பேசும் தெய்வம் J.K. SIVAN
ஆச்சார்யர் ஆசிரியரிடம் கற்ற ஸ்தலம்.
மளிகைக்கடையில் மஞ்சள் பொடி வாங்க ஒருவன் நடந்து போய் கொண்டிருக்கிறான். எதிரே ஒரு பெரிய கூட்டம் வருகிறது. அதன் நடுவே ஒரு யானை. அதன் தும்பிக்கையில் ஒரு மாலை. அவன் ஒதுங்கி ஒரு வீட்டு நிழலில் தெருவோரம் நின்று வேடிக்கை பார்க்கிறான். கூட்டம் செல்லட்டும் அப்புறம் கடைக்கு போகலாம்.
யானை திடீரென்று கூட்டத்தை விட்டு விலகி தெருவோரமாக வந்து அங்கே ஒதுங்கி நிற்கும் அந்த மனிதன் கழுத்தில் மாலையிட்டு அந்த ஊர் சம்பிரதாயப்படி அவன் அடுத்த மஹாராஜாவாகிறான்.
இந்த கற்பனை எதற்கு?
அவனுக்கு ராஜாவாக ஏதோ அதிர்ஷ்டம் அடித்ததற்கா?
அவன் உண்மையிலேயே ராஜகுமாரனா?
யானைக்கும் அவனுக்கும் ஏதோ சம்திங் உடன்பாடா?
இல்லை. அவன் செய்த பூர்வ ஜென்ம கர்மாவின் பலன்.
தெய்வீகம் நிறைந்த பெரிய மஹான் ஒருவர் எல்லோரையும் போல பிறந்து சிறுவனாக ஒரு பள்ளிக்கூடத்தில் படித்தார். அப்பா அம்மாவுடன் வாழ்ந்தார். பன்னிரண்டு வயதில் எதற்கு எங்கே போகிறோம் என்றே தெரியாமல் அம்மாவுடன் காஞ்சி மடம் சென்றார். அங்கிருந்து கலவைக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரன் பீடாதிபதியாக இருந்த இடம் சென்றார். அங்கே தானே அடுத்த காஞ்சி காமகோடி பீடாதிபதியாகும்போது, மகா பெரியவாளுக்கு வயது 13.
கும்பகோணம் மடத்தில் பெரியவா இருந்தபோது அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அலைமோதி நாளுக்கு நாள் அதிகரித்தது. வேத பாடங்களைக் கற்றுக்கொள்ள அவருக்கு அங்கே நேரம் போதவில்லை. மடத்து பெரியவர்கள் யோசித்து முசிறி- தொட்டியம் சாலையில், காவிரியின் வடகரையில் அமைதியான மஹேந்திரமங்கலம் கிராமத்தில் அவரைத் தங்கவைத்து கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.
10-ஆம் நூற்றாண்டில், பல்லவன் மகேந்திரவர்மன், இந்தக் கிராமத்தை தனது பெயரில் நிர்மாணித்து வேத பிராமணர்களுக்கு தானம் (சதுர் வேதி மங்கலம் ) அளித்ததாக கல்வெட்டுகள் சொல்கிறது. எனவே மஹேந்திர மங்கலத்தில் சிவாலயம், ரொம்ப பெரிதாக இருந்திருக்கிறது. தில்லைநாதன் என்ற இந்த ஊர் சிவனுக்கு பரிசு இந்த மஹேந்திர மங்கலம் என்று கல்வெட்டு புரியாத தமிழில் சொல்கிறது.
பக்கத்தில் ஸ்ரீநிவாசநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு விஷ்ணு கோவில். ரெண்டு கோவில்களும் சோழன் கட்டியது. மகேந்திரமங்கலம் ஒரு யுத்த பூமியாக கூட இருந்திருக்கிறது.
மஹா பெரியவா சிறுவராக இருந்த காலத்தில் மஹேந்திர மங்கல பாடசாலையில் மூன்று வருஷம் வேதங்களைக் கற்றார் (1911 -1914). ஒரே வித்யாசம். இங்கே மாணவரை ஆசிரியர்கள் வணங்கி பாடம் கற்றுக்கொடுத்தார்கள் .
பீடாதிபதி, ஜகத்குரு அல்லவா அந்த சிறுவர்?). இந்த மகோன்னத பாடசாலையை
ஸ்ரீரங்கம் குவளக்குடி சிங்கமய்யங்கார் என்பவர் ஒரு காலத்தில் நிர்வகித்தார்.
முதல் மாடியில் வேத பாடசாலை. அந்தக் கட்டிடத்தை வேறெந்தக் காரியத்துக்கும் பயன்படுத்தக்கூடாது எனக் கல்லில் சாசனம் எழுதி, பத்திரப் பதிவாளர் அலுவலகத் திலும் பதிவு செய்துள்ளார் அய்யங்கார். இன்றும் அந்த வேத பாடசாலையை அவர் குடும்பத்தார் நிர்வகித்தனர்.
காஞ்சிப் பெரியவா, இங்கிருந்தபோது ஒரு துளசிச் செடி நட்டு வளர்த்தாராம். அதனைத் தினமும் வழிபட்டுவிட்டுத்தான், வேதம் கற்பாராம். அந்தத் துளசிச் செடியை இன்றைக்கும் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த இடத்தின் அருகே 50-60 வருஷம் முன்பு ஒருவர் நிலம் வாங்கி செங்கல் சூளை போட தோண்டியபோது ஆலயம் பெரிதாக புதைந்திருப்பது தெரிந்தது. சிதிலமான நந்தி முகம் தென்பட்டது.
அந்தக் களத்து மேட்டிலேயே சிவலிங்கத்தையும் நந்தியையும் வெளியே எடுத்து வைத்தார்கள். 1960 வாக்கில் மகா பெரியவா இங்கே வந்தார்.
''பகவான் இப்படி கூரை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் இருக்காரே’ என வருந்தி சின்னதாக ஒரு கோவில் கட்டலாமே'' என்றார். அருகே உள்ள ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் தரிசனத்துக்கு வேகமாக ஆயிரம் படிகளை மளமளவென்று ஏறுவார்.
மஹேந்திர மங்கலம் புனித க்ஷேத்ரம். ஆதிசங்கரே தரிசித்த சிவன் இங்கே இருக்கிறாரே. மஹாபெரியவா பிரதிஷ்டை செய்த ஆதி சங்கரரை தீர்த்த படித்துறை போகும் பாதையில் மடத்தில் தரிசிக்கலாம். சங்கரர் பக்கத்திலேயே மகா பெரியவாளுக்கும் விக்ரஹம் பிரதிஷ்டை செய்தவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். சந்திர மௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அவசியம் சென்று பார்க்கவேண்டிய ஒரு ஆலயம். மஹா பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ண முக்கியமான இடம் அல்லவா?
No comments:
Post a Comment