Thursday, September 20, 2018

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர்    J.K. SIVAN 









திருநாளைப்போவார் (நந்தனார்)


                           சற்றே  விலகி இரும் பிள்ளாய் 

சீர்காழி,  வைத்தீஸ்வரன் கோவில்  போன்ற அற்புத க்ஷேத்ரங்களுக்கு  நான்  சென்ற போதெல்லாம், வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து  ரெண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புங்கூர்  என்கிற அருமையான  எளிய  கிராமம் செல்ல தவறுவதில்லை.  ஒரு காலத்தில்  புங்க மரங்கள் சூழ்ந்திருந்த பிரதேசம் என்பதால்  திருப்புங்கூர். அங்கே  கிராமப்பாதையில் ஒரு பழைய  ஆயிரமாண்டு  சிவாலயம் கலியுக கைலாசமாக காட்சி தருகிறது.  அங்கே மூலவர்  சிவலோக நாதர், அம்பாள்  சௌந்தர நாயகி.

சில  வார்த்தைகள்  வழக்கத்தில் இருந்து  மறைந்து விட்டது  நன்மைக்கே.  தீண்டத்
தகாதவன், தாழ்ந்த குலத்தோன்  என்கிற வார்த்தைகள்  ஜாதிகளை குறிப்
பிட்டன.   (பறையன்  எனும் சொல்  பறை என்ற  தோல் வாத்தியத்தை தயாரித்து உபயோகிப்பவர்கள்  என்றும் பொருள்)   உபயோகத்திலிருந்து அழிந்து விட்டன.  யாரையும் புண்படுத்தும் வார்த்தைகள் இங்கே  தேவையில்லை.   அப்படி ஒரு குலத்தில்  ஆதனூர் என்ற சோழ தேசத்தில் ஒருவர் பிறந்தார். சிவன் மீது அலாதி பிரியம்  தீவிர பக்தி.   பல சிவாலயங்கள் ஊர்  ஊராக சென்றார். அங்கெல்லாம்  பறை  வாத்தியங்களை அளித்தார். கோவில் நைவேத்திய அபிஷேக காலங்களில் வாசிக்கும்  தோல்  வாத்தியங்கள் இவை.  தாழ்ந்த குலத்தோர் ஆலய பிரவேசம் பண்ண இயலாதகாலம் என்பதால் வாசலில் இருந்தே தரிசனம் செய்வார்.  மனதால் சிவனோடு இணைவார்.  ஒரு முறை  திருப்புன்கூர் சிவனை தரிசனம் செய்ய  ஆவல் மேலிட்டு சென்றார். வெளியே  ஆலய  வாயிலிருந்து கொடிமரம் வழியாக  மூலவர் தரிசனம் செய்ய  முன்னோர்கள் பல கோவில்களில் ஏற்பாடு செய்திருக்கிறார்களே.  ஆனால்  அந்த ஆலயத்தில்  சிவதரிசனம் பண்ண வழியில்லை.  எதிரே இருக்கும்  பெரிய  நந்தி   சிவலிங்கத்தை மறைத்து கொண்டு அமர்ந்திருந்தது. 

''பரமேஸ்வரா, இது என்ன  சோதனை, உன்னை தரிசிக்க  முடியாதபடி உன் எதிரே  உன்னை மறைத்துக்கொண்டு  மலை போல  ஒரு  மாடு படுத்துக்கொண்டிருக்கி
றதே''  என்று கதறினார்.  

சிவன் நந்திதேவரை நோக்கி  ''என் அருமை  நந்திகேஸ்வரா , சற்றே  விலகி இரும் பிள்ளாய்'' என்கிறார். அடுத்த கணமே நந்தி சற்று  வலது  புறம் நகர்ந்து  வழி விட்டது.  எங்கோ பின்னால்  தூரத்தில் நின்றுகொண்டிருந்த  சிவபக்தர்  கண்குளிர  சிவலோகநாதனை தரிசனம் செய்தார். அவர் பெயர்   நந்தனார். அந்த கோவில் வாசலில் ஒரு குளம் வெட்டி  வைத்துவிட்டு ஆதனூர் திரும்பினார். 

சிதம்பர நடன சபேசனை   காண ஆர்வம்.  எப்படியும்   உள்ளே போகமுடியாது.  வெளியே இருந்தாவது அவனை நினைத்து  த்யானம் பண்ணலாமே. கோபுரத்தில்  மூல விக்ரஹம்  உருவத்தை  சுதையிலோ கல்லிலோ வடித்து  வைப்பது  இப்படி தூர இருந்து காணவே தான்.    ''நாளைக்கு சிதம்பரம் போகப்  போகிறேன் '' என்ற  எண்ணம் சொல்லாக  எல்லோரிடத்திலும் சொல்ல வைத்தாலும்   பல நாட்கள் கழிந்தும் அவரால் ஆதனூரை விட்டு நகர முடியவில்லை.  

பரமேசா, உன்னை  சபாபதியாக  நடன சபேசனாக காணும்  ஆசை  என் குலத்தால்
நிறைவேற வழியில்லாமல் செய்துவிட்டதே.   நான்  உன்னிடம் வரமுடியாவிட்டாலும்  நீ  என்னிடம் வருவாயா சிவா?''  கண்களில் நீர் ஆறாக ஓட  ஏக்கம் உள்ளத்தில் பொங்கியது.  துக்கம் தொண்டை அடைத்தது.''   விடாமல்  இந்த சிவ தரிசன  தாகம் நிறைவேறாமல் வாட்ட  நாள் மாதமாகியது. 

நடராஜனால் பொறுக்க முடியவில்லை. நந்தனை தன்னோடு இணைத்துக்கொள்ள சங்கல்பித்தான்.   நந்தனார் கனவில் ஒருநாள்  சிவன் தோன்றி  '' என் பிரிய நந்தா, வருந்தாதே. என்னிடம் வா. அக்னியில் ஸ்னானம் செய்து  விட்டு என் கனகசபைக்கு வா. உன்னோடு  தில்லை அந்தணர்களும் வருவார்கள்.  சிவனை கனவில் கண்டு  அவன்  வா  என்று  அழைத்ததால்   ஆனந்தத்தில்  சிவனை விட  ஜோராக  தாண்டவமாடினார்  நந்தனார்.  மறுநாள் சிதம்பரம் கிளம்பினார். 

இதற்கிடையில்  நடனசபாபதி தில்லை மூவாயிர தீட்சிதர்கள் கனவில் தோன்றி ''
தீக்ஷிதர்களே, என் பரம பக்தன் திருநாளைப்போவார் என்பவன் நாளை  தில்லை வருகிறான். அவனுக்கென்று  ஒரு  புனித  ஸ்நானம் ஏற்பாடு செய்து என்னிடம் சகல மரியாதைகளோடு அழைத்து வாருங்கள் '' என்று கட்டளையிட்டான்.   தீட்சிதர்கள்  ஆச்சர்யம் மேலிட்டு மறுநாள் பொழுது விடிய காத்திருந்தார்கள்.  யார்  இந்த  பரம பக்தன் அவனை நிச்சயம் தக்க மரியாதையோடு நடராஜனிடம் அழைத்து செல்லவேண்டும் என்று தில்லை ஆலய வாசலில் காத்திருந்தார்கள். நந்தனார்  ஆடிக்கொண்டே பாடிக்கொண்டே  வந்தார்.  எதிரே  ஒரு  அக்னி குழி வெட்டி  தக தக வென்று  அக்னி  ஜ்வாலை தஹித்தது.  

உமாமஹேஸ்வரனை  பஜித்தவாறு  அக்னியை வலம்  வந்து நந்தனார்  தீக்குழியில் இறங்கினார். அடுத்த கணமே  பொன்னார் மேனியாக  இன்னொரு   சிவனாக பளபளக்கும்  மேனியில்  பால் வெண்ணீருடன் , ஜடா தாரியாக வெளியேற அனைவரும் அவன் தாளில் விழுந்து வணங்க,  முப்புரிநூல் அணிந்த வேதியனாக  மற்ற தீக்ஷிதர்கள் புடைசூழ கனகசபாபதியை  தரிசனம்  செய்தார். கண்ணார  முக்கண்ணனை கண்டு களித்தார். பளிச்சென்று  ஒரு பேரொளி  நடராஜனிடமிருந்து எழுந்து வந்து  நந்தனாரை போர்த்தியது. வந்தவேகத்தில் அந்த பேரொளியில் கலந்து நந்தனார்  நடேசனின் ஐக்கியமானார்.    ''ஆஹா பரமேஸ்வரா,  ஹர ஹர மகாதேவா ''  என்ற  பக்தர்களின் குரல்  வெகுநேரம் ஆலயத்தில்  டாண்  டாண்   என்ற  ஆலயமணியோடு கலந்து ஒலித்தது...   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...