Monday, September 10, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

ஸ்வாமிகள் ஒரு ஆபத் பாந்தவன்
சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு அற்புத ஞானி என்று சொல்வதில் யாதொரு சந்தேகமுமில்லை.

திருவண்ணாமலை எஸ். பரசுராமய்யர் ஒரு சேஷாத்திரி சுவாமி பக்தர். அவர் பெண் மணமாகி வில்லிபுத்தூரில் இருந்தாள். 1926ல் அவள் பிரசவித்த பின் நோய்வாய்ப்பட்டு நிலைமை மோசமாகி மரணமடைந்து விடுவாள் என்று பெரிய வைத்தியர்கள் கூட கை விட்டுவிட்டார்கள். மாப்பிள்ளை ' பெண் பிழைப்பது அரிது. உடனே கடைசி முழிக்கு வரவும்'' என்று தந்தி அடித்து விட்டான். பரசுராமய்யரும் மனைவியும் துடித்தார்கள். அழுதார்கள். உடனே கிளம்பவேண்டும் என்றாள் தாய். அய்யர் கண்ணீர் மல்க குருநாதன் சேஷாத்திரி ஸ்வாமிகளைத் தேடி அலைந்தார். ஸ்வாமிகள் எங்கே எந்த ரூபத்தில் இருப்பார் என்பது ப்ரம்ம ரஹஸ்யம். ஒருவரையும் கிட்டே அண்ட விட மாட்டார். சில பேரை தானாகவே தேடி சென்று அருள்வார். சில பேரை திரும்பிக்கூட பார்க்கமாட்டார். அவரவர் அதிர்ஷ்டம். புண்ய பலன். ஆகவே பரசுராமய்யர் ஸ்வாமிகளை கம்பத்திளையனார் கோவிலில் பார்த்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவரிடம் ஒரு விபூதி ப்ரசாதமாவது வாங்கி பெண்ணுக்கு இட வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டு தான் வந்தார்.

அவரைப் பார்த்த ஸ்வாமிகள் ஏன் இப்படி பேசுகிறார்:

''டேய் வீட்டில் அந்த பேமானி எதற்கு அழுகிறாள். பைத்தியக்காரி. போ போ ஒண்ணுமில்லாததற்கா இப்படி அழுகை. ஒண்ணுமில்லையே. சரியாப்போச்சே எல்லாம் தான்''

பரசுராமய்யர் அவரை நெருங்கி நமஸ்கரித்து ஒன்றும் சொல்லுவதற்கு முன்பே இவ்வாறு சொல்லி விட்டு ஸ்வாமிகள் அங்கிருந்து பஞ்சாய் பறந்து விட்டார். இனி அவரை பிடிப்பது குதிரைக்கொம்பு.

பரசுராமய்யர் பரவசமானார். நேராக வீட்டுக்கு ஓடினார். மனைவியிடம் நடந்ததை சொன்னார். அந்த அம்மாள் கொஞ்சம் சமாதானமாகி அழுகை நின்றது. இருவரும் வில்லிப் புத்தூர் போகவில்லை. ரெண்டாவது நாள் போஸ்ட் கார்ட் வந்தது. ''வர வேண்டாம். உடம்பு குணமாகி வீடு வந்து சௌக்கியமாக இருக்கிறாள்'' என்று.

பெரிய பெரிய பெரிய டாக்டர் சொன்னதற்குப் பின் அப்பீல் ஏது?

++

ஸ்வாமிகள் சர்வ ஞானி. தன்னை நம்பிய, வேண்டிக்கொண்ட பக்தர்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கி றார்
என்பதற்கு இன்னொரு சம்பவம் சொல்கிறேன்.

கே. கிருஷ்ணய்யர் ஒரு சிவில் கான்டராக்ட் எடுத்து வேலை செய்து பிழைப்பவர். திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமி பக்தர். அடிக்கடி ஸ்வாமிகளை தரிசனம் செய்பவர். அவருக்கு நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை பிடித்து மதுராந்தகம், சென்னை என்றெல்லாம் சென்று பெரிய வேலை தேட எண்ணம். ஸ்வாமிகளை ஒருநாள் கண்டு பேச முடிந்தபோது தனது எண்ணத்தை சொன்னார். அவருக்கு கிடைத்த அறிவுரை என்ன தெரியுமா?

''முட்டாள், எங்கேயும் போகாதே. இங்கேயே ஒழுங்கா வேலை பார்த்து பிழை'' -- ஸ்வாமிகள்.

கிருஷ்ணய்யருக்கு எப்படியாவது மற்ற மாநிலங்கள் சென்று வேலைக்கு கான்டராக்ட் பிடித்து நிறைய பணம் சம்பாதிக்கும் கனவு கலையவில்லை. ஸ்வாமிகள் அறிவுரையை அவர் கேட்காதபடி அவர் ஆசை தடுத்துவிட்டது. நேராக மதுராந்தகம் சென்னை என்று பல இடங்கள் அலைந்து ஒன்றும் சரியான வேலை கிடைக்காமல், சேர்த்த பணம் எல்லாம் செலவாகி, ஓட்டாண்டியாக திரும்பினார். ஸ்வாமிகளை பார்த்தவுடன் அய்யர் ஒன்றும் சொல்லாத போதே, ஸ்வாமிகள் 'வா வா வந்தியா. பட்டாதான் தெரியுமா உனக்கு ''என்று ஒருவார்த்தை சொல்லிவிட்டு மேலே எதுவும் பேசவில்லை. இப்படி அவர் பேசுவது சம்பந்தா சம்பந்தமில்லை போல தோன்றினாலும் எந்த விஷயத்தை மனதில் நினைத்துக்கொண்டு அவரை அணுகினார்களோ அவர்களுக்கு நன்றாக புரியும்.

1926ல் கன்டராக்டர் கிருஷ்ணய்யர் தனது வேலையிலே கொஞ்சம் அசிரத்தையாக இருந்தார். அரசாங்க வேலை கான்டராக்ட் எடுத்து செய்யும் பொறுப்பான வேலை. மேலதிகாரி வெள்ளைக்காரன். அய்யர் பொறுப்பாக வேலை செய்வதில்லை, என்று கேள்விப்பட்டு ஒருநாள் திடீர் விஜயம் செயது அவர் ஸ்தலத்தில் வேலை செய்யாமல் இருந்தால் கையும் களவுமாக பிடித்து வேலையிலிருந்து அப்போதே நீக்குவது கான்டராக்ட்டை ரத்து செய்வது என்று முடிவெடுத்து அதே போல் வேலை நடக்கும் இடம் செல்ல அலுவலத்திலிருந்து கிளம்பி விட்டார்.

கிருஷ்ணய்யர் அந்த நேரம் ஸ்வாமிகள் முன்பு கை கட்டி நின்று கொண்டிருந்தார். ஸ்வாமிகள் அவரைப் பார்த்து ''ஓடு நிக்காதே. அங்கே போ சீக்கிரம்'' என்று ஈசான்ய தெருப்பக்கம் கை காட்டினார். ' அந்த பக்கத்தில் தான் சற்று தூரத்தில் கிருஷ்ணய்யர் காட்டராக்ட் குத்தகை எடுத்து வேலை செயது கொண்டிருக்கும் இடம் இருந்தது. மறுவார்த்தை பேசாமல் கிருஷ்ணய்யர் ஸ்தலத்துக்கு ஓடி வேலையை கவனித்தார். சில நிமிஷங்களில் வெள்ளைக்கார மேலதிகாரி அங்கே வந்து விட்டான். அவர் செய்த வேலைகளை மேற் பார்வை இட்டவன் ''நன்றாக வேலை நடக்கிறது'' என்று நல்ல வகையில் ரிப்போர்ட் எழுதினான்.

ஸ்வாமிகள் சொல்படி கேட்காமல் அங்கேயே நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். வேலை போயிருக்கும் அவ்வளவு தானே.....!


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...