Monday, September 24, 2018

KAVERI'S GRIEF




                      இது தான் எனக்கு நன்றிக்கடனா?
                                                    J.K. SIVAN 


இரவு நிசப்தம். மேலே  முழு நிலவு. அவளது ரசிகன் சந்திரன்.  அவளைப்பார்த்துக்கொண்டே இருப்பான். காற்றில் அவன் அவளை ரசிப்பதை எத்தனையோ  பேர்  கவனித்து  மனதை  கோட்டை விட்டிருக்கிறார்கள்.
வெகு காலமாக  அவளருகே  இருந்த  ஒரு  மண்டபம் பேசியது.
உனக்கு  சங்கீதம்  பிடிக்குமா?  
என்னிலிருந்து  உண்டான சங்கீதம்  தான்  நான் வளர்த்த  என் பிள்ளைகள் பாடினார்கள், பாடுகிறார்கள்.  இப்படியா ஒரு கேள்வி என்னிடம்.
இல்லை நான்  ஒரு சங்கீத நாத பிரம்மத்தோடு  சம்பந்தப்பட்டவன் என்பதால்  கேட்டேன்.
ஓஹோ  அந்த தெலுங்கு பிராமணனா?  எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தேடிய  ராமன்  என்னிடம் கிடைத்து  ஒரு நாள்  ஜாக்கிரதையாக மீட்டு கொடுத்தவள்.என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். தினமும்  அவர் எனக்கு பாடி காட்டுவார்,   நிறைய  கேட்டு  மகிழ்ந்தவள். இன்னமும் நிறையவே அவர் பாட்டுகளை இங்கே கேட்டுக்கொண்டிருக்கிறேனே.

'அம்மா  நீ  என்னைவிட பெரும் பாக்கியசாலி'' என்றது மண்டபம். 
''உனக்கு என்ன வயது, என்றும் இளைமையாக இருக்கிறாயே?''.
''என் வயதை  நான் நினைத்ததே இல்லை''.
''எப்படி  இங்கே வந்தாய், எப்போது வந்தாய் அம்மா?''
''நான் இந்த ஊர்  இல்லை.  மேற்கு பக்கம்.   மலைகளில் திரிந்து ஓடுவேன். சுதந்திரமாக இருந்தவளை ஒரு குள்ள ரிஷி பிடித்து வைத்துக்கொண்டார்.  என்னை தவிக்க விட்டார்.  நல்லவேளை  எனக்கு பிள்ளையாளரை ரொம்ப பிடிக்கும்.  எப்போதும் என் பக்கம் நிறைய இருப்பார்.  அவரை  வேண்டினேன். மெதுவாக  அந்த  ரிஷியிடம் இருந்து தப்பிக்க வைத்தார்.  ஒரே ஓட்டம்.  வந்த வேகத்தில் மலைமேல் இருந்து  ஒரு சில பள்ளங்களில் ஓ வென்று விழுந்தேன்.'' 
''அப்புறம் என்ன ஆயிற்று?''
''நான் சாமர்த்தியக்காரி.  நெளிந்து நெளிந்து  ஓடி தப்பி அங்கங்கு இருப்பது போல் பாவலா காட்டி என் காதலன்  சமுத்ரராஜனை தேடி ஓடினேன்
''ஹும்''   என்று பெருமூச்சு விட்டு   நிறுத்தினாள்  அந்த அழகு கிழவி. 
''ஏன் பெருமூச்சு?  என்ன ஆயிற்று?''
''என்னை தடுக்க எத்தனையோ பேரின்  முயற்சி. என் காதலனை,   லட்சிய புருஷனை, கடலரசனை,  நான்   அடைவதில் இவர்களுக்கு என்ன கஷ்டமோ. நான் தான் நிறைய அவர்களுக்கும் உதவினேன்.  சாப்பாடு  போட்டுக்கொண்டு தானே இன்றும்  சேவை செய்கிறேன். ஒருநாளா ரெண்டுநாளா.  நான்  அவர்களுக்கு மட்டும் '' என்ற  நினைப்பு  எல்லோரிடமும் இருக்கிறது.  
''நான்  எல்லாருக்கும் சொந்தமடா  உனக்கு மட்டும் இல்லை '' என்று பலமுறை எதிர்ப்பு காட்டினேன்.  என்னை தடுத்த போதும்  கோபம் கொண்டு சீறினேன்,   தடையை மீறி ஓடினேன்.  அடங்குகிறார்கள் அப்போது தான்''.
''எல்லாமே தனக்கே  வேண்டும்  என்று  ஏன் இப்படி  ஒரு எண்ணம்  சே சே. நான்  என் மக்கள் எல்லோருக்கும்  தாய். அவர்களை விடாமல் சந்திப்பேன் உதவுவேன். காப்பாற்றுவேன்.'' 

ஒரு காலத்தில் ஒரு சோழ ராஜா  புத்திசாலி என் பலத்தை தெரிந்து கொண்டு  என் எண்ணத்தை புரிந்து கொண்டு என் காதலன் சமுத்ரராஜனை நான் அடையாமல் பெரிதாக ஒரு சுவர் எடுத்து  சிறையெடுத்தான். என் பலம் அவனுக்கு தெரியும்  அவன்  நல்ல குழந்தை. எனக்கு அவனை பிடிக்கும். என்னை தாயே  என்று வணங்குவான். அவனை,  அவன் ராஜ்யத்தில் எல்லோர்களையும் நான் சுபிக்ஷமாக இருக்க வசதி செய்தவள்.''

''உனக்கு என்ன பிடிக்கும் தாயே?''

''நான் மண் பைத்தியம். மண் பிடிக்கும்.  ஆனால்  ..''... கிழவி கண்ணில்  நீர்.

''என் குழந்தைகள்  எனக்கே  துரோகம் செய்யும்போது எனக்கு  நெஞ்சு வெடிக்கிறது.  என் ஒரே செயல் ஓடுவது. அதை நிற்க வைப்பது என்ன நியாயம்?. என் செல்வத்தை என்னிடமிருந்து பிரிக்க   ஏன் தான் புத்தி போகிறதோ?

''தாயே  இன்னுமா உனக்கு வருத்தம்?''

''ஆமாம்  இரவிலும் பகலிலும்  இந்த துரோகம் எனக்கு  நடந்தால் எனக்கு பிடிக்குமா?''.........................

காவிரி அன்னை  திருவையாறு  தியாகராஜ சுவாமி ஆராதனை மண்டப படித்துறையில்  அதோடு தன் எண்ணத்தை பரிமாறிக்கொண்டது  எப்படி என் காதில் விழுந்தது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...