Friday, September 7, 2018

RASA NISHYANTHINI



ரஸ  நிஷ்யந்தினி --                                 
    J.K SIVAN  
பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் .

                 ''இனி  என் முகத்தில் விழிக்காதே  ''

இது வரை  ரஸ நிஷ்யந்தினியில்  ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் விஸ்வாமித்ரராக  உருவெடுத்து  ராமனின்  75  கல்யாண குணங்களை எடுத்துக் காட்டி அவன் நீ நினைப்பது போல் சாதாரண மானுட சிறுவன் அல்ல என்று தசரதருக்கு உபதேசித்து அவரது ஞானக்கண்ணை திறக்கிறார்.  இந்த ரஸ நிஷ்யந்தினி  ப்ரவசனத்தை  நாம் நேரில் கேட்க பாக்யம் செய்யாதவர்கள் என்றாலும் படித்து அந்த தத்வ நீரூற்றின் சாறை பருகுகிறோம். இன்னும் இருபத்தைந்து பாக்கி வைத்திருக்கிறேன்.  ஆனால் அதற்கு முன்  இந்த அற்புத ப்ரவசனத்தை தனது குருநாதர் முன்பாக முதன் முதலில் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் உபன்யாசம் செய்தபோது அந்த மன்னார் குடி பெரியவா ஸ்ரீ ராஜு சாஸ்திரிகள்,   எவ்வளவு புளகாங்கிதம் அடைந்திருப்பார். தனது சிஷ்யனின் அருமையை எப்படி ரசித்து மகிழ்ந்திருப்பார் என்று ஒரு கணம் சிந்திப்போம்.  எப்படி  குருநாதரின் பரிபூர்ண ஆசிர்வாதம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு கிடைத்திருக்கும்.! அதன் விவரம் தான் இன்று.  இந்த விஷயத்தை நான் பருத்தியூர் க்ரிஷ்ணசாஸ்திரிகளின் கொள்ளு பேரன் ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி  அவர்கள் அம்மன் குரலில் எழுதியதை  படித்து சாராம்சம் அறிந்து மகிழ்ந்தேன். என் வழியில் உங்களுக்கு தருகிறேன். 

பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்திரிகளுக்கு  ரெண்டு அற்புதமான குருமார்கள் அமைந்தது ஸ்ரீ ராமனின்  ஆசிர்வாதம்.  சேங்காலிபுரம் ஸ்ரீ முத்தண்ணா விடம் கல்வி பயின்று அவர் உபதேசித்த   ''ஸ்ரீ ராம ஷடாக்ஷரி''  யை பெற்று  பன்னிரெண்டாம் வயதில்  மருதா நல்லூர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிகளிடம் ஸ்ரீ ராம தாரக மந்திர உபதேசம் பெற்றார். பிறகு  என்ன.  ஸ்ரீ ராமநாமம் தான் மூச்சு. சதா ராம ஜபம். 

தர்க்க ஸாஸ்த்ரம் கற்பதற்கு ஸ்ரீ தியாகராஜ மஹி  என புகழ்கொண்ட மன்னார்குடி ஸ்ரீ ராஜு சாஸ்திரிகளை தேடி சென்றார்.  சாஸ்திரிகளை மன்னார்குடி பெரியவா என்று மஹாபெரியவாளே போற்றுவார். அப்பய்ய தீக்ஷிதர் வம்சம்.  தமிழ்நாட்டில் மஹாமஹோபாத்யாய என்ற பட்டத்தை வெள்ளைக்காரன் காலத்தில் முதலில் பெற்றவர் ராஜு சாஸ்திரிகள். தனது வீட்டில் சிஷ்யர்களுக்கு குருகுலமாக போதித்துவந்தார். கல்வி உணவு இருக்க இடம் எல்லாமே குரு தந்தப்பது சிஷ்யர்களுக்கு என்ன குறை?   சிஷ்யர்கள் சரியாக படிக்கவில்லை, மனனம் செய்யவில்லை,  பாடம் சரியாக கற்கவில்லை, என்றால் மஹா கோபம்.  இப்படி யாராவது இந்த காலத்தில் ஆசிரியரை 
பார்க்க முடியுமா?

சமீபத்தில் தமிழகத்தில் எங்கோ ,   பகவான் என்று ஒரு நல்ல ஆசிரியரை அதிகாரிகள் வேறு ஊர் பள்ளிக்கு மாற்றல் செய்து,  அவர் அந்த ஊரை விட்டு போகும்போது  பள்ளி மாணவ மாணவிகள் அழுதுகொண்டே அவரை கிராமத்தை விட்டு நகரவிடாமல் தடுத்து விஷயம் அதிகாரிகளை அடைந்து அவர் அந்த ஊரிலிலேயே இருக்க உத்தரவிட்டார்கள் என்று செயதித் தாளில் படித்தபோது,  வெகுகாலத்திற்கு பிறகு  செய்தித்தாள்  மன நிறைவை தந்தது. 

ராஜு சாஸ்திரிகளின்  கோபத்திற்கு அஞ்சி,  மாணவர்கள் நன்றாக படித்தார்கள். கிருஷ்ண சாஸ்திரிகள் ராஜு சாஸ்திரிகளிடம் பாடம் கற்றுக்கொண்டிருந்தபோதும் கூட மனம் ஸ்ரீ ராம நாமத்தில் லயித்திருந்தது. 

ஆசிரியர் ராஜு சாஸ்திரிகள் ஒருநாள் பாடம் நடத்தும்போது ஒரு இடத்தில் இங்கு ஒரு சந்தேகம் வரும் என்று சற்று  நிறுத்தினார். மாணவர்கள் எல்லோரும் என்ன சந்தேகமாக அது இருக்கும் என்று யோசிக்கும்போது  அந்த சந்தேகம் என்ன என்பதை கிருஷ்ண சாஸ்திரிகள் பட்டென்று கூறினார்.  ஆசிரியர் சொல்ல காத்திருக்கவில்லை.  ''ஆம்  அது தான் '' என்று  குருவும் ஒப்புக் கொள்வார். 

''எப்படிடா கிருஷ்ணா உனக்கு எல்லாம் தெரிந்தது?  எங்கு மற்ற  மாணவர்கள் அதிசயிக்கும்போது  
''எனக்கென்ன தெரியும்.  ஏதோ தானாகவே மனதில் தோன்றியது '' என்பார்.  அவர் மனதில் தான் நவவியாகர்ண பண்டிதன் ஹனுமான் அவரோடு  சேர்ந்து ராமநாமத்தை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கிறானே! அவனுக்கு தெரியாத விஷயமா?  . அவன் மூலம்  கிருஷ்ண சாஸ்திரிகள் வெளியிட்டிருக்கிறார்!  

கிருஷ்ண சாஸ்த்ரிகள்  பாமணி ஆற்றுக்கரை சுந்தரேஸ்வரர் சந்நிதியில் காலையில் ஸ்ரீ ராம ஜபம்..  மாலையில் சந்தியாவந்தனம் முடிந்து  பிள்ளையார் கோவில் குளம் அருகே  வெண்ணெய் தாழி மண்டபத்தில் பிறையில் உள்ள   சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியில் எதிரில் அமர்ந்து   ராம நாம ஜபம்.

ஒருநாள் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  ராஜு சாஸ்திரிகள் ''பிள்ளைகளே  நாளைக்கு நெருடலான பாடம். இன்னின்ன கிரந்தங்களில் இந்தந்த இடத்தை நன்றாக படித்துவிடுங்கள். நான் நாளை காலை வகுப்பில் சித்தாந்தம் சொல்லும்போது புரிந்து கொள்ள தயாராக இருங்கள் '' என்கிறார்.  எல்லா மாணவர்களும் முடிந்தவரை நன்றாக இரவெல்லாம் படிக்க,  கிருஷ்ண சாஸ்திரிகள் வழக்கம்போல் ராம நாம ஜெபத்தோடு சரி.

மறுநாள் காலை  குரு அந்த நெருடலான  கிரந்தங்களில் விஷய வாக்கியம் இது தான் என்று விளக்க  ஆரம்பிக்கிறார். ஒரு வாக்கியம் கூட சரியாக முடியவில்லை.... அதற்குள் ....

கிருஷ்ண சாஸ்திரி எழுந்து கை கட்டிக்கொண்டு ''அதை இப்படி சொன்னாலென்ன''  என்று  தானே  விளக்கம் கொடுக்கிறார். 

குரு ராஜு சாஸ்திரி கோபாக்னியோடு  ''அதிகப்ரசங்கி, போ வெளியே, இனி என் முகத்தில் விழிக்காதே'' என்று விரட்டுகிறார்.    எல்லோருக்கும்  அதிர்ச்சி.   கிருஷ்ண சாஸ்திரிகளின் சக மாணவன், நண்பன்  பைங்காநாடு  கணபதி சாஸ்திரிகள்  மெதுவாக '' கிருஷ்ணா, நீ  எப்பது எங்கே அதையெல்லாம் படித்தாய்?''

''கணபதி, நான் எங்கேடா அதெல்லாம் படித்தேன். குருநாதர் சொல்லும்போது அவரை கவனித்தபோது  அவர் சொல்ல முயல்வதெல்லாம் ஏற்கனவே எனக்கு  தெரிந்து நன்றாக பரிச்சயமாக இருப்பது போல் தோன்றுகிறதே.   எனக்கு தெரிந்தததை  எப்படி அழகாக சொல்கிறார் என்று ரசித்தேன்.  என்னையறியாமல் அவர் பேச்சை நிறுத்தியபோது  அவர் சொல்ல  வேண்டியதை,  அவர் சொல்லுமுன் நானே சொன்னேன்.  அவர் என்னை அதிகப்ரசங்கி என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டார். பள்ளியை விட்டு விரட்டிவிட்டாரே''.

அப்புறம்  ராஜு சாஸ்திரிகளிடம் கிருஷ்ண சாஸ்திரிகள்  செல்லவில்லை. நேராக வெண்ணைத்தாழி மண்டபம் சென்றார். ராமநாம ஜெபம்.  மன்னார்குடி  ராஜகோபால சுவாமி சந்நிதியில் தரிசனம்.  ஹரித்ரா நதி  வடகரையில் சேது பாவா சுவாமி மடத்தில்  ராமதாஸ சரித்திரம் பிரவசனம் கேட்டுவிட்டு. ஆகாரமில்லாமல் அங்கேயே அன்றிரவு  உறக்கம்.  மறுநாள் காலையில்  ஹரித்ரா நதி ஸ்னானம். பிறகு மடத்தில் ராமாயண பாராயணம் ஆரம்பித்தார்.  ''ராவண வதம் முடிந்து  அயோத்தி திரும்பும் முன் பாரத்வாஜ ஆஸ்ரமத்தில் விருந்து ''.  இது  தான் அன்று பாராயணம்.  அதை கேட்ட அந்த மடாதிபதி க்ரிஷ்ணசாஸ்திரியை அங்கேயே தங்க வைத்து தினமும் பாராயணம்பிரவசனம்  செய்ய சொல்கிறார்.  பாராயணம் முடிந்தபின் நேராக மூன்று மைல்  நடந்து அக்ரஹாரத்தில் ராஜு சாஸ்திரிகள் இல்லத்திற்கு வாசலில் விழுந்து நமஸ்காரம் செய்தபின்  மறுநாள்  முதல் ராமாயண பிரவசனம் தொடர்ந்தது. 
இனி கிருஷ்ண சாஸ்திரிகள் சிறந்த ராமாயண ப்ரவசன கர்த்தாவாக அவதாரம் எடுத்து விட்டார். 
கேட்டவர்கள் தேன் குடித்தவர்களாக  கூட்டம் சேர்ந்தனர்.  மன்னார்குடியே  மயங்கியது. எங்கும் கிருஷ்ண சாஸ்திரி புகழ்.  தினமும்  கிருஷ்ண சாஸ்த்ரி தனது குருநாதர் மன்னார்குடி பெரியவா ராஜு சாஸ்திரிகள் வீட்டு வாசலில்  நின்று  நமஸ்காரம் செய்வது நிற்கவில்லை.  பைங்காநாடு கணபதி சாஸ்திரி மூலம் கிருஷ்ண சாஸ்திரி அற்புதமாக ராமாயண பிரவசனம் செய்வது அறிந்த குருநாதர் தானே நேரில் சென்று மடத்தில் பிரவசனம் கேட்க எண்ணம் கொண்டார் என்று அறிந்த கிருஷ்ண ஸாஸ்த்ரி  ரொம்ப  அதிசயிக்கிறார்.  அடாடா,  இப்படியா ஆசைப்படுகிறார் குருநாதர்''

நேராகவே தான் வந்து குருவின் எண்ணத்தை பூர்த்தி செய்ய ஆவலானார்.    குருநாதர் ராஜு ஸாஸ்த்ரி வீட்டு  வாசலில் பெரிய பந்தல். பெரிய கும்பல் ஜேஜே என்று கூட்டம். முதலில் குருவுக்கு  சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபின் ''குருநாதா நீங்கள் வீட்டு முற்றத்திலே இருந்து கண்டு கேளுங்கள். நீங்கள் எதிரே இருந்தால்  ஒரு அக்ஷரம் கூட எனக்கு வெளியே வராது'' என்று பவ்யமாக மரியாதையோடு சொல்லி அவ்வாறே அவர் மகிழ்ந்து ஒப்புக்கொண்டு கேட்க  அன்று அப்போது உதயமானது  ''ரஸ நிஷ்யந்தினி"  பிரவசனம். இனி அடுத்த மீதி 25 திவ்ய ராம  மஹத்வம் தொடர்வோம்.



1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...