Sunday, September 16, 2018

radhashtami

17.09.2018 -- இன்று ராதாஷ்டமி J.K. SIVAN

எப்படி கிருஷ்ணாஷ்டமி கொண்டாடுகிறோமே அதற்கு எந்த விதத்திலும் குறையில்லாமல் கொண்டாட வேண்டிய ஒரு புனித நாள் ராதாஷ்டமி . ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லை. ஏற்கனவே பலமுறை ரசித்து சொல்லியிருக்கிறேனே. ராதா கிருஷ்ணா என்கிற ஆங்கில வார்த்தையில் RADHAKRISHNA -- முதல் எழுத்து R ஐ எடுத்து விட்டால் கிருஷ்ணனே பாதியாகத்தான் ADHAAKRISHNAN ஆக குறைந்து போகிறான் என்று விளங்க வில்லையா. அதுவுமன்றி ராதா RADHA உருது மாதிரி வலது-இடமாக படித்தால் AADHAR ஆகிவிடுகிறது. ராதா தான் கிருஷ்ணனுக்கே ஆதாரம். லோகநாயகனையே சுழல வைக்கும் ஆதார சக்தி ராதா. அவளைப் பற்றி கொள்ளை கொள்ளையாக சொல்லலாம். எழுதலாம். ராதாவும கிருஷ்ணனும் ஒன்று என்பதால் தானோ ரெண்டு பேருக்குமே அஷ்டமி பிறந்ததினம். சத்தியத்தின் ஆணுருவம் கிருஷ்ணன் என்றால் பெண் உருவம் ராதா. கிருஷ்ணனின் பிரதம பரம பக்தை. கிருஷ்ணனின் சர்வ சக்தி.
புராணம் சொல்வதை பார்த்தால் ஸ்ரீ லக்ஷ்மியும் ராதாவும் நாராயணனின் வலது இடது பக்கத்திலிருந்து உருவாகி லட்சுமி 4 கரம் கொண்ட விஷ்ணுவை கணவனாக வேண்டி பெற்றாள். ராதா ரெண்டு கை கொண்டவனை வேண்டியதால் கிருஷ்ணனை அடைந்தாள். விஷ்ணு வைகுண்டத்தில் லக்ஷ்மியோடு இருக்கும்போது கிருஷ்ணன் கோலோகத்தில் ராதாவோடு. லட்சுமி செல்வத்திற்கு அதிபதி. ராதை பேரன்புக்கும் ப்ரேமைக்கும் புனித பக்திக்கும் அதிபதி.
கௌடிய வைஷ்ணவர்கள் அரைநாள் உபவாசம். பலர் முழுநாள் ஏகாதசி விரதம் போல அனுஷ்டிக்கிறார்கள்.சிலர் நிர்ஜல ஏகாதசி விரதம் . தண்ணீர் கூட கிட்டே வரக்கூடாது. .

அப்படிப்பட்ட ராதா இன்று பிறந்தாள் .யுகங்களுக்கு முன்னால் . இன்று அவளை நினைப்போம். சில அஷ்டபதிகள் பாடுவோம். கிருஷ்ணனை நினைப்போம். அஷ்டபதி தான் பாடவேண்டும் என்றில்லை. கண்ணதாசனின் ''ராதையின் மோகனம்'' கூட பாடலாம். ராதாவை பற்றி அநேக எண்ணற்ற சுவையான பாடல்கள் உள்ளனவே. ஊத்துக்காடு எங்கே போனார். அவரின் பாடல்கள். முண்டாசு பாரதியார்..... எவ்வளவோ பேர் கிருஷ்ணனை நினைக்கும்போது ராதையும் கிருஷ்ணன் நிழலாக பாட்டில் கலந்திருக்கிறாளே .

ராதாவை நினைப்பதே கிருஷ்ணனை நினப்பதாகுமே. உலகமுழுதும் ISKCON கோவில்கள் இந்த நன்னாளைக் கொண்டாடுகிறது. . இன்று ராதாவின் தாமரைப் பாதங்களை எண்ணற்ற கிருஷ்ண பக்தர்கள் கண்டு தரிசித்து மகிழ்கிறார்கள். இன்று ஒரு நாள் மட்டுமே. மற்ற நாட்களில் அந்த பொற்பாதங்களை மறைத்து வைக்கிறார்கள்.

ராதாவும் கிருஷ்ணனும் எப்படி பழகினார்கள் என்று ஒரு கற்பனை......

சிலு சிலு வென்று யமுனையின் குளிர்ந்த காற்று வீசி தென்றலை இடைவிடாது தெளித்துக்கொண்டிருந்தது. அந்த காற்று சும்மா வரவில்லை. வரும் வழியில் மனோரஞ்சிதம் மலர்களின் ஊடே பாய்ந்து அவற்றின் நறுமணத்தை நிரப்பிக் கொண்டு தாழைப்புதரில் இருந்து வந்த தாழம்பூ வாசனையை அதோடு கலந்து, மல்லிகைப் பந்தல் கோபித்துக் கொள்ளப் போகிறதே என்று பயந்து அதன் மொட்டுகளில் இருந்து வாசனையையும் கலந்து அந்த மகிழமரத்தின் அடியில் இருந்த இருவர் மீது அபிஷேகம் செய்தது.

' என் விருந்தாளிகளாக இவர்கள் என் நிழலில் அமர்ந்திருக்கும்போது என்ன தைரியம் இருந்தால் ஏ , காற்றே, மற்ற மலர்களின் மணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இவர்கள் அபிஷேகிக்க வந்தாய். நில் கொஞ்சம் என் மகிழம்பூ மலரையும் தருகிறேன் அதையும் கலந்து அவர்கள் மேல் வீசு'' என்றது. அந்த இருவரோ ஒருவரை ஒருவர் பாராமல் திரும்பி அமர்ந்து கொண்டிருந்தனர்.பேச்சு மட்டும் வந்தது.

''நீ ஏன் நான் கூப்பிட்டு வரவில்லை?
''நீ கூப்பிடும்போது எல்லாம் நான் ஓடி உன்னிடம் வரவேண்டுமா?''
''ஆமாம், அது தான் எனக்கு பிடிக்கும்''
'' எனக்கும் தான் பிடிக்கும். ஆனால் எனக்கு வேலை இருந்ததே''
'' என்ன வேலை அப்படி?''
'' எத்தனையோ வேலை, உனக்கு தான் என்னை கூப்பிடுவதைத் தவிர வேறு வேலையே யில்லை?''
'' உனக்கு என்னிடம் வர மனமில்லை என்று சொல்லேன். ஏன் சுற்றி வளைக்கிறாய்?''
''போ போ உனக்கு பதில் சொல்ல எனக்கு சக்தியில்லை. நீ எதையும் புரிந்து கொள்பவன் அல்ல.''
''எனக்கு நீ வேண்டுமே?''
''எனக்கும் தான். அதற்காக?''
'' நான் கூப்பிட்டபோது வரவில்லை என்றால் நீ என்னை மதிக்க வில்லை என்றுதானே அர்த்தம்?''
'' கிருஷ்ணா, உன்னை நினைத்துத் தானே நான் உருகுகிறேன். என் கடமை என்னை கட்டிப்போட்டிருக்கிறதே என்ன செய்ய?''
''இதோ பார் ராதா, உன்னைத் தவிர நான் வேறு யாரிடமாவது உரிமை கொண்டாடி இருக்கிறேனா? அது எதைக் காட்டுகிறது?''
''புரிகிறது கிருஷ்ணா. உன் பிரேமை என் பிரேமைக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.''
'' அதனால் தான் எனக்கு உன்னிடம் பிரேமை உண்டானதே.''
'' நாம் பழகுவதற்கு முன்னால் என்னிடம் பேசியிருக்கிறாயா?''
'' பார்க்கும்போது எல்லாம் பேசியிருக்கிறேனே?''
'' எப்போதெல்லாம் என்னை பார்த்தாய்?''
'' நீ என்னை சந்தித்த போதெல்லாம் தான். உன் பிரேமை உன்னிடம் என் பிரேமை என்னிடம் என்றா இருந்தோம்?
'கிருஷ்ணா. இந்த ராதை எப்போது தன் கிருஷ்ணனை சந்திக்க வேண்டும் எப்போது பேசவேண்டும் என்று தனக்கே தெரியாதவள் , ஏனெனில் எப்போதும் அவள நினைவிலேயே அவன் தான் குடிகொண்டிருக்கிறானே''
''ஒ. அது எனக்கு தெரியுமே.''
''ஆமாம் கிருஷ்ணா உனக்கு தான் எல்லாமே தெரியும். நான் பம்பரம் நீ தானே என்னை சுற்றி விட்டு ஆடவைக்கிறாய்.''
''இந்தா நான் ஆசை ஆசையாக உனக்காகஅவசரமாக செய்த இந்த பக்ஷணங்களை சாப்பிடு''
'' நான் கேட்டு தானே நீ கொண்டு வந்தாய்.''
'' நான் எதை செய்யும்போதும் சாப்பிடும்போதும் அது எப்போதும் உன்னை நினைத்து தானே, தனியாக எதற்கு கொண்டுவரவேண்டும்.?''
'' கொண்டுவந்ததால் தானே நீ செய்த பக்ஷணம் ருசி அனுபவிக்க முடிகிறது.
சரி சரி எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுகொண்டிருக்கிறேனே. நீயும் கொஞ்சம் சாப்பிடு இதில். நீ சாப்பிட்டால் நான் சாப்பிட்ட மாதிரி இல்லையா. ''

ராதா தான் செய்த தின்பண்டத்தை தன வாயில் போட்டுக்கொண்டு வெளியே உமிழ்ந்தாள். கலகலவென்று சிரித்தாள் ''

''ஏன் சிரிக்கிறாய் ராதா?''
' கிருஷ்ணா உனக்கு சீக்கிரம் கொண்டுவந்து தரவேண்டும் என்று அவசரம் அவசரமாக உன் நினைவிலேயே இதை செய்தேனா, சர்க்கரைக்கு பதில் நிறைய உப்பை மாற்றி போட்டுவிட்டேன் கண்ணா. என் மனம் என் வயம் இல்லை. அதுசரி நீ எப்படி இத்தனை நேரம் இதை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாய் ?' பாதிக்கு மேல் சாப்பிட்டிருக்கிறாயே !'
'' என் பழக்கம் அது ராதா, யார் எனக்கு எதை அளித்தாலும் கொடுத்தவர்களின் மனத்தை தான் பார்க்கிறேன். மணத்தையோ, ருசியையோ பார்ப்பதில்லையே. உன் மனத்தின் இனிமை நீ போட மறந்த சர்க்கரையின் இனிப்பைவிட ருசித்ததே.''

''ராதா, ஒ ராதா....... சொந்தம் என நீ நினைத்தால் நான் எப்போதோ உன் சொந்தம் ஆகிவிட்டேன் என்பதை உணர்வாய். . இதில் நேரம் காலம், குலம், வயது எதற்குமே இடமில்லை. மனம் ஒன்று பட்டால் மற்ற தொன்றும் இல்லை என்று நீ அடிக்கடி சொல்வாயே. நீயே மறந்துவிட்டாயா?

ராதாகிருஷ்ணன் படம் முன்பு ஒரு சிறு தீபமாக ஏற்றிவைத்து கண்ணை மூடி ராதா-கிருஷ்ணனை நினையுங்கள் உங்கள் முன்பு தோன்றுவார்கள். மனம் நிம்மதி பெரும். இது அனுபவம் பேசும் வார்த்தை. குழந்தை ராதாவின் படம் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...