Wednesday, September 12, 2018

oru arpudha gnani



ஒரு அற்புத ஞானி     J.K. SIVAN 
சேஷாத்திரி ஸ்வாமிகள்

                   

    மனக்கண்ணாடி.
இன்று  ஸ்வாமிகளை அனுபவித்த பலபேர் அனுபவம் வரிசையாக சொல்கிறேன்.

வக்கீல்செங்கல்வராயனுக்கு ஒரு நாள் காலை தான் சந்நியாசி ஆகிவிடவேண்டும் என்ற முடிவெடுக்க தோன்றியதால் வேலை, வீடு,  குடும்பம் எல்லாம்  உதறித் தள்ளி விட்டு  நேராக   சிதம்பரம் சென்றார். அங்கு  ஒரு பெரியவரை அடைந்து சன்யாசியானார்.  தனக்கு ஒரு சரியான குரு வேண்டுமென்று திருவண்ணாமலைக்கு நடந்தார்.. அவர்  முருக உபாசகன். கம்பத்திளையனார் சன்னிநிதியில் மூன்று நாள்  முருக பெருமாள் அந்தாதி பாடி நான்காவது நாள் உபவாசம் இருந்த போது  சேஷாத்திரி ஸ்வாமிகள் அங்கே வந்தார்.
செங்கல்வராயன் எழுந்து அவரை வணங்கியபோது  தானாகவே  ஸ்வாமிகள் 

''அப்பா,  ஏன் பட்டினி இன்னிக்கி? '' என்று பாசத்தோடு கேட்டார். செங்கல்வராயனுக்கு அதிர்ச்சி. தான் உபவாசம் இருப்பதை  ஸ்வாமிகள்  எப்படி  அறிந்தார்?.  ஸ்வாமிகள் காலைபிடித்து கொண்டார்.

 ''அதோ பார். இங்கேயே  தான்  நீ இனிமேலே '' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் கை  சுட்டிக் காட்டியது  உள்ளே  கர்பகிரஹத்தில்  நின்ற  முருகனை. அன்று  முதல் செங்கல்வராயன் ஸ்வாமிகளை  முருகனாகவும், ஞானகுருவாகவும்  ஏற்று அங்கேயே தங்கி முருகன் மேல் பாடல்கள் பாடத்  தொடங்கினார்.

ஒருநாள்  செங்கல்வராயன்  ஸ்வாமிகள் சடைச்சி அம்மாள்  வீட்டு திண்ணையில் இருக்கிறார் என்று அறிந்து ஓடினார். அங்கே சிவப்பிரகாச முதலியார் அவர் மனைவி ஆகியோரும் இருந்தனர். எதிர்த்த வீட்டில் புரோகிதம்  சுப்பராமய்யர் மனைவியைக்   கண்டார்.  ஒரு பழைய ஞாபகம் வந்தது.  ஒருமுறை அந்த அம்மாள் வறுமையால் வாடி  தனது  15வயதில்  வாழ்க்கையை  வெறுத்து   தூக்குக்கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு  வீல் என்று கத்தினாள். அருகே இருந்தவர்கள்  போலீஸ் எல்லாமே வந்து அவளைக் காப்பாற்றினார்கள் . போலீஸ் அவள் மேல் வழக்கு போட்டது. செங்கல்வராயன் தான் அவளுக்காக வாதாடி ஜெயித்து கொடுத்தார்.

பல வருஷங்களுக்கு பிறகு அவளை பார்த்தபோது அந்த ஞாபகம் வந்தது.

செங்கல்வராயன்  ஸ்வாமிகளை அடைந்தபோது  அங்கே   அவர் சிவப்பிரகாச முதலியார் மனைவிடம் ''ஒரு பொண்ணு கழுத்திலே கயிற்றை மாட்டிண்டு  கீ கீ  ன்னு கத்தி, போலீஸ் வந்து கயத்தை அறுத்தான்.  ஆனா  பெரிய  கேஸ்.நடந்தது.'' என்று சொல்லிக் கொண்டே  செங்கல்வராயனைப் பார்த்து  '' உனக்கு அந்த பொண்ணை தெரியுமா, பேர் தெரியுமோ?'' என்று சிரித்தார்.   செங்கல்வராயன் சிலையாகி நின்றார். எப்படி தனது   மனதில் ஓடின எண்ணத்தை ஸ்வாமிகள் அப்படியே  படம் பிடித்த மாதிரி அவர்களிடம் சொல்கிறார்?

மற்றொருநாள்  செங்கல்வராயனிடம் பேசும்போது   ''நீ வாலாஜா பேட்டை  அப்பாயி தானே டா?''  என்று கேட்டார்.  செங்கல்வராயனின் அப்பா அம்மாவைத் தவிர  வேறு யாருக்கும் அவர்  வாலாஜாபேட்டையை சேர்ந்தவர், சின்னவயசில் அவரை அப்பாயி  என்று தான் கூப்பிடுவார்கள் என்று தெரியாதே'' . 

ஸ்வாமிகளின்  எல்லோர் மனதையும்  அறியும் சக்தி அபாரம்  ஆயிற்றே.

பாவம்,   ரத்தினவேலு முதலியார் தன்னுடைய  பழைய வீட்டை  விற்று மேற்கொண்டு கடன் வாங்கி  திருவண்ணாமலையில்  ஜவுளி வியாபாரம் ஆரம்பித்ததில் பெருத்த நஷ்டம். மனிதருக்கு  பைத்தியமே பிடித்து விட்டது. மனோ வியாதியால் அவதிப் பட்ட போது  ஒருநாள்  சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்தார்.

''பணம் போனா மனம் போயிடும்.  ஞானம் வந்தா மனம் சரியாயிடும்''  என்று  எதிர் பாராத விதமாக அவரது நிலையை அறிந்து வழி சொன்னார். முதலியார் அதற்குப் பிறகு  ஞான மார்க்கத்தில் ஈடுபட்டார். மனம் நிம்மதி பெற்றது.   .

இது மாதிரி தான் சோமசுந்தர சாமியாருக்கு ஒரு அனுபவம்.  அவர் குமாரமங்கலம் மடத்தில் இருந்தவர். ''சே  என்ன வாழ்க்கை இது, சன்யாசியாய் ஆகியும் குடும்ப பற்று விடவில்லையே என்ற குறை ''.  ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து திருவண்ணாமலை அடைந்தவர்  சேஷாத்திரி ஸ்வாமிகளை பார்த்துவிட்டார். வணங்கினார். ஸ்வாமிகள் குழந்தையை போல கையில்  ஒரு சிறு கருங்கல்லை வைத்து தூக்கிப்போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

சாமியாரைப் பார்த்ததும் '' ஹும் , ஞானம் அடைவது தான் மேல். எல்லாவற்றையும் தலையை சுற்றி எறியவேண்டும் '' என்று எங்கோ பார்த்து சொல்லிக்கொண்டே கையிலிருந்த கல்லை தனது தலையை சுற்றி தூர எறிந்துவிட்டு சென்றார். சாமியாருக்கு  தான் செய்யவேண்டியது என்ன என்று இதற்கு மேல் யார் சொல்லித் தருவார்கள்?

கருப்பண்ண சாமி என்று ஒரு யோகி அப்போது திருவண்ணாமலையில் இருந்தார்.   வெறும் பச்சை தழைகளை மட்டுமே தின்று ஜீவித்திருந்தார். திருவண்ணாமலையில்  அவரை பச்சிலை சாமி என்று தான் அறிவார்கள்.  எப்போதாவது தேங்காய்  கிடைத்தால் அதுவும் பிடிக்கும். ஒருநாள் தழைகளோ  தேங்காயோ  இல்லை.  நேராக  சேஷாத்திரி ஸ்வாமிகளைத் தேடி அலைந்தார். அவரிடம் யாரவது தேங்காய் பிரசாதம் கொடுப்பார்கள் அது கிடைக்குமே  என்று வந்தவர். சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவரைப் பார்த்து விட்டார்.   அவரிடம் சென்று      
 ''கோபாலன் தேங்கா  கடைக்கு போ '' என்று  விரட்டி விட்டார்.  சாமியார்  மார்க்கெட்டில்  கோபாலன் தேங்காய் கடையை தேடி கண்டு பிடித்தபோது அங்கே  அந்த கடைக்காரர்  ஒரு தட்டில் ரெண்டு தேங்காய், வெற்றிலை, பழம் எல்லாம் வைத்து யாரையோ தேடிக் கொண்டிருந்தார். அன்று யாருக்கோ  அதை அளிக்க பிரார்த்தனை.   யாரும் தென்படவில்லையே  யாருக்கு தரலாம் என்று கவலை கொண்டபோது எதிரே பச்சிலை சாமியார் வந்து நின்றது  ஆச்சரியமாக போய்விட்டது. அவரை வணங்கி தேங்காய் பழம் வெற்றிலை எல்லாம் நிறைய அளித்தார். பசியாக வந்த கருப்பண்ண சாமிக்கு  அன்று  ஏகபோக விருந்து அல்லவா அது!.   

டீ. .ஆர்.  சுப்ரமணிய  சாஸ்திரிகள் சம்ஸ்க்ருத பண்டிதர்.  எல்லோரும்  அவரை  ராஜு வாத்யார்  என்பார்கள். அவர் ஒரு நாள் தனது சிஷ்யனுக்கு   மாகம்,  சிசுபாலவாதம் என்ற சம்ஸ்க்ரித  காவியம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அதில் ஒரு  பதம்   ''காயமானம் '' என்று இருந்தது.  அதற்கு என்ன அர்த்தம் என்று சிஷ்யன் கேட்க, அவர்  கூடாரம்,  என்று சொன்னார்.  காயமானம்  என்கிற கடின பதத்தை விட  சிபிரம் , படக்ரஹம்  என்கிற  பதங்களை  தான் வழக்கமாக உபயோகிப்பார்கள். காயமானம் அதிகம் பழக்கத்தில் இல்லாத சொல்.

இப்படி இவர் சொல்லிக் கொண்டிருந்த போது  அவர் வீட்டு வாசலில் தெருவில்  சேஷாத்திரி ஸ்வாமிகள் போய்க்கொண்டிருந்தார்.  திண்ணையிலிருந்த சாஸ்திரிகள் ஓடிப்போய் அவரை வணங்கி  ''சுவாமி, கூடாரம் என்ற சொல்லுக்கு  சமஸ்க்ரித பதம் என்ன '' என்று கேட்டார்.  அவரைப் பொறுத்தவரை  ஸ்வாமிகளை  சோதனை செய்ய அவர் செய்த முயற்சி அது.  அவருக்கு தெரிகிறதா பார்க்கலாம் என்று சோதனை செய்ய எண்ணம்.

ஸ்வாமிகள் மறு கணமே  அவரைப்பார்த்து  ''போ, அது காயமானம்''  என்று சொல்லிவிட்டு  சென்றார். சாஸ்திரிகள் ஸ்வாமிகளின் ஞானத்தை வியந்து அவர் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து வணங்கி நின்றார்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...