறியோ, வேலையில்லாதவனோ, முட்டாளோ அல்ல. உன் வேலையை, பொறுப்பை உணர்ந்து நீ கண்ணும் கருத்துமாக உழைப்பவன். மற்றவன் சர்டிபிகேட் உனக்கு எதற்கு? அதற்கு மதிப்பு கொடுத்து உள் வாங்கிக்கொண்டால் அல்லவோ உனக்கு ரத்தக் கொதிப்பு,கோபம், வருத்தம் எல்லாம் வருகிறது.
++
ஒருவன் சோம்பேறியாக இருந்தாலும் அவன் மாறுவதற்கு வழி உண்டா? ஒரு கதையை இது விஷயமாக சொல்லட்டுமா?
ஒரு சுறுசுறுப்பான வியாபாரி. கப்பல் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம். பணத்தில் கொழித்தான். போதாத காலம் ஒரு நாள் அவன் கப்பல் சாமான்களோடு புயலில் சிக்கி கடலில் முழுகியது. எல்லா பணமும் போய் ஓட்டாண்டியானான். கடன் நெருக்கவே எல்லாவற்றையும் விற்று பறி கொடுத்து பிச்சைக்காரனானான்.ஐந்து வருஷ காலம் புரட்டி எடுத்துவிட்டது அவனை.
கஷ்டப்பட்டு முன்னேறினான். மீண்டும் ரெண்டு கப்பல் வாங்கினான். முன்னிலும் அதிக பணக்காரனாக வளர்ந்தான். எல்லோரும் அவனை அணுகினார்கள். எப்படியடா மீண்டு வந்தாய்? என கேட்டார்கள்.
''என் வியாபாரம் தோல்வியை சந்தித்தது என்று தானே சொன்னேன். நானா தோல்வியடைந்தேன்? இழந்த வியாபாரத்தை மீண்டும் நிலைநிறுத்தினேன்'' என்றான்.
தோல்வி வெற்றி, இகழ்ச்சி, புகழ்ச்சி, ஒருவனை உள்ளே ஆட்கொள்ளக் கூடாது. இடம் கொடுத்தால், ஆசாமியை சாப்பிடுட்டுவிடும். தைர்யம், மனஉறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கையோடு கலந்த ஈஸ்வர பக்தி இருந்தால் எவனுமே எதற்குமே கலங்கவேண்டியதில்லை. பிறரின் போற்றலோ ,தூற்றலோ லக்ஷியம் பண்ண வேண்டிய
தில்லை.
No comments:
Post a Comment